Wednesday, March 27, 2013

நதியின் பெயர் கொண்டோடும் ரயில்

மேனியிலிடும் சித்திரவித்தையின்
துகிலிகை ஓட்டத்திற்கு
தன் கூச்சத்தைப் பழகக் கொடுத்த
முதல் நாளை நினைத்துப் பார்க்கிறாள்
அயல்தேசத்து நடனக்காரி

தூரதேசப் பிரயாணம் போகிறவர்களின்
வீடுகளில் நாய்க்குத் துணையாக 
வயோதிகர்கள்
காவல் இருக்கிறார்கள்.

அடுக்ககங்களின்
கழிவுநீரை மறுசுழற்சி செய்து
தோட்டம் வளர்க்கும் திட்டத்திற்கு
எதிர்ப்பு வாக்குகள் முதலில் பதிவாகின்றன

எந்நேரமும் கஞ்சா புகை மிதக்கும்
கருவேலம்புதரை இன்னும் 
நந்தவனம் என்று தான் அழைக்கிறார்கள்

முன்பு பசியாற்றிக் கொண்டிருந்த
விளைநிலத்தில் மலம் கக்கிச் செல்லும்
அதிவேக ரயிலுக்கு 
நதியின் பெயரைச் சூட்டி
வேடிக்கை பார்க்கிறது காலம் !

******

Thursday, March 14, 2013

தமிழ் சினிமா கனவுக்கன்னிகள்


(வர வர எழுதுறதெல்லாம் ரொம்ப ஹெவியா இருக்குன்னு சொன்னவனுக்காக, கொஞ்சம் லைட் வெயிட்டா... )

சமகால தமிழ் சமுதாயம் மட்டுமில்லை, ஃபிலிம் தோன்றி சி.டி தோன்றா காலத்திலிருந்தே நம் ரசிகக் கண்மணிகளுக்கு திரையுலக கனவுக்கன்னிகள் மேலுள்ள ஈர்ப்பு சொல்லி மாளாது. தங்களது பிரிய நாயகிகளை பர்ஸுக்குள் பக்குவமாய் பாஸ்போர்ட் சைஸில் பதுக்குவதிலிருந்து, கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது வரை இவர்களது பிரேமத்தின் வெளிப்பாடுகள் ஆயிரமாயிரம். ஆனாலும் மற்ற விஷயங்களில் எப்படியோ நாயகிகளை ரசிப்பதில் எப்போதும் நம்மாட்கள் கம்யூனிஸ்ட்கள் தாம். கனவுக்கன்னி என்று ஒருவரை மனதுக்குள் பட்டா போட்டு மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தாலும் ஏனைய பிற நடிகைகளுக்கும் அதில் தனித்தனி அறை கொடுத்து போற்றி வருவார்கள். 

அது எப்படி ஒருத்தியை நினைத்த மனதில் மற்றொருத்தியை குடிவைப்பது என்ற குற்றவுணர்ச்சி எல்லாம் கன்றாவி காதலோடு நிறுத்தி வைத்து யோசித்துப் பார்த்தால், நம் ரசிகர்களின் தாராளமயமாக்கல் கொள்கையை புரிந்து கொள்ள முடியும். சரோஜாதேவி, பத்மினி என்று மெயின்ஸ்ட்ரீமில் சென்று கொண்டிருக்கும் போதே எம்.என்.ராஜம், சி.ஐ.டி.சகுந்தலா என்று பிரத்யேக விருப்பப்பட்ட்டியலை விநோதமாய் வைத்திருந்த ரசிக சிகாமணிகளும் இருக்கத்தான் செய்தார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள், என் ஒன்று விட்ட சித்தப்பா ஒருவர் ஒய்.விஜயாவின் பரம பக்தர். அவர் நினைவாக, ஒய்.விஜயாவின் பெயருக்கு முன்னால் ’எம்’ எழுத்து சேர்த்து “மை.விஜயா" என்று வலது கையில் பச்சை எல்லாம் குத்திக் கொண்டு அலைந்திருக்கிறார். பின் காலம் போன காலத்தில் மனைவியிடம் செருப்படி வாங்கினாலும் கையோடு கலந்த உறவான ஒய்.விஜயா பெயரை மட்டும் அழிக்கவே முடியவில்லை.

தமிழர்களைப் போன்ற பொதுவுடைமைவாதிகளை ஏழேழு உலகத்தின் எந்த ஊர் ரசிகர்களிடமும் காண முடியாது. குஷ்பு இட்லி என்பது இன்று உலகறிந்த ப்ராண்ட். ஆனால் குஷ்பு பெயரில் இட்லிக்கடை வந்தததைப் போல இஷா கோபிக்கர் பெயரில் பணியாரக்கடையாவது துவங்கிவிட வேண்டும் என்ற வெறியில் இருந்தான் என் நண்பன் ஒருவன். ஆனால் அப்படிப்பட்ட உண்மைத்தமிழ் ரசிகர்களை எல்லாம் மதியாமல் அவர் ஹிந்திக்குச் சென்றதால் அந்த கொள்கையை கைவிட்டு விட்டான். இருந்தாலும் மனம் தளராமல் பிற்காலத்தில் ரம்பா ஆப்பக்கடை திறந்து அதில் ஸ்பெசல் ஐட்டமாக சிம்ரன் இடியாப்பத்தை இணைத்து ஆறுதலடைந்தான். சமூகக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், ரீமா சென்னையும் சிம்ரனையும் ரசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் நாம் தேவயானிக்களையும், கௌசல்யாக்களையும் வாழ வைத்துக் கொண்டிருந்தோம் என்பதே நம் மண்ணின் மரபு. ரேவதிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாயகிகளே இல்லை, எல்லாம் வெறும் ”கிளாமர் டால்ஸ்” தான் என்று அங்கலாய்த்துக் கொள்ளும் அங்கிள்கள் கூட அவ்வப்பொழுது சுவலெட்சுமிகளையும்,  கோபிகாக்களையும், ஜெனிலியாக்களையும் கண்டு திருப்தி அடைந்து கொள்கின்றனர். 

ஆனால், சரித்திரத்தில் தவறுகள் ஏற்படுவதும் அவ்வப்பொழுது நிகழத்தான் செய்கிறது. சர்வ லட்சணம் பொருந்திய கன்னிகள் கூட டொக்குப் படத்தில் அறிமுகமான காரணத்தினால் பரிச்சயம் இல்லாமலே தொலைந்து போகின்றனர். அதே சமயம் சாதா லட்சணம் பொருந்திய குமாரிகள் அவ்வப்பொழுது லைம்லைட்க்கு வந்து விடுவதும் உண்டு. மனமுவந்து சொல்லுங்கள், பிரியாமணி போன்ற ஒருவரைப் பார்க்கும் போது உங்களுக்குக் கனவெல்லாம் வருமா என்ன? இருந்தாலும் அவரும் திரைவானில் மின்னிக் கொண்டு தானே இருக்கிறார். ஓவியா போன்ற சுமார் ஃபிகர்களுக்கெல்லாம் தொடர்ந்து படங்கள் கிடைக்கிறது என்றால், நம் ரசிகர்களின் சகிப்புத்தன்மை எந்தளவு உயர்ந்திருக்கிறது என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

இப்படியாப்பட்ட கோடான கோடி ரசிகர்களுக்கு தங்கள் கனவுக்கன்னிகள் குறித்து சில மனக்கவலைகளும் இருக்கின்றன. அனுஷ்கா போன்ற தேவதை எல்லாம், இனியும் ஹீரோவின் சாகசத்தில் மயங்கி, “கெக்கே பிக்கே” என்று வழிந்து கொண்டு அவர்கள் பின்னால் அலைவதை ஒரு போதும் இந்த சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதிலும் எத்தனை காலம் தான் அவர் கால்களை மடக்கியபடியே நடனமாடுவது, நடப்பது. ஏன் ஹீரோக்கள் அருகில் உட்காருவது போல சீன் வைக்கும் போது கூட அவரை குணிந்தே தான் உட்கார வைக்க வேண்டியது. தனது இடுப்பளவு உயரம் கொண்ட நாயகர்களுடன் டூயட் பாட நேரும் அவலங்களை நினைத்து அனுஷ்கா கவலை கொள்கிறாரோ இல்லையோ அவரது ரசிகக்கண்மணிகள் பொங்கிப் பொங்கி அழுகிறார்கள். அதே போல,  கால்சீட் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அஞ்சலியை எல்லாம் புதுமுக பசங்களோடு டூயட் பாட வைப்பதை ஒரு போதும் இந்த சமுதாயம் மன்னிக்காது. அப்புறம், முன்பு லைலாவுக்கு இருந்த ”லூசாப்பா நீ” நோய் இப்போது ஜெனிலியாவுக்கு, தமன்னாவுக்கு, ஹன்சிகாவுக்கு என வேகமாக பரவுவதை நினைத்தும் ரசிகப்பெருமக்கள் துக்கம் கொண்டுள்ளனர். இதே போல ஆயிரம் ஆயிரம் மனமாச்சர்யங்களை தனக்குள் புதைத்துக் கொண்டு தான் ஒரு ரசிகன் தன் கனவுக்கன்னியை ஆராதிக்கிறான் என்ற உண்மையை உணர வேண்டும்.

கனவுக்கன்னிகளை கற்பனைக் கோட்டையில் வைத்து மகுடம் சூட்டி அழகு பார்க்கும் கடைக்கோடி ரசிகர்களின் கவலை போகுமா, நாயகிகள் திரையை ஆளும் நாள் வருமா... பொறுத்திருந்து பார்ப்போம்.

(கவர்ச்சிக்கன்னிகளின் வண்ணப்படங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்து உங்களுக்குப் பிடித்தமான நடிகையின் பெயரை டைப் செய்து எண்டர் கீயை அழுத்தவும் :) )

******

Thursday, March 7, 2013

குடிகார சமுதாயம்


முன்பு ஒரு காலம் இருந்தது. அப்பொழுதும் பொழுதுபோக்காக அல்லது எப்போதாவது அல்லது நினைத்தால் மட்டும் அல்லது அவ்வப்போது அல்லது முழுமூச்சாய் அல்லது வேறு ஏதோ ஒரு எழவு காரணம் சொல்லி குடிப்பவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அப்பொழுதும் மதுவிலக்கு வேண்டுமென்று சிறு சிறு சலம்பல் எப்போதாவது கேட்டுக் கொண்டு தான் இருக்கும். ஆனால் அப்பொழுதெல்லாம் குடிப்பவர்களுக்கு குடிக்காமல் இருக்கும் சமயங்களிலோ, சமூகத்தின் சராசரி பொது உரையாடல்களிலோ “இந்த சனியனை முதலில் ஒழிச்சுக்கட்டனும்” என்ற குற்றவுணர்ச்சியோ அல்லது “தம்பி, குடியை மட்டும் பழகாதே, ஆளை ஒருநாள் சாய்ச்சுடும்” என்ற அறிவுரைகளோ காணக்கிடைக்கும். அதையெல்லாம் கேட்டு, சபதமெடுத்துக் கொண்டு திருந்தியவர்கள் எத்தனை பேரெனத் தெரியவில்லை. ஆனால் குடிப்பது தவறு என்ற நினைப்பாவது இருந்தது. ஆனால் இன்று குடியை வெறுக்கும் ஒருவன் கூட, எங்கே தனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்று சொன்னால் சமுதாயத்தின் பொது நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்டவனாக, வேற்று கிரகவாசியைப் போல பார்க்கப்படுவோமோ என்றெண்ணும் அளவுக்கு குடியின் ஊடுறுவலும், குடி பற்றிய பேச்சும் சாகசத் தன்மையாக மாறிப் போயிருக்கிறது.

குடியை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய அரசாங்கம், மதுக்கடையை தானே எடுத்து நடத்துகிறது. வழக்கமாய் அரசு நடத்தும் வியாபாரம் படுத்துக் கொள்ளும் என்பது தான் பொதுபுத்தி. ஆனால் இங்கே மட்டும், கம்பை சுழற்றி வேலை வாங்கி, “டார்கெட்” எல்லாம் வைத்து லாபமீட்டுகின்றனர். 

திருவள்ளுவரே மதுவின் தீமைகளைப் பற்றி அதிகாரமாய் சொல்லியிருக்கிறார் என்றால் அப்பவே ” குடிகாரப்பயங்க” இருந்து இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். அதனால் குடியோடு வளர்ந்த சங்ககால மறத்தமிழர்களான, தேடிப்போய் குடிக்கும் “ப்ரஃபஸனல்” குடிகாரர்களைப் பற்றி கவலை கொள்ள நாமொன்றும் காந்தியல்ல. ஆனால் முக்குக்கு முக்கு கடையைத் திறந்து வைத்து, ரோட்டில் சும்மா போகிறவனைக் கூட “வாங்க பாஸ், ஒரு கட்டிங் போட்டுட்டுப் போகலாம்” என கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூவி விற்பதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிலும் டெக்னாலஜி வளருதோ இல்லையோ சீக்கிரமே விளைந்து விடும் நம் பதின்மவயது சிறுவர்கள் பாடு கொண்டாடடம் தான். ஏற்கனவே இறுக்கமான சமூக சூழ்நிலையில் வளரும் நம் சிறுவர்கள், மீசை முளைக்க ஆரம்பித்தவுடனே தங்களையும் பெரிய மனிதர்களாக காட்டிக் கொண்டு “காலர்” தூக்கிவிட எதுடா காரணம் என்று அலைந்து கொண்டிருக்கையில் இந்த மதுவின் கவர்ச்சி அவர்களை வெகுவாகவே வசீகரிக்கிறது. அதுவும் கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கிறது எனும் போது கேட்கவேண்டியதே இல்லை.

ஒரு காலத்தில், மதுவை எதிர்ப்பது எப்படி ஒரு அந்தஸ்தாக பார்க்கப்பட்டதோ இன்று மதுவை ஆதரிப்பது பெரிய “இண்டலக்சுல்” லுக் கொடுக்கிறது போல. அதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் செம சுவாரஸ்யம். அதில் மது விற்பனை மூலமான வருமானம் தான் அரசின் நலத்திட்டங்களுக்கு மூலதனமாக இருக்கிறது என்றொரு அரிய கண்டுபிடிப்பு. அப்படியென்றால் அரசின் வருவாயை இன்னும் பெருக்க மேலும் சில ஐடியாக்களை பரிந்துரைப்போம்.

அரசின் சிறப்பு மானியத்துடன் கஞ்சா செடிகளைப் பயிறிட்டு ஏற்றுமதி செய்வது.
மதுக்கடைகள் இருப்பது போன்று வீதிக்கொரு வீடியோ பூத் வைத்து ”பிட்டு” படங்கள் போட்டுக் காட்டுவது.
விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கி அதற்கு “ப்ரிபெய்டு” அட்டைகளை ரேசன் கடைகள் மூலம் அரசே வழங்குவது.

இன்னும் பற்பல வழிகளில் அரசுக்கான வருவாயைப் பெருக்கலாம். நாம் என்ன அரசிடமிருந்து நல்ல நிர்வாகத்தையா எதிர்பார்க்கிறோம். நமக்குத் தேவை எல்லாம் கவர்ச்சிகரமான வாய்வார்த்தைகள் தானே. சொல்ல முடியாது, அடுத்த தேர்தலுக்கு “விலையில்லா மது” கூட ஏதாவதொரு கட்சியின் வாக்குறிதியாக இருக்கலாம்.

அப்புறம், குடியை எதிர்க்கிறவர்கள் எல்லாம் ஏதோ அம்மாஞ்சி போலவும், குடியைப் போற்றுபவர்கள் தாம் புரட்சியை “டமார்”ரென வெடிக்க வைக்கும் கலகக்காரர்கள் போலவும் அவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மொழியிலேயே சொல்வதென்றால் பரம்பரைக் குடிகாரர்கள் எல்லாம் “கம்முன்னு” உட்கார்ந்து சரக்கடித்துக் கொண்டிருக்கையில் “வாட்டர் பாக்கெட்”டை, அதுவும் மோந்து பார்த்து விட்டு இந்த அல்ப்பைகள் கொடுக்கும் அலப்பறைகளைப் பார்க்கையில், நாராயணனனை மருந்தடிக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. ஒரு வேளை மதுவிலக்கு வந்து விட்டால், இந்த புரட்சியாளர்கள் பாடு தான் திண்டாட்டம். இவர்களால் மேல்தட்டு போண்டா கோழிகளைப் போல் லைசன்ஸ் வாங்கி வைத்துக் கொண்டு குடிக்கவும் வழியிருக்காது. சாமானியர்களைப் போல் கள்ளச்சாராயத்தை அடிக்கவும் தைரியம் இருக்காது. 

ஆனால், இணையம் முழுதும் இவர்கள் பதறுவதைப் போல “பூரண மதுவிலக்கு” எல்லாம் ஒரு நடைப்பயணத்துக்கும் கொஞ்சம் பூட்டுக்களுக்கும் பயந்து அவ்வளவு சீக்கிரம் கொண்டு வரும் திராணி இங்கு ஒருவருக்குமில்லை. எனவே இந்த குடிகார “புரட்சியாளர்கள்” வழக்கம் போல குவாட்டரை சாத்திக் கொண்டு, நாட்டின் முன்னேற்றம் பற்றி லெக்சர் அடிக்கலாம், பொங்கலாம், அடங்கலாம், ”நான் எப்பவும் ஸ்டடி!” என்று பிதற்றலாம், வாந்தியெடுக்கலாம், குப்புறக்கா கவுந்து படுத்து புரட்சி செய்யலாம்.

வாழ்க எம் நாடு, வளர்க எம் “குடி”மக்கள் !

******