Friday, May 20, 2016

அகாலத்தின் மெல்லிசை – கவிஞர் சமயவேல் பணிநிறைவில் சில நினைவுகள்

அலுவலகத்தை விட மருத்துவமனை பிடித்திருக்கிறது
வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில்
விரும்பித் தங்குகிறேன்.
இசை அரங்குகளை விட
சப்தங்கள் உயிர்ப்புடன் எழும்
பேருந்து நிலையங்களில் வெகு நேரம்
பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன்
சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும்
குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன்
கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து
வாசகர் கடிதம் எழுதுகிறேன்….. “
-    “இப்பொழுதெல்லாம்”, கவிஞர் சமயவேல்: ஜுலை 31, 2009

மத்திய தொலைத்தொடர்பு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த சமயவேல் அவர்கள் கடந்த 30/04/2016 அன்று பணி நிறைவு பெற்றார். இறுக்கங்களுக்குப் பெயர் போன கட்டுப்பெட்டியான துறையில் வேலை பார்த்தபடியே, அவர் நவீனக்கவிதை எழுதும் மனமும் வாய்க்கப்பெற்றவராக இருந்திருக்கிறார். உலக இலக்கியங்களோடு தொடர்ந்து பயணித்து வரும் சமயவேல் அவர்களுக்கு இந்த பணி ஓய்வு மிகப்பெரிய இளைப்பாறுதலையும், விடுதலையுணர்வையும், இடைவிடாத வாசிப்பிற்கான களமாக அமையும் என்று நம்புகிறேன். அவரைப் பற்றிய எண்னம் வரும் பொழுதெல்லாம், ஒருமுறை அவர் நேர்ப்பேச்சில் கூறியது தான் முதலில் தோன்றும், “I am in delearning process. தெரிந்த விஷயம் ஒன்வொன்றிலிருந்து நான் என்னை விடுவித்துக் கொண்டே வருகிறேன்”. அடர்ந்த வனத்தில் ஓங்கி உயர்ந்து வளர்ந்த பருத்த முதுமரத்தில் பெருங்கிளையொன்றின் உள்ளடங்கிய பொந்தில், காற்றின் இசையை ரசித்தபடி தன் இறகுகள் ஒவ்வொன்றாய் உதிர்த்துக் கொண்டிருக்கும் தனித்த ஆண் பறவையின் தோற்றம் அது.

சென்ற ஆண்டு, கவிஞர் சமயவேல் அவர்களின் “பறவைகள் நிரம்பிய முன்னிரவு” கவிதைத் தொகுப்பு வெளியான சமயத்தில், எங்களது அலுவலகத்தின் “வாசிப்போர் களம்” சார்பாக மதுரையில் ஒரு அறிமுகக்கூட்டம் நடத்தினோம். அப்போது அவர் தனது ஏற்புரையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் கவிதைத்தொகுப்பு தனக்கு மீண்டும் பழைய உத்வேகத்தைத் தருவதாகக் கூறினார். அதே சமயம், அலுவலக நண்பர்கள் பலர் கூடியிருக்க, தன்னை மேடையில் இருத்திப் பாராட்டுவது, தனது பணி ஓய்வுக்கான ஒத்திகையைப் போல இருப்பதகாவும் தெரிவித்தார். அக்கூட்டத்தில் அவர் பல விஷயங்களை மனம் திறந்து பேசினார். கல்லூரிப்படிப்பு முடித்துவிட்டு, எதுபற்றிய கவலையுமின்றி சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த வேளையில் கிடைத்த அரசுப்பணி எவ்வாறு தன்னை கட்டிப்போட்டது என்றும், அரசுத்துறையின் ஒழுங்குமுறை சட்ட திட்டங்கள், காலத்திற்கு ஒவ்வாத வெற்று நடைமுறைகள் ஆகியவற்றில் அமிழ்ந்து காணாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவே இலக்கியத்தை இறுகத் தழுவிக் கொண்டதாகவும் கூறினார். இந்த கெடுபடிகள் நிறைந்த அரசுக் கட்டுப்பாடுகளைத் தாண்டியும் இத்தனை வருடமாய் தனக்குள் இருக்கும் ஒரு நவீனக்கவிஞனை உயிர்ப்புடன் வைத்திருப்பது தனது பரந்துபட்ட வாசிப்பின் மூலம் தான் என்பதையும் குறிப்பிட்டார்.

“எளியவனின் அரசியல் ஆயுதம் மௌனம்” என்பார்கள். தனது அலுவக பணிநாட்களிலும் கூட சமயவேல் அவர்கள் அதனையே தான் கடைப்பிடித்திருந்தார் என்று நினைக்கிறேன். தான் உண்டு தனது வேலை உண்டு என்ற அளவில் தான் அவரது அலுவலக செயல்பாடுகள் இருக்கும். எடுத்துக் கொண்ட வேலையை எவ்வளவு திறம்பட செய்தாலும் கூட அதற்கான அங்கீகாரத்திற்காக காத்திருக்காதவராகவே இருந்து வந்தார். ஒரு சிறிய உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், பதவி மாறுதலில் அலுவலக வளாகத்து கட்டிடங்களின் பராமரிப்பு பொறுப்பாளராக அவர் பதவி ஏற்ற பொழுது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக முக்கியமானது. அது வரை அந்த வளக்கத்திற்குத் தேவையான தண்ணீர் வெளியில் இருந்து விலைக்குத் தான் பெறப்பட்டு வந்தது. அது பல ஆண்டுகளாக இருந்த நடைமுறை. மாதந்தோறும் தண்ணீருக்காக மட்டுமே பெரும் தொகை செலவாகிக் கொண்டிருந்தது. சமயவேல் அவர்கள் பதவியேற்றதும், அந்த வளாகத்திலுள்ள நீர்நிலைகளை ஆராய்ந்து, பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த மோட்டாரை சரி செய்ய வழிசெய்து வெளியிலிருந்து தண்ணீர் வாங்குவதை நிறுத்தினார். இதனால் நிறுவனத்திற்கு மாதம் ஆயிரக்கணக்கான ரூபாய் செவவு தவிர்க்கப்பட்டது. இது போன்ற சீர்மிகு நடவடிக்கைகள் அவ்வப்போது பல்வேறு விஷயங்களில் பல அதிகாரிகளால் செய்யப்படுவதும் உண்டு தான். ஆனால் அது செய்யப்பட்ட உடனேயே தன் பெயர் பொறித்த அடையாளத்தோடு மேல் மட்ட நிர்வாகத்திற்குத் தெரிவித்துவிடுவார்கள். ஆனால் சமயவேல் அவர்கள் தனது சிறப்பான பணிகளை வெளியே சொல்வதில் பெரிய விருப்பம் கொண்டிருக்கவே இல்லை. அது தான் அவரது இயல்பு. நவீன இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத இடத்தில் இருக்கும் சமயவேலின் இலக்கியப்பணி பற்றி உடன் வேலை செய்யும் அநேகம் பேருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவருக்குண்டான கவியுலகில் அவர் அன்றாட வாழ்வின் அபத்தங்கள் அண்டாமல் பார்த்துக் கொண்டார் என்று கூட சொல்லலாம்.

வாசிப்பில் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கவிஞர். சமயவேல் அவர்களுக்கு இந்த பணி நிறைவு இன்னும் அதிக நேரத்தையும், படைப்பாற்றலுக்கான மனநிலையையும் அளிக்கட்டும். வாழ்த்துக்கள் !


******
நன்றி: மலைகள் இணைய இதழ்: http://malaigal.com/?p=8195

No comments:

Post a Comment