Saturday, December 15, 2018

சகமனிதனுடனான உரையாடல்


(முனைவர் வா.நேருவின் “நெருப்பினுள் துஞ்சல்” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்)


சாதியக் கட்டுப்பாடுகளும், பிற்போக்குத்தனங்களும். மூடநம்பிக்கைகளும் மண்டிக்கிடக்கும் சமுதாயத்தின் கடைநிலை வாழ்விலிருந்து, தன் கல்வியாலும் பணியாலும் மேலெழுந்து வரும் ஒருவன், தனது சக மனிதர்களையும், சூழ்நிலைகளையும் எவ்வாறு அறவுணர்வோடு அனுகுகிறான் என்பதைப் பேசுகின்றன, முனைவர். வா.நேரு அவர்கள் எழுதி, எழிலினி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் “நெருப்பினுள் துஞ்சல்” என்னும் சிறுகதைத் தொகுப்பு.

மொத்தம் பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொப்பில், இலக்கிய ரசனை மிகுந்த சொற்சரங்களோ, வர்ணனைகளோ, அலங்கார விவரிப்புகளோ இல்லை. மாறாக இக்கதைகள், நம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு நடந்த அல்லது தாங்கள் எதிர்கொண்ட அன்றாட சம்பவங்களை நேரடிப் பேச்சில் விவரிப்பதைப் போன்ற சரளமான மொழியில் அமைந்திருக்கின்றன. கதையின் மையக்கருத்தை முகத்தில் அடிப்பதைப் போலக் கூறும் இந்த எளிய நடை, படைப்பிற்கு பெரும்பலத்தை அளித்திருக்கின்றது. சாதாரணமாக வாசித்துச் செல்லும் இடங்களில் கூட திடீரென நம்மையும் அறியாமல் மனம் கனத்து, கண்களில் நீர் கோர்த்து விடுகின்றது.

நோயினாலோ, விபத்துக்களினாலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருபவருக்குத் துணையாக, வாசலில் காத்துக் கிடப்பவர்களின் மனவோட்டத்தையும், பதற்றத்தையும் சொல்லிச் செல்லும் கதை முக்கியமானது. அங்கே காத்திருக்கும் நேரங்களில் அருகில் இருப்பவர்களும் உருவாகும் நட்பு, பரஸ்பரம் தங்கள் துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஒருவருவருக்கு ஒருவர் ஆறுதல் வார்த்தைகள் கூறிக் கொள்ளுதல், உள்ளே எவரேனும் ஒருவர் இறந்துவிட்டால், அங்கே ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் எழும் பதைபதைப்பு, வெவ்வேறு வகையான பிரார்த்தனைகள், அவர்களின் துக்கங்களுக்கு வடிகாலாக மருத்துவமனை வளாகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பல மதங்களைச் சேர்ந்த வழிபாட்டுத்தளங்கள், அது குறித்த மாற்றுப் பார்வை என்ற பல்வேறு சித்திரங்களையும் வழங்குகிறது அக்கதை.

சமூகத்தின் அடி ஆழத்தில் கிடக்கிறவன், மேலே ஏறி வர அவனுக்கு இருக்கும் ஒரே ஆயுதமான கல்வியை எவ்வாறு இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும். தன்னால் முடியாததை ஒரு சவாலாக ஏற்று எவ்வாறு வெற்றி கொள்ள வேண்டும் என்பதை மிக யதார்த்தமான மொழியில் சொல்கிறது ஒரு கதை. கிராமப்புற மாணவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஆங்கிலப் பாடத்தைக் கற்பதை நீச்சல் அடிக்கப் பழகுவதோடோ அல்லது சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வதோடோ ஒப்பிடும் போது, அது ஒரு மாணவனின் மனதில் எத்தகைய நேர்மறை உணர்வுகளை விதைக்கிறது என்பதை அழகாக எடுத்துரைக்கிறது.

குடும்பத்தில் ஒரு விழா நடத்தும் போது ஏற்படும் பொருளாதார முடைகளைக் குறைக்க உதவும் விதமாக உருவான மொய் எழுதும் பழக்கம், காலப்போக்கில் பெருவட்டி போட்டுத் திருப்பிச் செலுத்தும் நிர்பந்தமாகி விட்டது. மதுரை பக்கங்களில் மொய் வசூல் செய்வதற்காகவே குடும்ப விழாக்கள் நடத்துவார்கள். இலட்சங்களில் வசூல் ஆகும் பணத்தை வட்டியோடு திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அவமானத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. அவ்வாறு சீர் செய்கையில் எழும் சமூக அழுத்தத்தைப் பேசுகிறது ஒரு கதை.
ஒரு புரோட்டா கடையில் வேலை பார்க்கும் மாஸ்டருக்கும், சப்ளை செய்பவருக்கும் இடையேயான இயல்பான கேலி, கிண்டல் கலந்த நட்பையும், அதில் ஒருவர் பிரியும் போது, மற்றொருவரின் இயல்பான மனநிலை மாற்றத்தையும், அதனூடாக தினம் பதினாறு மணி நேரத்திற்கு மேலாக உழைக்கும் ஒரு எளிய மனிதனின் உடல்நலம் பாதிக்கப்படும் போது, அவனது குடும்பம் அடையும் இன்னல்களையும், வெள்ளத்தில் மூழ்குபவனுக்கு கையில் கிடைக்கும் சிறு மடத்துண்டு போல உதவும் அரசுக் காப்பீட்டுத் திட்டம் பற்றியும், அரசின் இத்தகைய திட்டங்கள் பரம்பரை சொத்தை சொகுசாக அனுபவித்து வரும் சமூகப் புரிதலற்ற ஒருவனின் மனதில் என்னவிதத்தில் பதிவாகுகிறது என்பதையும் சொல்கிறது இன்னொரு கதை.

இக்கதைகள் முழுவதையும் வாசித்து முடித்த பிறகு, அவை மனதில் அதிக சலனத்தை ஏற்படுத்தி இருந்தன. சமுதாயத்தில் உள்ள சகமனிதர்களுக்கு உதவுவது என்பது ஏதோ அரசாங்கம் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுத்து ஆற்றக் கூடிய பெரும்பணிகளோ, சிறந்த தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் உதவிகளோ மட்டுமல்ல. எளியவன் ஒருவன் போகிற போக்கில் செய்துவிட்டுப் போகின்ற ஏதோவொரு நற்செயல் இன்னொருவனுடைய வாழ்க்கையையே மாற்றிப் போடக்கூடியதாக இருக்கலாம். பெரிய முனைப்புகள் இன்றி, தன் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் நல்லறத்தை விதைத்து விட்டுச் செல்லும் ஓர் எளிய மனிதனின் டைரிக்குறிப்புகளே இத்தொகுப்பில் உள்ள கதைகள். சரளமான வாசிப்பு அனுபவத்தையும் தாண்டி, இக்கதைகளின் மனிதர்கள் மனிதில் நிற்கிறார்கள்.

வாசிப்பு இன்பத்திற்காக கதைகளை அனுகும் சிறிய வட்டத்தைத் தாண்டி, இக்கதைகள் பொதுசமூகத்தின் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் உரையாடப்படவும், விவாதிக்கப்படவும் வேண்டுமென விரும்புகிறேன். நகர்ப்புற ஆடம்பரங்களுக்கு பரிச்சயமற்று, உள்ளடங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் மட்டுமன்றி, ஓரளவு பொருளாதார தன்னிறைவும், கேட்டது கேட்டவுடன் கிடைக்கும் குடும்பச் சூழ்நிலையில் வளரும் மேல்மத்திய வர்க்க குழந்தைகளுக்கும் இத்தகைய கதைகள் சென்று சேர வேண்டும். ஒரு கப் இட்லி மாவு விற்பனையில் ஒரு குடும்பம் ஜீவித்திருக்கும் சூழ்நிலையும், ஒரு கலைக்கல்லூரியில் இடம் கிடைக்க பெயர் தெரியாத எத்தனை பேரிடம் ஒருவன் சிபாரிசுக்கு அலைய வேண்டி இருக்கிறது என்பதையும், ஒரு புரோட்டா மாஸ்டரின் நெஞ்சு வலிக்கு அரசின் காப்பீட்டுத் திட்டம் எவ்வாறு அவனது உயிரைக் காக்கிறது என்பதையும், தொழிற்சங்கங்கள் இன்றும் ஏன் தேவையாய் இருக்கின்றன என்பதையும் சமூகத்தின் பல படிநிலைகளில் இருக்கும் பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். நல்லறத்தை வாழ்வின் அன்றாட நடைமுறையில் தன்னியல்பில் போற்றும் எழுத்தாளர் முனைவர் வா.நேரு அவர்களுக்கும், இத்தொகுப்பை பதிப்பித்து வெளியிட்டு இருக்கும் எழிலினி பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.

******************************************
நெருப்பினுள் துஞ்சல் (சிறுகதைத் தொகுப்பு)
முனைவர் வா.நேரு
எழிலினி பதிப்பகம்
பக்கங்கள்: 98
விலை: ரூ. 120/-
******************************************

(28/10/2018 அன்று தமுஎகச், பொள்ளாச்சி கிளை சார்பாக நடத்தப்பட்ட நூல் அறிமுக நிகழ்வில், தோழர்கள் மூலம் வாசிக்கப்பட்ட எனது கட்டுரை. நன்றி !)

No comments:

Post a Comment