Friday, May 20, 2016

இயந்திரம்

அலைபேசியில் பேசும் போதே குப்பென வியர்த்து விட்டது. உலகின் ஒட்டு மொத்த இயக்கமும் ஒரு நொடி நின்று போனது போலவே தோன்றியது. மனைவி கருவுற்றது உறுதியான நாளில் இருந்து, இந்த நாளுக்காகத்தான் காத்திருந்த்தான். சரியாக இப்போது பார்த்து இப்படியான சூழ்நிலை அமைந்து விட்டதே என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். எவ்வளவு சாதாரணமாக இருக்க முயன்றும், பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நேற்று காலை பரிசோதனைக்குச் செல்லும் போது கூட ஸ்கேன் செய்து பார்த்து விட்டு,குழந்தை தலை இன்னும் திரும்பவில்லை, இன்னும் பத்து நாட்களாவது ஆகும் என்று தான் மருத்துவர் கூறியிருந்தார். நீர்ச்சத்து மட்டும் சற்று குறைவாக இருப்பதால், இன்று காலை வந்து ஒரு ஊசி போட்டுக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள்.

இன்னும் பத்து நாட்களுக்கு அலுவலத்திற்கு விடுப்பு. எங்கும் வெளியே கூட செல்லப் போவதில்லை , மனைவி அருகிலேயே இருக்க வேண்டும் என்று நேற்று மாலை தான் நினைத்துக் கொண்டான். நினைத்த சற்று நேரத்திற்கெல்லாம், அலுவலகத்தின் தலையமையகத்திலிருந்து அதிமுக்கியமான அவசர அழைப்பு. ஹைதராபாத்தில் ஏதோ பெயர் தெரியாத ஊரின் ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் பழுதாகிக் கிடக்கும் இயந்திரத்தை இரண்டு நாட்களுக்குள் சரி செய்தால் தான் ஆச்சு என்று கட்டளை. மறுத்துக் கெஞ்சிய அத்தனை பதில்களுக்கும், கட்டாயம் செல்லவேண்டும், வேறு வழியில்லை என்ற ஒற்றை கட்டளை மட்டுமே மீண்டும் மீண்டும் வந்தது. சரி, பத்து நாள் இருக்கிறதே என்ற தைரியத்தில், பக்கத்து வீட்டு அக்காவை துணைக்கு இருக்கச் சொல்லி விட்டு வேறு வழியின்றி நேற்று இரவு தான் இரயிலேறினான். இரண்டு நாள் வேலை தான் என்றாலும் கிளம்பும் போதே சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஒன்றும் ஆகாது என்று மனதை சமாதானம் செய்து கொண்டு கிளம்பி வந்தால், இன்று சரியாக காலை பத்து மணிக்கு அலைபேசி அழைப்பு வந்து விட்டது.

“என்னங்க, நீர்ச்சத்து ரொம்ப கம்மியா இருக்காம், இன்னிக்கே சிசேரியன் செய்யனும்னு டாக்டர் சொல்றாங்க!”

“என்னப்பா சொல்ற, நேத்து தானே எல்லாம் நார்மலா இருக்குனு சொன்னாங்க?”

“ஆமாங்க, இன்னிக்கு மறுபடியும் ஒரு ஸ்கேன் செஞ்சு பார்த்தாங்க. பேபி முழு வளர்ச்சி வந்திருச்சு. நீர்ச்சத்து கம்மியாயிட்டா மூச்சு முட்ட ஆரம்பிச்சுரும். ரிஸ்க் வேணாம் இன்னிக்கே எடுத்துறலாம்னு சொல்றாங்க”

“சரி, டாக்டர் என்ன சொல்றாங்களோ, அது மாதிரி செய்யுங்க. நீ ஒன்னும் பதட்டப்படாதே.எல்லாம் நல்லபடியா நடக்கும். அக்காட்ட ஃபோனை குடு”

“அக்கா, ஒன்னும் டென்ஷன் ஆகாதீங்க. நான் எவ்ளோ சீக்கிரம் கிளம்பி வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வரப்பாக்குறேன். டாக்டரம்மாட்ட தெளிவா கேளுங்க. கண்டிப்பா சிசேரியன் தான் பண்ணனும், அதுவும் வெயிட் பண்ண முடியாது… இன்னிக்கே பண்ணனும்னு சொன்னாங்கன்னா, சரின்னு சொல்லீருங்க… வேற என்ன செய்ய.. ?”

வழக்கமாய், எதிர்பாராத நேரத்தில் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய வேலை தான் என்றாலும், கண்டிப்பாக பிரசவ நேரத்தில் உடன் இருக்க வேண்டும் என்று உறுதியாகத் தான் இருந்தான். அதற்காகவே இந்த ஒரு மாதத்திற்கு எந்த வெளியூர் வேலையும் இல்லாதவாறு அட்டவணை எல்லாம் அமைத்து வைத்திருந்தான். போதாக்குறைக்கு மேலாளரிடமும் அவசர வேலை எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் வேண்டாத குறையாய் சொல்லி வைத்திருந்தான். ஒருவன் எதைப்பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோனோ, அதில் சொதப்ப வைப்பது தான் விதியின் விளையாட்டு.

“ரெண்டு நாள் வேலை தான், ரொம்ப முக்கியமான பிராஜட். இங்கிருந்து போன மெஷின்ல ஏதோ பிரச்சனை, அதை சரி செய்ய மாட்டாம மொத்த வொர்க்கும் அப்படியே நின்னு போய் கிடக்கு. நீ போய்யிட்டு வந்துரு, என்ன?” என்று விதி முதலாளி குரலில் பேசும் போது ஊழியனின் மறுப்பெல்லாம் எடுபடவா போகிறது? இன்று தன் முதல் குழந்தையின் வரவுக்காக மருத்துவமனையின் வராண்டாக்களில் குறுக்கும் மறுக்குமாக கையை பிசைந்தபடி நடந்து கொண்டிருக்க வேண்டியவன், ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி கனரக வாகனங்கள் புழுதி இரைத்துச் செல்லும் இந்த மாநில நெடுஞ்சாலையின் பராமரிப்புப் பணிக்காக தாரும், டீசலும் கலந்த வாசனையோடு மூச்சு விட்டுக் கொண்டு நிற்கும் இந்த ராட்சச இயந்திரத்தை உயிர்ப்பிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றான்.

இரண்டு மணி நேர இடைவெளியில் மனைவியை அலைபேசியில் அழைத்தான்

“என்னப்பா, டாக்டர் என்ன சொல்றாங்க?”

“எத்தனை மணிக்கு ஆப்பரேஷன் வச்சுக்கலாம்னு கேட்டாங்க”

“இதென்ன, நம்மட்ட கேக்குறாங்க. அவங்களுக்குத் தெரியாதாமா?”

“இல்லங்க நல்ல நேரம் பார்த்து சொல்லச் சொன்னாங்க”

“எல்லா நேரமும் நல்ல நேரம் தான், குழந்தைக்கு மூச்சு முட்டும்னு சொல்றாங்க, பார்த்து சீக்கிரமா பண்ணச் சொல்லுங்க”

“ம்ம்ம்… நீங்க கூட இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும், நீங்க எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கீங்க!”

“என்ன லூசுத்தனமா பேசுற, நான் என்ன வேணும்னா வந்து விளையாட்டி இருக்கேன்…சும்மா டென்ஷனைக் கிளப்பாதே…  சரி நான் ஃபோனை வைக்குறேன். சார்ஜ் வேற கம்மியா இருக்கு”

ஒருவனின் ஆற்றாமை தான் கடுஞ்சொற்களை உற்பத்தி செய்கிறது. ஆறுதலாய் இரண்டு வார்த்தை பேசுவதற்காக அலைபேசியை எடுத்தவன், கடைசியில் அவள் மனம் புண்படும்படி பேச நேர்ந்து விட்டதே என்று அலைபேசியை வைத்த பின் அவனுக்குத் தோன்றியது. மீண்டும் அவளை அழைக்கத் தோன்றிய எண்ணம் வேலை பளுவில் பின்னுக்குச் சென்றது.

சாதாரண வேலை என்று சொல்லி முதலாளி அனுப்பி வைத்து விட்டார். இங்கு வந்த பார்த்த பிறகு தான் தோண்டத் தோண்ட பூதம் போல கிளம்பி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கிட்டத்தட்ட முழு இயந்திரத்தையும் கழற்றி மறுசீரமைப்பு செய்து மாட்ட வேண்டிய வேலை. இயந்திரம் பழுதாகி நிற்கும் நெடுஞ்சாலையின் சுற்று வட்டாரத்தில் மருந்துக்குக் கூட ஒரு கடை கண்ணி இல்லை. ஊற்றி வழியும் வியர்வையும், கிரீஸ் பிசுபிசுப்பும், தார் வாசமும், அவ்வப்பொழுது அடிக்கும் புழுதிக் காற்றும், காலையிலிருந்து எதுவும் சாப்பிடாத பசியும் சோர்வும் சேர்ந்து வேலையை இன்னும் கடுமையாக்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் கூட வேலையை சீக்கிரம் முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும் என்ற ஆர்வம், பணியை துரிதப்படுத்திக் கொண்டே இருந்தது. அந்த இயந்திரத்தோடு உழன்று கொண்டிருந்த பத்து மணி நேரமும், மனது மனப்பாடம் செய்த செய்யுளை ஒப்பிப்பது போல, “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்”என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தது.

இத்தனை நாளும் கணவன் மனைவிக்குள் மகனா, மகளா என்று ஒரு பெரிய போட்டியே நடந்து வந்தது. இவன் எப்போதும் தங்களுக்கு மகள் தான் பிறக்கும் என்று உறுதியாய் நம்பிக் கொண்டிருந்தான். அவளோ,“என் வயித்துல இருக்க பிள்ள எனக்குத் தெரியாதா,நிச்சயம் பையன் தான்” என்று வாதிடுவாள்
“பையன், பையன்னு சொல்லிட்டு இருக்க, கடைசீல பொண்ணு பிறக்குறப்ப ஏமாந்து போயிடாதே” என்று அவளை வம்பிழுப்பாள்

”அதெல்லாம் இல்ல, பையன் தான் பிறப்பான். நீங்க பார்க்கத்தானே போறீங்க!” என்று அவளும் விடாமல் அடம் பிடிப்பாள்

”பாரு, ஏழாவது மாச ஸ்கேன்ல ஒன்னும் சொல்லலேல்ல, அப்ப பொண்னு தான்,பையன்னா நர்ஸ்மார்க குறிப்பால சொல்லிருப்பாங்க”

“நீங்க என்ன வேண்ணா சொல்லுங்க என் பையனை எனக்குத் தெரியாதா!”

“சரி, எந்தக்குழந்தைன்னா என்ன, நல்லபடியா பிறந்தா சரி தான்” என்று இவன் தான் கடைசியில் இறங்கிப் போவான்.

இன்று காலையில் இருந்து அவனையும் அறியாமல் மனம் “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்” என்று வேண்டுவது ஏனென்று அவனுக்கும் புரியவில்லை. இரண்டு நாட்கள் பிடிக்கும் வேலையை முழுமூச்சாய் பத்து மணி நேரத்தில் சரி செய்து விட்டான். ஒரு வழியாய் வேலையை முடித்து இயந்திரத்தை முழுத்திறனில் இயக்க விட்டு சோதித்ததில் முழு திருப்தி. மேலாளரை அழைத்து தகவலை சொல்லி விட்டுக் கிளம்பலாம் என்று அலைபேசியில் எடுத்தால் சிக்னல் சுத்தமாக இல்லை. பிறகு சிறிது தூரம் நடந்து அலைபேசியை தூக்கிப் பிடித்துப் பார்க்கும் போது ஒற்றைக் கோடு வந்தது. அவசரமாய் மேலாளரை அழைத்து வேலை முடிந்த விஷயத்தை சொல்லி விட்டு வைக்கும் போது பேட்டரி 1 சதவீதத்தில் இருந்தது. இன்னும் ஒரு அழைப்புத் தாங்கும் என்று நினைத்தவனாய் மனைவிக்கு அழைத்தான். பதிலில்லை. மீண்டும் முயற்சித்தான்.அப்பொழுதும் பதிலில்லை.

சரி, உடனிருக்கும் அக்காவை அழைக்கலாமென அவர்கள் எண்ணுக்கு அடித்தான். நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு, “எவ்ளோ நேரமாப்பா, உன் நம்பருக்கு ட்ரை பண்றது. அவள இப்போ தான் ஆப்பரேஷ்ன் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போறாங்க. அதுக்கு முன்னாடி அவ உன்கிட்ட ஒரு வார்த்தை பேசனும்னு முயற்சி செஞ்சுட்டே இருந்தா… உன் ஃபோன் நாட் ரீச்சபிளாவே இருந்தது…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அலைபேசி உயிரை விட்டு விட்டது.

சில தருணங்கள் அப்படித்தான் அமைந்து விடுகிறது. எழுதி வைத்து நிகழ்ச்சி நிரல் படி நடக்குற விஷயமெல்லாம் வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியுமா என்ன? பெற்று வளர்த்த அம்மா அப்பாவை விட்டு விட்டு எந்த நம்பிக்கையில் தன்னோடு வந்தாளோ அதனை இன்றளவு இம்மி பிசகாது காப்பாற்றி வருவதாகத் தான் நம்புகிறான். இருந்தும் இப்படி ஒரு சூழ்நிலை இன்று அமைந்து விட்டது. தான் உடலளவில் அவள் அருகில் இல்லாவிட்டாலும் கூட தனது நினைவு முழுதும் அவளைச் சுற்றிக் கொண்டிருப்பதை அவளும் இந்நேரம் உணர்ந்து கொண்டு தான் இருப்பாள் என முழுதாக நம்பினான்.அத்தகைய புரிதல் இல்லாமல் என்ன தாம்பத்யம்!.  முன்னும் பின்னுமாக நினைவுகள் முந்தியடிக்க ஸ்தம்பித்தவனாய்ச் சிறிது நேரம் அசைவற்று நின்றான்.

பின் சுதாரித்துக் கொண்டவன் மனதில், சரி, அறுவை சிகிச்சை முடிய எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். அதற்குள் நகர எல்லையை அடைந்து விட்டால், அங்கிருந்து தொலைபேசி செய்து தகவலை தெரிந்து கொள்ளலாம், அதற்கு முன் இங்கிருந்து உடனே கிளம்பு,உடனே கிளம்பு, என பரபரக்கத் துவங்கியது. நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த கனரக வாகனங்களுக்கு சைகை காட்டி நிறுத்த முயற்சித்தான். நான்கைந்து வண்டிகள் நிற்காமல் செல்ல, பின் வந்து நின்ற லாரி ஒன்றில் தொற்றிக் கொண்டான். நகரத்திற்குள் சென்றதும், அங்கிருந்து ஏதேனும் வாடகை ஊர்தியோ, அல்லது லிஃப்டோ கேட்டு அரை மணி நேரத்தில் இரயில் நிலையத்தை அடைந்து விட்டால் எப்படியும் நள்ளிரவு பணிரெண்டு மணி இரயிலை பிடித்து விடலாம். அப்படியானால் நாளை இரவுக்குள் ஊருக்குச் சென்று பொண்டாட்டியையும், பிள்ளையையும் பார்த்து விடலாம். நினைத்துக் கொண்டே வந்தவனுக்கு கண்களில் இருந்து நீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்”என்ற பிரார்த்தனை வலுத்துக் கொண்டே வந்தது.


நன்றி: பதாகை மின்னிதழ் - https://padhaakai.com/2016/01/17/machine-story/

No comments:

Post a Comment