Monday, November 19, 2018

மலையெங்கும் பூக்கும் மலர்



ஒரு தாமரை மொக்கை விரிக்கும் போது, பூவின் இதழ்கள் ஒவ்வொரு அடுக்காக மலர்வது போல, ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதினம் தன்னைத் தானே அழகாக விரித்துக் கொள்கிறது, அய்யனார் விஸ்வநாத் எழுதியுள்ள “ஓரிதழ்ப்பூ” புதினம். சமீபத்தில் கோவில்கள், மாளிகைகள் போன்ற புராதானச் சின்னங்களை 360 பாகை கோணத்தில் சுற்றிச் சுழற்றிக் காட்டும் காணொளிகளைப் பார்த்திருப்போம். இப்புதினத்திலும், ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் மேலோட்டமாகச் சொல்லப்படும் ஒரு காட்சி, அதில் இடம்பெற்றிருக்கும் இன்னொரு கதாபாத்திரத்தின் பார்வையில் வேறு ஒரு கோணத்தில் சொல்லப்படும் போது, ஒரே நிகழ்வின் பல்வேறு அடுக்குகளை கண்முன்னே காட்சிகளாக விரிகின்றன. இந்த யுக்தி மேம்போக்காகச் சொல்லப்பட்டிருந்தால், சொன்ன விஷயத்தையே மீண்டும் சொல்வது போல, வாசிக்கையில் அலுப்புத் தட்டி இருந்திருக்கும். ஆனால் அய்யனாரின் சுவாரஸ்யமான கதை சொல்லல் முறையினால், ஒரே நிகழ்வின் பல படிமங்கள், உயிரோட்டமான முப்பரிமான நிகழ்வுகளாக உயிர்பெறுகின்றன. 

ஓரிதழ்ப்பூ என்று கருத்தாக்கத்தை யதார்த்தம், புனைவு, மீபுனைவு என்று பல்வேறு தளங்களில் பரவவிட்டு, சுழற்சியான ஒரு புனைவுப் பின்னல் உருவாக்கப்பட்டிருக்கிறது. புள்ளிமான் உடலில் மனித முகம் கொண்டவன் கனவில் வரும் சித்திரம், தாலிகட்ட அருகில் அமர்ந்திருப்பவனுக்கு நரிமுகம் போன்ற தோற்றம் எழுவது, அகத்தியரும், ரமணருக்குமான உரையாடல் போன்றவற்றோடு திருவண்ணாமலை என்ற ஊரின் வரைபடமும் அதில் வாழும் மனிதர்களைப் பற்றியதுமாக, உள்ளும் வெளியுமாக கதை சொல்லப்பட்டிருக்கிறது. 

ஓரிதழ்ப்பூ என்பது என்ன என்பதற்கான தேடலில் துவங்கும் புதினம், அதனை மாமுனிவர் கண்டுணரும் இடத்தில் முடிந்து விடுவது போலத் தோன்றினாலும், அது ரவியின் மனதில் அச்சுறுத்தும் அக்கினிப் பிழம்பாக தொடர்ந்தபடியே இருக்கிறது. மாய யதார்த்தத் தளத்தில், மாமுனிவர் உலவுவது போல தொடங்கும் சரடு, அவரைத் தேடி அவரது மனைவி வரும்போது, அவர் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் மனப்பிறழ்வு என்ற இணைப்பில் சரியாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சங்கமேஸ்வரன் தொடர்பான அங்கையுடைய நினைவுகள், சங்கமேஸ்வரன் மற்றும் மலர்க்கொடி இடையேயான நிகழ்வுகள் அனைத்தும் நிகழில் கலந்த மாய யதார்த்தக் காட்சிகளே.

மலர் சங்கமேஸ்வரனை அடர்கானகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டுவது எல்லாம் மீபுனைவுத் தளத்தில் சொல்லப்பட்டு, அவன் அவளைக் கூட்டிச் செல்கையில் அவள் அணிந்திருந்த நைட்டியோடு டூவீலரில் ஏறிச் செல்கிறாள் எனும் போது திடீரென அக்காட்சி மீபுனைவல்ல ஒரு யதார்த்த நிகழ்வு என்று வாசிக்கும் மனம் அலைவுறுகிறது. இத்தகைய இடறல் புதினத்தின் பல பகுதிகளில் வருகிறது. அய்யனார் இதனை பிரஞ்கையோடு விரும்பியே செய்திருப்பார் என்றே தோன்றுகிறது. புனைவுக்கும், யதார்த்தத்துக்குமான இந்த அலைச்சல் தான் புதினத்தை அடர்த்தியாக்கவும் செய்கிறது.

தான் கனவில் கண்ட மானின் நினைவிலேயே மூழ்கியிருக்கும் அங்கை, கையாலாகாத தனது கணவனின் வீழ்ச்சிக்குப் பிறகு, தனியாளாய் அவனையும் வைத்துக் காப்பாற்றும் துர்கா, கானகத்துக்குள் மறைந்து போகும் மலர், தன்னிடம் வந்து தஞ்சமடைபவனை அவன் வாழ்க்கைக்குத் திருப்பி அனுப்பிவிட்டு, வெளியுலகில் சுதந்திரமாய்ப் பறக்க நினைக்கும் அமுதா, இந்த நான்கு பெண்களையும் மையமாகக் கொண்டதே "ஓரிதழ்ப்பூ". இவர்களை நெருங்க அஞ்சுகிறவர்களாக, இவர்களிடம் சரணாகதி அடைந்தவர்களாக, இவர்களுக்குள் பிரபஞ்சத்தின் பேருண்மையை உணர்ந்து தெளிபவர்களாக, இவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வேட்கை மிகுந்தவர்களாக, இவர்களை நினைத்து உள்ளுக்குள் மருகுபவர்களாக இப்படி இவர்களின் வாழ்வை ஒட்டியவர்களாகவே இப்புதினத்தில் வரும் ஆண்கள் இருக்கிறது.

ஆண்களின் பராக்கிரமங்கள் மற்றும் வீழ்ச்சி, அதற்குப் பின்னிருக்கும் பெண்கள் எனும் ஆண்மய புனைவுகள் மத்தியில், " ஓரிதழ்ப்பூ"வின் ஆண்கள், பெண்களின் பகடைகளாகவே சுழற்றப்படுகிறார்கள். அவர்களின் வாழ்வும் தாழ்வும் பெண்களைச் சார்ந்தே இருக்கின்றன. சொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஒவ்வொருவரின் நிகழ்வாழ்வும் கூட இப்படி பெண்களை மையப்படுத்தியதாகவே இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

புனைவு மற்றும் யதார்த்தக் களங்களில் பயனித்தாலும், புதினத்தின் எழுத்துநடை, மிக எளிமையானதாகவே இருக்கிறது. தீவிர வாசகர்களுக்கு இது ஒரு குறையாகவும், அதேநேரம் சுவாரஸ்மான வாசிப்புக்குத் துணையாகவும் இருக்கிறது. திருவண்ணாமலையில் முக்கோணக் கதைகளில் ”ஓரிதழ்ப்பூ” இரண்டாவது என்று அய்யனார் குறிப்பிட்டிருக்கிறார். முதல் பகுதியான “இருபது வெள்ளைக்காரர்கள்” இன்னும் வாசிக்கவில்லை. விரைவில் வாசிக்க வேண்டும். அடுத்து வரவிருக்கும் மூன்றாவது பகுதிக்காகவும் காத்திருக்கிறேன். எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத் அவர்களுக்கும், இதனை வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.

******
ஓரிதழ்ப்பூ (நாவல்)
அய்யனார் விஸ்வநாத்
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 166
விலை: ரூ. 150

No comments:

Post a Comment