Tuesday, September 21, 2010

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் "மருதநாயகம்"


தமிழ்த் திரையலகை ஹாலிவுட் தரத்துக்கு மாற்றும் முயற்சியில் சிறிதும் தளராத சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அடுத்து தயாரிக்கும் திரைப்படம் "மருதநாயகம்". சன் டி.வி. அலுவலத்திற்கு சென்ற கமலஹாசன், கலாநிதி மாறனை மரியாதை நிமித்தமாக சந்தித்தபிறகு வரலாற்று சிறப்புபிக்க இந்த  நிகழ்வு நடந்ததாக சன் டி.வி. ஃப்ளாஷ் நியூஸ் தெரிவித்தது. தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்காக சன் பிக்சர்ஸ் எப்போதும் தயாராக இருப்பதாகவும், போதிய நிதியுதவி இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த படத்துக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளது என்றும் விரிவான செய்திகளில் ஒரு மணி நேரத்திற்கு மூன்று தரம் வீதம் மூன்று நாட்களுக்கு ஒளிபரப்பட்டது.

******
இன்று "மருதநாயகம்" படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திடும் நிகழ்ச்சி, நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  முதல்வர் கலைஞர் பேனாவை எடுத்துக் கொடுக்க, நடிகர் கமலஹாசன் கோப்பை பிடித்துக் கொள்ள கலாநிதி மாறன் கையெழுத்திட்டார். தமிழ் திரையுலகமே திரளாகக் கலந்து கொண்டது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இயக்குநர் சந்தானபாரதி ஏதேதோ பேசினார். ஆனால் எதுவும் புரியாவிட்டாலும், அந்த சூழ்நிலையில் அவர் கமலஹாசனை நிறையவும், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனை அதை விட நிறையவும் புகழ்ந்து தான் பேசியிருப்பார் என்பதைப் புரிந்து கொண்டு மக்கள் பெருத்த கரகோஷம் எழுப்பினர். 

******
இன்று சன் பிக்சர்ஸ் வழங்கும் "மருதநாயகம்" திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டும் விழா தலைமைச் செயலக வளாகத்தில், புதிதாக அமைக்கப் பட்டுள்ள "கலைத்துறை கமாண்டோ டாக்டர் கலைஞர் திரைப்பட கிராமத்தில்" மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக சோனியா காந்தி அவர்களும், அவருக்குத் துணையாக ராகுல் காந்தி அவர்களும், இவர்கள் இருவரும் வருவதால் வேறு வழி இல்லாமல் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கலைஞர் அவர்கள், "திக்கெட்டும் பரணி பாடும் தமிழ் மண்ணில் சட்டென்று செட்டு போட ஓர் இடமில்லை என, திரைத் துறையை தன் செங்கரத்தால் தாங்கும் தம்பி கலாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க தலைமைச் செயலகத்திலேயே இடம் தந்து திரைத்துறையை வாழ வைக்கும் இந்த அரசு, இது ஏழை எளிய மக்களை மகிழ்விக்கும் கலைத்துறைக்கு நம் கழக ஆட்சி தரும் பரிசு" என்று பெருமை கொண்டார். படத்துக்கான முதல் போஸ்டருக்கு கலைஞர் பசை தடவிக் கொடுக்க, சோனியா காந்தி அதை தலைமைச் செயலக வளாகத்தின் முகப்பு வாயிலில் ஒட்டினார். 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், " எந்திரன் ரிலீஸ் ஆகி, 100வது நாள் விழாவில் கலாநிதி மாறன்ட்ட பேசிட்டு இருக்கும் போது, இந்த மாதிரி... உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையா சன் டி.வி. யில எந்திரன் ஒளிபரப்பும் வரை நம்ம பாண்டு இருக்கு. அதுக்கு முன்னாடி ஒரு நாலு நாள் லீவு கொடுத்தீங்கன்னா, இமயமலைக்கு ஒரு ஷார்ட் ட்ரிப் போய்ட்டு வந்திருவேன் அப்டீன்னு கேக்கும் போது, ரொம்ப பெரிய மனசு பண்ணி நாலு நாள் லீவு தந்தார். இத நான் இங்கே ஏன் சொல்றேனா, கமல் என் உயிர் நண்பர், கலையுலத் தாய் எங்களையெல்லாம் நடக்க விட்டு கூட்டுட்டுப் போதும் போது, கமலை மட்டும் தோளில் தூக்கி வச்சு தூக்கிப் போனா, அந்த அளவு கலைக்காக பாடுபட்டவர். அவர் கூச்சப்படாம,  நடுவுல ரெண்டு நாளோ, மூணு நாளோ லீவு கேட்டு வாங்கிக் கொள்ளலாம், அந்த அளவு பெருந்தன்மை கொண்டவர் கலாநிதி மாறன், மற்றபடி "மருதநாயகம்" படத்துக்கும் இத்தாலிய மொழியில் வெளிவந்த "மஷிதோநாய்கா" படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்!" என்று பாராட்டினார்.

கலாநிதி மாறன் அடுத்ததாக நேரடி தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக வந்த அதிகாரப்பூர்வமற்ற தகவலையடுத்து இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான தெலுங்கு நடிகர்கள் கலந்து கொண்டு கலாநிதி மாறனை மனம் குளிரப் பாராட்டினர்.

******
சன் டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சியாக, "மருதநாயகம் படம் போஸ்டர் ஒட்டும் பசை உருவான விதம்" ஒளிபரப்பப்பட்டது. இதில் பசைக்கான மைதா மாவு வாங்குவதில் துவங்கி, பசை காய்ச்சும் அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாகக் காட்டப்பட்டன. இதில பேட்டியளித்த கிரேசி மோகன், "பசையுள்ள பார்ட்டி தான் மருதநாயகத்தை தயாரிக்க முடியும்னு நான் கமல்கிட்ட முன்னயே சொன்னேன். அது கலாநிதி மாறன் தான் னு கண்டுபிடிக்க கமலால் மட்டும் தான் முடியும். ஏன்னா அவர் தான் ஒரு படம் விட்டு ஒரு படத்துக்கு எனக்கு வசனமெழுத வாய்ப்பு தருவார். எல்லாரும் சொல்ற மாதிரி இந்த படத்தோட போஸ்டர், மழை வெயில் எல்லாத்தையும் தாங்கி ஒரு வருசம், ரெண்டு வருசம் கிழியாம, சாயம் போகாம இருக்கனும்னு கடவுளை வேண்டிக்கிறேன்" என்றார். 

இதையடுத்து தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் "மருதநாயகம்" படத்துக்கு போஸ்டர் ஒட்டும் விழா அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என்றும் அதை சன் டி.வி. நேரடி ஒளிபரப்பு செய்யும் என்றும் கூறப்படுகிறது.

******
இன்று சன் பிக்சர்ஸ் வழங்கும் "மருதநாயகம்" திரைப்படத்துக்கு டிக்கட் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட்டை அடுத்துள்ள 100 ஏக்கர் அளவுள்ள காலியிடத்தில் மிகப்பிரம்மாண்டமான டிக்கெட் கவுண்ட்டர் செட் அமைத்து, நடைபெற்றது.
விழாவில் முதல் டிக்கெட்டை அமெரிக்க அதிபர் ஒபாமா கிழித்துக் கொடுக்க, உகாண்டா நாட்டு அதிபர் யோவெரிமுசுவெனி பெற்றுக் கொண்டார். டிக்கெட் விலைக்கான செலவை உலக வங்கி சலுகை வட்டியில் உகாண்டா நாட்டுக்கு வழங்கியிருப்பதாக பி.பி.சி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் வையாபுரி, "நமது படம் ஹாலிவுட் தரத்தையும் தாண்டியது என்பதை நிரூபிக்கவே ஹாலிவுட்டைத் தாண்டி உள்ள இடத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றோம். இந்த சாதனையை நிகழ்த்த திரு.கலாநிதி மாறன் அவர்களைத் தவிர வேறு எவராலும் முடியாது" என்றார். டிக்கெட் கவுண்ட்டர் செட்டுக்கு முன்,  தோட்டா தரணி கைவண்ணத்தில் உருவான 400 அடி ஆஸ்கார் விருதின் கட் அவுட் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நடிகர் கமலஹாசன், "சொல்லனும், சொல்லனும்னு முடிவு செய்துவிட்டபடியால் எல்லாத்தையும் சொல்லனும், சொல்ல வேண்டாம்னு நினைச்சிருந்தா சொல்லாமலே இருந்திருப்பேன். ஆனால் சொல்லனும்னு முடிவு செய்துவிட்டதால் எல்லாத்தையும் சொல்றேன். கலைஞர், தலைவர், முதல்ல சொல்லனும்னா முதல்வர். அவர் என் தகப்பனார். இதை சொல்ல எனக்கு எந்த மேடையும் தேவையில்லை, இருந்தாலும் சொல்வேன். என்னை தமிழ் படிக்க வைத்த வாத்தியார் என்றும் சொல்வேன். மருதநாயகம் பற்றி சொல்லனும், அதற்குமுன் இதைப் பெற்றுத் தந்த கலாநிதி மாறனைப் பற்றி சொல்லனும்.  நன்றி என்ற செம்மொழி சொல் கொண்டு சொல்லலாம், ஆனால் 'என்னிடம் வந்து நீயும் மாட்டிக் கொண்டதற்கு நன்றி, கொஞ்சம் ஓராமாய் நின்று வேடிக்கை பார்' என்று என்னிடம் அவரே சொல்லிவிட்ட பிறகு நான் என்ன சொல்ல முடியும். இருந்தாலும் சொல்வேன் நன்றி." எனறு கண்கலங்கினார்.

அடுத்து பேச வரும் கலாநிதி மாறன், "மன்னிக்கனும், வால்ட் டிஸ்னி மூவீஸ் தயாரிப்பில் பாதியில் நிற்கும் ஒரு படம் விலைக்கு வந்திருக்கு. அது பற்றி பேசி முடிக்க வேண்டியிருப்பதால், இப்பொழுது விடை பெறுகிறேன். நன்றி!' என்று கூறிவிட்டு அவசரமாக கிளப்பிச் சென்றார்.

எச்சரிக்கை:
இவையெல்லாம் நடக்க அநேக வாய்ப்புகள் இருந்தாலும், இப்பொழுதைக்கு "இது முழுதும் எனது கற்பனை" என்றும்,  இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை குறிப்பிட்ட நிகழ்வுகளோடு இணைத்து யோசிப்பது அவரவர் கற்பனை சக்தியைப் பொறுத்ததே என்றும் என் சுயநலம் கருதி இந்த அறிவிப்பு. 

******

24 comments:

  1. // சன் பிக்சர்ஸ் எப்போதும் தயாராக இருப்பதாகவும், போதிய நிதியுதவி இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த படத்துக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக//

    அவுங்களுக்கு உயிர் கொடுக்க கூட தெரியுமா ..?

    ReplyDelete
  2. //சன் டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சியாக, "மருதநாயகம் படம் போஸ்டர் ஒட்டும் பசை உருவான விதம்" ஒளிபரப்பப்பட்டது//
    ஐயோ சாமி , இப்படிஎல்லாமா நடக்குது ..?! ஆனாலும் உங்களுக்கு குசும்பு அதிகமக .. சிரிப்பு நிக்கவே மாட்டேங்குது ..!

    ReplyDelete
  3. //'என்னிடம் வந்து நீயும் மாட்டிக் கொண்டதற்கு நன்றி, கொஞ்சம் ஓராமாய் நின்று வேடிக்கை பார்' //

    எப்பூடிஎல்லாம் யோசிக்கிறாங்க ..?!??

    ReplyDelete
  4. //"இது முழுதும் எனது கற்பனை" என்றும், இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை குறிப்பிட்ட நிகழ்வுகளோடு இணைத்து யோசிப்பது அவரவர் கற்பனை சக்தியைப் பொறுத்ததே என்றும் என் சுயநலம் கருதி இந்த அறிவிப்பு.
    //

    இது உண்மை மாதிரியான பொய்யா இல்ல பொய் மாதிரியான உண்மையா ..?

    ReplyDelete
  5. //படத்துக்கான முதல் போஸ்டருக்கு கலைஞர் பசை தடவிக் கொடுக்க, சோனியா காந்தி அதை தலைமைச் செயலக வளாகத்தின் முகப்பு வாயிலில் ஒட்டினார். //

    இது டாப்பு...

    ReplyDelete
  6. எந்திரனுக்கு நடக்கும் கூத்தைப் பார்த்தால்; இவை யாவும் இந்தக் கோமாளிகளால் நடத்தப்பட அதிக
    வாய்ப்புண்டு.
    கலைஞர் பசைதடவ சோனியா போஸ்டர் ஒட்டுவது - மிக ரசித்தேன்.

    தங்கள் நகைச்சுவை உணர்வு அருமை!

    ReplyDelete
  7. itha ellaam unmaiyinu nenachen...really superb karpanai....ellaarukkum vaalvalikkum sun pictures vaazhga.....:D :D

    ReplyDelete
  8. கலாநிதி ஒன்றும் இ.வா.இல்லை.

    ReplyDelete
  9. கொஞ்சம் ஜாஸ்தியா இழுத்துருச்சோ?

    ReplyDelete
  10. என் சுயநலம் கருதி
    எஸ்கேப்..

    ReplyDelete
  11. கலக்கலுங்க.... செம காமடி... பட் நடந்தாலும் நடக்கலாம்

    ReplyDelete
  12. உள்ளூர்ல விலை போகாத மாடுதான்......வெளியூர் சந்தைக்குப் போகும் அப்படிங்கறத சரியா சொல்லிட்டீங்க நண்பா, நல்ல கற்பனை, நல்ல நகைச்சுவை... வாழ்த்துக்கள். நண்பா...அப்படியே.... நம்ம வயக்காட்டுக்கும் வந்துட்டுப் போறது.
    ( ithayasaaral.blogspot.com )

    ReplyDelete
  13. இப்பிடி சிரிச்சு எவ்வளவே நாளாச்சு!
    நன்றிண்ணே.

    ReplyDelete
  14. அவ்வ்..எவ்வளவே இல்ல. எவ்வளவோ.
    :-)

    ReplyDelete
  15. ஜாக்கி சான், டாம் குரூஸ் எல்லாம் பெரிய பட்ஜெட் படம் தயாரிக்க கலாநிதி மாறனிடம் வருவதாகக் கேள்வி

    ReplyDelete
  16. பார்வையிட்ட, கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

    //கார்த்திகைப் பாண்டியன் said...
    கொஞ்சம் ஜாஸ்தியா இழுத்துருச்சோ?//

    ஆமாம் கார்த்தி, 2 இடுகையா தான் போடலாம்னு நினைச்சேன், அப்புறம் அப்படியே போட்டுட்டேன். :)

    ReplyDelete
  17. அன்பின் பாலகுமார்

    சிரிச்சி சிரிச்சு - வயிறு வலிக்குது -. ம்ம்ம்ம் வி.வி.சி

    நல்ல கற்பனை - நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  18. //நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் வையாபுரி, "நமது படம் ஹாலிவுட் தரத்தையும் தாண்டியது என்பதை நிரூபிக்கவே ஹாலிவுட்டைத் தாண்டி உள்ள இடத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றோம். //

    :)

    சீனா ஐயா சொல்லிட்டாரே.....அதே தான்

    ReplyDelete
  19. ஜீ "மஷிதோநாய்கா" ? நிசமாதான் சொல்றிங்களா?

    ReplyDelete
  20. நல்லாத்தான் இருக்கு .... ம்ம்..

    ReplyDelete
  21. இதையடுத்து தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் "மருதநாயகம்" படத்துக்கு போஸ்டர் ஒட்டும் விழா அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என்றும் அதை சன் டி.வி. நேரடி ஒளிபரப்பு செய்யும் என்றும் கூறப்படுகிறது.
    //
    அட்டகாசம் கலக்கிட்டீங்க

    ReplyDelete
  22. நகைச்சுவை கற்பனை என்கின்ற பெயரில் உலக நாயகனை , தமிழ் திரை உலகை உலகமே பார்க்க செய்த மகானை
    இங்கு இழிவு படுத்தி இருப்பது வருத்தத்துக்கும் கண்டனத்திற்கும் உரியது .

    ReplyDelete