#பயணிகள்_கவனிக்கவும்
குறிப்பிடத்தக்க நல்ல முயற்சி, நன்றாகவும் வந்திருக்கிறது. ஒ.டி.டி தளங்களின் பெருக்கத்திற்குப் பிறகு, அவற்றிற்காக சிறிய பொருட்செலவில் தயாராகும் பிரத்யேகத் திரைப்படங்கள் வரத் துவங்கியிருக்கின்றன. எளிய கதை, நல்ல திரைக்கதை மற்றும் கூர்மையான வசனங்கள் மூலம் வீட்டிலிருந்தபடியே ஒரு புதிய திரைப்படத்தைப் பார்த்துவிடக் கூடிய அனுபவத்தை அவை அளிக்கக்கூடியவை. அவ்வாறு வெளியாகும் திரைப்படங்களை, தொலைக்காட்சி நாடகங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடியவை பரபரப்பான காட்சியமைப்புகளும், படத்தின் இசையும், வேகமும். ஆனால் பயணிகள் கவனிக்கவும் படம் மிக நிதானமாகத் தான் செல்கிறது, இசையும் காட்சிகளை உயர்த்திக் காட்டும் அளவுக்கு இல்லாமல், அதே நேரம் தொந்தரவு தராத அளவுக்கு மெலிதாகவே இருக்கின்றது.
இப்படி, நாடகமாக மாறியிருக்கக் கூடிய கதையை இயல்பான சினிமாவாக மாற்றியது விதார்த்தின் யதார்த்தமான நடிப்பு, அதை நடிப்பு என்றுகூட சொல்லமுடியாது, கண்களில் தெரியும் தயக்கம், சாய்ந்த உடல்மொழி, வாயசைவு என்று எழிலனாகவே வாழ்ந்திருக்கிறார் மனிதர். எத்தகைய தொழில்நுட்ப ஜாலங்கள் இல்லாமலே ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்க்க முடியும் என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு விதார்த்தின் அற்புதமான நடிப்பு, வாழ்த்துகள், இப்படம் உங்கள் அடுத்த இன்னிங்ஸின் துவக்கமாக அமையட்டும்.
சமூக வலைதளங்களில் பொறுப்பின்றி பகிரப்படும் தனிநபரின் படங்கள், வைரலாகும் அத்தகைய படங்களை எந்தவித ஆய்வுமின்றி, தங்களுக்குத் தோதான ஒரு பின்னணி கட்டுக்கதையோடு பரப்பி சென்ஷேசனாக்கும் காட்சி ஊடகங்கள், அவை சம்பந்தப்பட்ட மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்று தற்போதைய சமூகக் கதை. மலையாளத்தில் 2019ல் வெளிவந்த "விக்ருதி" திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது, அதிலிருந்து எவ்வளவு தூரம் இப்படம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. மலையாளப்படத்தையும் பார்க்க வேண்டும்.
எனக்கு இப்படத்தின் மையப்புள்ளியில் சிறு போதாமை தென்பட்டது. இன்னும் கொஞ்சம் அழுத்தமான நிகழ்வை எடுத்துக்கொண்டு அது தவறாகச் சித்தரிக்கப்பட்டு, வைரலாகி, சம்பந்தப்பட்டவர் மற்றும் படம் எடுத்தவர் இருவர் வாழ்வையும் எப்படி அலைக்கழிக்கிறது என்று பேசியிருக்கலாம்.
இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.
No comments:
Post a Comment