தனக்குப் பிடிப்பதை,
எந்தத் தடையையும் மீறி நிறைவேற்றுக் கொள்கின்ற ஒருத்தி, தனக்குரியவனின் ஒரு சுடுசொல்லைத்
தாங்க முடியாமல் தன்னைப் பொசுக்கிக் கொள்கிறாள். அபாண்டமாய் மாண்ட அவள் அரூப ராஜநாகமாய்
மாறி, தன் வாழ்வை வீழ்த்திய தன் மாமனின் குடும்பத்தை அழிப்பது ஒரு கண்ணி.
வாழ்ந்துகெட்ட குடும்பத்தில்
இருந்து, மேலெழுந்து வரும் ஒருவன், தன் பால்யத்தின் நினைவுகளோடும், தொன்மத்தின் மீதுள்ள
ஆழ்ந்த ஒட்டுதலோடு அதே நேரம் அதிலிருந்து விலகி ஓடும் எத்தனிப்போடும் அலைவுற்று, இறுதியில்
மீண்டு தன் வாழ்வுக்கான மொட்டெடுக்க முனையும் ஒரு கண்ணி.
நிகழ்வாழ்வின் சுயத்தைத்
தொலைத்து, துறவறத்தில் விட்டேர்த்தியாய வெறுமையைக் குடித்து, கசப்பேறி வன்சொற்களாய்
உமிழும் எச்சலில் இருந்து, சுற்றியிருப்பவர்களுக்கான சுபிட்சத்தை அருளும் அஞ்ஞானவாசியின்
இருப்பும் மறைவும் ஒரு கண்ணி.
இப்படி, கதைசொல்லியின்
உள்ளொடுங்கிய மனப்பிரவாகத்தின் மூலமாகவும், பாவங்களுக்குள்ளும் அவற்றிற்கு உண்டான தண்டனைகளுக்குள்ளும்
தன்னைத் தானே புதைத்துக் கொள்ளவும், ஒரு மொட்டெடுப்பின் மூலம் உள்ளிருந்து முட்டித்
தள்ளி வெளிவரத் துடிக்கும் எத்தனத்தையும், மேல்சொன்ன கண்ணிகளின் சரடாகக் கோர்த்து புனையப்
பட்டிருக்கிறது சரவணன் சந்திரனின் “சுபிட்ச முருகன்”.
சரவணன் சந்திரனின்
கதை சொல்லிகள், சட்டகத்துக்குள் அளந்து வைத்திருக்கும் கதை சொல்லல் முறையிலிருந்து
மாறுபட்ட வகையில் கட்டத்துக்கு வெளியே இருந்து தம் அகத்தின் சாகச உணர்வையும், அதன்
களிப்பையும், பின் அதனூடாக உண்டாகும் குற்றவுணர்ச்சியின் மூலம் தம்மை சுருக்கிக் கொள்வதையும்,
பின் அரூபத்தில் இருந்து நீளும் ஒரு கையைப் பற்றிக் கொண்டு அந்தக் குற்றவுணர்வில் இருந்து
மீண்டு எழும் மீட்சி என்பதாகவும் உருவாகி இருப்பவர்கள். அவரது இதுவரையான புதினங்களில்
இதே குணவார்ப்புள்ள நாயகன் தான் கதைசொல்லியாக இருப்பான். ஆனால் முந்தைய புதினங்களில்,
வாசிப்புக்கு பெருந்தடையாய் இருந்தது, அத்தியாயங்களுக்கு இடையேயான தொடர்ச்சியின்மை.
ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியாய் தொக்கி நிற்பது போலவே தோன்றும். ஒரு அத்தியாயத்தில்
ஒரு பாத்திரத்தைப் பற்றிய அறிமுகம், அப்பாத்திரத்திற்கு கதைசொல்லியுடனான உறவு அல்லது
தொடர்பு, அவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் ஒரு சம்பவம். அதோடு அந்த அத்தியாயம் முடியும்.
ஒரு அத்தியாயத்தின் நிகழ்வுகள், கதையோட்டத்திற்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்துகின்றன
அல்லது அது புதினத்தை எப்படி நகர்த்துகிறது என்பதில் சில குழப்பங்கள் இருந்தன. ஆனால்
”சுபிட்ச முருகனில்” அந்த தொடர்பின்மை மறைந்து, கண்ணிகளை புனைவுச் சரடில் இணைக்கும்
லாவகம் வாய்த்திருக்கிறது.
சுபிட்ச முருகனின்
முதல் மூன்று அத்தியாயங்கள், இளங்கா என்னும் இளம்பெண்ணின் தனித்தன்மையான வாழ்வையும்,
சாவையும், அடர்த்தியான விவரிப்புகள் மூலமும் பேசுகிறது. அவள் கதைசொல்லியின் மனதுக்குள்
தொன்மமாய் பதிந்து, தனது வீழ்ச்சிக்குக் காரணமானவர்களை அலைக்கழித்து பலிவாங்கிய துர்நிகழ்வுகள்
அவனைக் கொடுங்கனவாய்த் துரத்த, அதில் அவன் வீழ்கிறானா இல்லை விதியின் இந்த சாபத்தில்
இருந்து அவளே அவனை விடுக்கிறாளா அல்லது அவளையும் தாண்டி அவன் தான் கண்டுணரும் தரிசனங்கள்
மூலம் இறுதியில் மொட்டெடுக்கிறானா என்ற கேள்விகளை முன்வைத்து, புதினத்திற்கு மிகப்பலமான
அஸ்திவாரம் நட்டு வைக்கப்படுகின்றது.
ஆனால் புதினத்தின்
இந்த பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் இரண்டாம் பகுதி மிகப் பலவீனமாக எழுந்திருப்பது
துரதிர்ஷ்டம். ஒரு புனைவின் போக்கு, நம் மனம் நினைக்கின்றபடி தான் செல்லவேண்டும் என்று
நினைத்து வாசிப்பது அபத்தம், ஆனால் முதல் மூன்று அத்தியாங்களில் கட்டமைக்கப்பட்ட இளங்கா
என்னும் பெண்ணின் பிம்பம் அப்படியே நட்டாற்றில் ஆதரவின்றி விடப்பட்டு, அதன் பின்னான
அத்தியாயங்கள் கதைசொல்லி தன் அகம் சார்ந்த பிரச்சனைகளின் புலம்பலையும், தன் இயலாமையையும்,
தன் வாழ்க்கை முறை மாற்றத்தையும் அன்றாடம் எழுதிச் செல்லும் டைரிக்குறிப்பைப் போன்று
சுருங்கி விடுகின்றன. உண்மையில், இப்புதினத்தின் மையப்பகுதி, இளங்காவுக்கும், கதைசொல்லிக்குமான
பரமபத விளையாட்டாகவும், சமராகவும், போராட்டமாகவும் அமைந்திருந்தால் முன் அத்தியாயங்களின்
அடர்த்தி, புதினம் முழுக்கப் பரவியிருக்குமோ என்று தோன்றுகிறது. இளங்கா தன் மாமனின்
குடும்பத்தை புல்பூண்டு இன்றி பஸ்பமாக்கும் ரௌத்திரத்தில் தனக்குப் பிரியமான ஐந்து
வயது சிறுவனை மட்டும் தன் நஞ்சின் வீரியத்தில் இருந்து காப்பது என்ற பதைபதைப்போடு அவனை
நெருங்குவதும், ஆனால் கதைசொல்லிக்கு இளங்கா என்பவள் தன் குடும்பத்தை கருவறுக்க வந்த
யட்சியா அல்லது தன் மீதிருக்கும் சாபத்தின் வினையை அறுக்க வந்த கன்னிமார் தெய்வமா என்ற
கலக்கத்துடனும் இதே கதையை இன்னொரு கோணத்தில் யோசித்து, புனைவின் திசையை மாற்றிப் பார்க்கையில்
“சுபிட்ச முருகன்” இன்னும் செழுமையான சித்திரமாகத் துலக்கமாகிறது. மாறாக, முன்பு நன்கு
கட்டமைக்கப்பட்ட இளங்கா என்ற ஒருத்தியின் பிம்பமே மறந்து போய், கதைசொல்லி, தன் இயலாமையையும்,
எச்சில் சாமியின் இடத்தில் அல்லறும் படிமங்களும் மீண்டும் மீண்டும் வரும் போது, புதினத்தின்
இரண்டாம் பகுதி தனியான வேறு காட்சியாக, வெறும் புலம்பலாக தோற்றம் கொள்ள வைக்கின்றது.
வாழ்வின் ஒன்றின் மீதான
மோகம், அதனை அடையத்துடிக்கையில் நிகழும் வேட்கை, பின் பிடித்தது தரும் சலிப்பு அல்லது
பிடித்தது கைநழுவிப் போகையில் எழும் குரோதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது புதினத்தின்
முதல் பகுதி. சாகச மனம் கொண்ட ஒருவன் உச்சத்திலிருந்து அதளபாதாளம் நோக்கி விழுகையில்
தோன்றும் ரோகம், அதன் மூலம் தனக்குள் சிற்றெரும்மாக ஊறல் எடுக்கும் கழிவிரக்கம், அதனூடே
கிடந்து உழலுதல், அந்த பாதாளத்திலிருந்து மேலெழுந்து வர முடியாமல் மீண்டும் மீண்டும்
தனக்குள்ளேயே தன்னைச் சுருக்கி சுருக்கி சுற்றியுலவும் வட்ட எல்லை ஆகியவை இரண்டாம்
பகுதி. பின் தன் கீழ்நிலையிலிருந்து தன்முனைப்போடோ அல்லது மேலிருந்து நீளும் ஒரு ஒளிக்கற்றையைத்
தொடர்ந்தோ வான் நோக்கி ஏகி, மொட்டெடுத்து, போகம் பெருக எழும் முயற்சி முடிவுப் பகுதி.
இப்படி மோகத்தில், துவங்கி, ரோகத்திலிருந்து மீண்டு போகம் பெருகி வரும் படைப்பாக வந்திருக்கிறது
“சுபிட்ச முருகன்”.
உண்மையில், இந்த புதினத்தை
வாசிக்க எடுக்கும் போது, இணையத்தில் இப்புத்தகம் ஏற்படுத்தி இருந்த எதிர்பார்ப்புகளினாலும்,
வாசிக்க நேர்ந்த நான்கைந்து விமர்சனக் குறிப்புகளினாலும், இருவிதமான எண்ணங்கள் மனதில்
தோன்றின. ஒன்று, “சரவணன் சந்திரன் பெயர்சொல்லக்கூடிய தனது முதல் நாவலை எழுதிவிட்டார்”
என்ற நம்பிக்கை. இன்னொன்று, “இந்த தெர்மாக்கோலைத் தான் ராத்திரி முழுக்க ஒட்டிட்டு
இருந்தீங்களா” என்ற பரவை முனியம்மாவின் வசனம். புதினத்தை வாசித்து முடிக்கையில் இவற்றில்
எந்த எண்ணம், நிலைபெறப்போகிறது என்று எந்த யோசனையும், முன்முடிவுகளின்றியே வாசிக்கத்
துவங்கினேன். ஆனால் ஒற்றை வரியில் வீசிச் செல்லும் வெற்று விமர்சனச் சொற்களைத் தாண்டி,
இந்த புதினத்தின் முதல் சில அத்தியாயங்கள் ஏற்படுத்திய அதிர்வு நாவலை முடித்த பின்பும்
நிலைத்திருக்கிறது. பின் வந்த அத்தியாயங்கள், முதல் சில அத்தியாயங்களுக்கு நியாயம்
சேர்க்கத் தவறியிருந்தாலும், முடிவில், கரும்பானை உடைத்து பெருமழை பொழிந்து மனம் நிறைக்கும்
சுபிட்ச முருகனின் அருளால், இப்புதினம் தனக்கான இடத்தைத் தக்க வைக்கிறது. எழுத்தாளர்
சரவணன் சந்திரன் அவர்களுக்கும், புத்தகத்தை வெளிட்ட “டிஸ்கவரி புக் பேலஸ்” நிறுவனத்தினருக்கும்
வாழ்த்துகள்.
******
சுபிட்ச முருகன் (நாவல்)
சரவணன் சந்திரன்
டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்: 127
விலை: ரூ. 150
No comments:
Post a Comment