ஷான் எழுதிய
“வெட்டாட்டம்” நாவல் குறித்த வாசிப்பனுபவம்
பாலகுமார்
விஜயராமன்
தாராளமயம்,
தனியார்மயம், உலகமயம் ஆகியவை நாட்டை ஆட்கொண்டபின், பிறந்த இளைஞர்கள் சமூகத்தை எப்படிப்
பார்க்கின்றனர், அறவிழுமியங்களுக்கும், எளிய வாழ்வுமுறைக்கும் அவர்கள் கொடுக்கும் மதிப்பு
என்ன? எதையும் மேம்போக்காக பார்த்து, உணர்ந்து, பழகி, அனுபவித்து வாழும் இன்றைய தலைமுறை
இளைஞன் ஒருவனுக்கு, எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் அரசியல் பதவியும், அதில் வேண்டாவெறுப்பாக
ஒட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவனது செயல்பாடுகள், பின் பிழைத்திருத்தல் பொருட்டு
அவன் மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள், சதிகளுக்கு எதிரான அவனது பதில் தாக்குதல்
என்று ஷான் எழுதிய வெட்டாட்டம் நாவலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.
இருநூற்றுக்கும்
மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நாவலை, இரண்டே அமர்வுகளில் வாசித்து முடிக்க முடிந்தது.
சுவாரஸ்யத்திற்கும், விறுவிறுப்பிற்கும் குறைவில்லாத படைப்பு. சென்னை பெருவெள்ளம்,
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, தலைவர் கைதுக்காக மாணவிகளோடு சென்ற பேருந்து எரிப்பு,
மருத்துவமனையில் கோமாவில் இருக்கும் முன்னாள் முதல்வர், வெளியே காட்டப்படும் பழைய சிசிடிவி
ஃபுட்டேஜ் என்று சமகால அரசியல் நிகழ்வுகளோடு, பனாமா பேப்பர்ஸ், ஹவாலா, பிட்காயின்,
ப்ரூட்ஃபோர்ஸ் அட்டாக், ஃபிஷ்ஷிங் என்ற உலகலாவிய தொழில்நுட்பம் சார்ந்த சைஃபர் கிரைம்
தகிடுதத்தங்களை புனைவில் கலந்து, ஒரு கச்சிதமான அரசியல் திரில்லரைக் கொடுத்திருக்கிறார்.
அசாதாரணமான
சூழ்நிலையில், திடீரென முதல்வர் பதவியில் அமர நேரும் இன்றைய தலைமுறையின் பிரதிநிதி
இளைஞன், தனது சம்யோசித புத்தி, தொழில்நுட்பத் திறன், தனக்குப் பழக்கமான நெர்வொர்க்
ஆகியவற்றின் மூலமாக எப்படி தனது பதவியைத் தக்க வைக்கிறான் என்பதை பரபரப்புடன் சொல்கிறது
“வெட்டாட்டம்”. அரசியல் காய்நகர்த்தல்கள், படிநிலை அரசியல் போன்ற வழமையான அரசியல் விளையாட்டுகள்
தெரியாததே அவனது பலம். தன் மனதுக்கு சரியென்று பட்டதை, துரிதமாக முடிவெடுக்கிறான்,
அதனைத் துணிந்து செயல்படுத்தவும் செய்கிறான். பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்
என்ற கட்டாயம் இல்லாததால், தைரியமான காரியங்களை யாருக்கும் பயப்படாமல் செய்கிறான்.
விளைவு, குறுகிய காலத்தில் மக்களிடம் நன்மதிப்பைப் பெறுகிறான். அவனது தந்தை மூலமாகவே
தனது பதவிக்கு ஆபத்து வரும் போது, தன் தொழில்நுட்ப அறிவு கொண்டு, வழக்கமான அரசியல்
காய்நகர்த்தல்களையும் அவன் செய்யத் தவறுவதில்லை.
நாவல் முழுக்க,
பெரிதாக லாஜிக் மீறல்கள் முதல் வாசிப்பில் தென்படவில்லை. தொழில்நுட்ப விஷயங்களை கண்கட்டு
வித்தையாக சொல்லாமல், எளிமையான வார்த்தைகளில் விவரித்திருப்பது சிறப்பு. வேகமான வாசிப்பு
அனுபவத்திற்கேற்ற பரபரப்பான எழுத்து நடை, சமகாலத்தில் நாம் அறிந்த அரசியல் நிகழ்வுகளை
உறுத்தலின்றி புனைவுக்குள் செருகியது ஆகியவை நன்றாக வந்திருக்கின்றன.
வருணின்,
ரெயின்போ ரிசார்ட் வீடியோவை, விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான விளம்பரம் என்று மாற்றுவது,
ஆளில்லா சிறிய ரக பறக்கும் இயந்திரத்தை ஜி.பி.எஸ் மூலம் ஒரு வாகனத்தோடு இணைத்து பறக்க
வைப்பது, ப்ளூடூத் மூல்மாக விர்சுவல் லாகின் ஆவது, சென்சார்கள் பயன்பாடு, ப்ராக்ஸி
என்று புதிய உத்திகள் மூலமாக கதையை முன்னகர்த்திச் சென்றது சுவாரஸ்யம் என்றால், மகேந்திரனின்
எபிஸோட் முழுமையுமே அதரப் பழசான கிளிஷே. அதுவும் அவரின் முன்னாள் காதலி, சுப்ரமணியின்
மனைவியாவது, சுப்ரமணி வினோதனாவது எல்லாம் மிக எளிதாக யூகிக்க முடிந்த கதை. அதே போல,
வருண் – அருண், கயல்விழி – பூங்கொடி, அனந்தராமன் – சந்தானராமன் என்ற பெயர்க்குழப்பங்கள்
நாவல் முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இவை எல்லாம் சிறு பிழைகள் தான். நல்ல
வாசிப்பனுபவத்திற்கு இவை பெரிய தடையாக இருக்கவில்லை என்றாலும், கொஞ்சம் கவனித்திருந்தால்,
இவற்றை தவிர்த்து இருந்திருக்கலாம்.
செய்திகளாக
நாம் கடந்து வந்த பல நிகழ்வுகளை, நினைவில் வைத்து அதை புனைவின் தளத்தில், சரியான இடத்தில்
பொருத்துவது என்பது ஒரு கலை. அதை ஷான் தனது ஒருமுகச் சிந்தனையின் மூலமாக, கச்சிதமானதொரு
படைப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். கலை, வாசிப்பவனை கிளர்த்தெழச் செய்து, சமுதாயத்தின்
இழிநிலைகளை கேள்வி கேட்கச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் சரி தான். ஆனால் சமகாலத்தை
உள்ளது உள்ளபடி பதிவு செய்கின்ற ஆவணமாக இருக்கின்ற படைப்புகளும் காலத்தின் குரலைப்
பேசவே செய்கின்றன. அந்தவகையில், எடுத்துக் கொண்ட சட்டவரைவுக்குள், புனைவையும், அரசியல்
நிகழ்வுகளையும் (விமர்சனங்களை அல்ல), தொழில்நுட்பத்தையும் சரிவிகிதத்தில் கலந்து கட்டி
விளையாடியிருக்கிறார். உணர்வெழுச்சியின் வழியாக, நுட்பமான விவரணைகளோடு, வாசிப்பவனை
குற்றவுணர்ச்சிக்கோ அல்லது மிகை உணர்வுக்கோ ஆளாக்காமல், சுவாரஸ்யமாக வாசித்துச் செல்லக்கூடிய
வகையில், “செய்யப்பட்ட” நாவல் தான் வெட்டாட்டம். ஆனால் அந்த செய்முறையில் நேர்த்தியும்,
ஒழுங்கும், அபத்தமின்மையும் நிறைந்திருக்கிறது.
ஒரு வேளை,
சுவாரஸ்யமாக இருப்பது இலக்கியத்தில் தீட்டு என்ற தூய்மைவாதத்தைப் பாதுகாக்கப் போராட்டம்
நடக்குமென்ன்றால், “வெட்டாட்டம்” இலக்கியம் இல்லை என்று சொல்லிவிட்டுப் போகட்டும்.
என்ன கெட்டு விடப்போகிறது?
நல்ல பொழுதுபோக்குத்
தரத்துடன் கூடிய சுவாரஸ்யமான நாவல். வாழ்த்துக்கள், ஷான் மற்றும் யாவரும் பதிப்பகம்.
******
வெட்டாட்டம்
– நாவல்
ஷான்
யாவரும்.காம்
வெளியீடு
விலை: ரூ.
240
******
No comments:
Post a Comment