Saturday, December 10, 2011

மதுரை ”போஸ்டர்”மதுரை மண்ணின் மைந்தர்களின் ”போஸ்டர் கிரியேடிவிட்டி”க்கு அளவே கிடையாது. இந்த கலாச்சாரம் வேறூன்றி, செழித்து வளர என்றும் பெருந்துணையாய் இருப்பவர்கள் நம் திரைநாயகர்கள் தான். தீபாவளிக்கு அவர்கள் தலைவர் படம் ரிலீசானால் போதும், போஸ்டர்கள் தொடங்கி கட் அவுட், கொடி, தோரணம், பாலாபிஷேகம் இப்போது பீராபிஷேகம் என கலக்குவார்கள், பொங்குவார்கள், வழிவார்கள். அதே போல, தலைவர் படம் வெளிவராத போது துக்க தீபாவளி கொண்டாடவும் தயங்க மாட்டார்கள். இரங்கல் செய்தி போல கண்ணீர் சிந்தும் கண்கள் படமெல்லாம் போட்டும் கறுப்பு பார்டர் கட்டி கொட்டை எழுத்துகளில் “தலைவா, உன் படம் வெளிவராதபோது தீபாவளி ஒரு கேடா!” என உருகியிருப்பார்கள். இதெல்லாம் சும்மா பப்ளிசிட்டிக்காக மட்டும் செய்வதில்லை. உண்மையிலேயே ரசிகர் மன்றத்தினர் முச்சந்திகளில் பந்தல் போட்டு கறுப்புக் கொடியேற்றி, தீபாவளி அன்று முழுதும் தலைவரின் சோகப்பாடல்கள் ஒலிக்க விட்டு, அந்த பந்தலிலேயே இழவு காத்த நிகழ்வுகளெல்லாம் நடந்திருக்கின்றன.

சிறிது நாட்கள் முன்பு நடிகர் ரஜினி உடல்நலமில்லாமல் இருந்த போது சில ஆட்டோக்களின் பின்னால் எழுதியிருந்த வாசகம் நேரடியாக மதுரை மீனாட்சிக்கு வேண்டுகோள் எல்லாம் வைத்தது. “தாயே மீனாட்சி, ரஜினிக்கு சக்தி கொடு!”என்று அந்த வாசகத்தை வாசித்த ஒவ்வொருவரும் தங்களை அறியாமலே ரஜினிக்காக வேண்டிக் கொண்டனர். இப்போது “எமனையே எதிர்த்தவன், எவனையும் எதிர்ப்பான்” என ரஜினி பிறந்த நாள் போஸ்டர் வரை தூள் பரத்திக் கொண்டிருக்கிறார்கள்.

“கடவுள் முரளி வாழ்க” - சாலையில் போகும் போது, என் போல் சைடில் பராக்கு பார்த்துக் கொண்டு செல்லும் ஒவ்வொரு மதுரைக்காரனுக்கும் இந்த வார்த்தைகளுக்கென இருக்கும் பிரத்யேக ஃபாண்ட் இந்நேரம் மனதில் தோன்றியிருக்கும். கரிக்கட்டையில் கிட்டத்தட்ட மதுரையின் அனைத்து சந்து பொந்துகளிலும் வருடக்கணக்காக இந்த வார்த்தைகள் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒரே நபர் தொடந்து சளைக்காமல் நடிகர் முரளியின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறார், கிட்டத்தட்ட தனிநபர் புரட்சி போல அதுவும் முரளி இறந்த பிறகும் கூட.

நடிகர்கள் போஸ்டர் அடிப்பதன் நீட்சியாக மக்கள் அடுத்த நிலைக்கும் சென்று விட்டனர். கல்யாணம், கருமாதி, காதுகுத்து, பூப்புனித நீராட்டுவிழா என சகலத்துக்கும் போஸ்டர் அடித்து கலக்கிக் கொண்டிருப்பார்கள். அவற்றில் அவர்கள் அடிக்கும் வாசங்கள் தான் இன்னும் ‘ஹைலைட்”. ஃபிளக்ஸ் வராத கற்காலத்திலும், மக்களின் கிரியேடிவிட்டிக்கு குறைவே இருந்ததில்லை. “வீட்ல விஷேசங்க” என தொடங்கி, ”இப்படிக்கு நாட்டுக்கொரு நல்லவன் ரஜினி கொலைவெறி குரூப்ஸ்” என முடிவது வரைக்கும் இடையில் ஏகப்பட்ட அம்புக்ள், ஆர்ட்டீன்கள், புறாக்கள், ஏஞ்சல்கள் என போஸ்டர்கள் கலைகட்டும். பிறகு தற்கால டிஜிடல் யுகத்தில் இந்த கலாச்சாரம் பன்மடங்கி பரிணாம வளர்ச்சியடைந்து திரை நடிகர்களின் ஸ்டில்களில் தலையை மட்டும் வெட்டி விட்டு அதில் நம்மவர்கள் புது அவதாரமெடுத்திருப்பார்கள். பாட்ஷா ரஜினி உடமபில் நமது பால்பாண்டியோ, முத்துக்கருப்பனோ தன் நண்பனின் கல்யாணத்தில் மண்டப வாசலில் பத்துக்கு பதினாறு மெகா சைசில் சொடக்குப் போட்டுக் கொண்டிருப்பதை இப்போதும் பார்க்கலாம். அதிலும் ஒரு வெரைடி. பாட்ஷாவிற்கு அருகில் இருக்கும் நாய்க்கு பதிலாக சிங்கமோ, புலியோ தான் உருமிக் கொண்டிருக்கும். இதை “ப்ராண்ட் இம்ப்ரவைசேன்” என்ற தலைப்பில் ஐ.ஐ.எம். மாணவர்கள் பாடமாகப் படிக்கலாம்.

இதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும். நம் அரசியல் தலைவர்களுக்கு தொண்டர்கள் அடிக்கும் பேனர்க்ள் தான் லைம்லைட். காந்தி, பெரியார், அன்ணா, பகத்சிங், வீரசிவாஜி, முருகன், சிவன், ஐயப்பன், காளி, மேரி, மேரி கையில்ருக்கும் குழந்தை என சகலரின் தலையையும் தயவு தாட்சண்யமின்றி வெட்டிவிட்டு தற்கால தலைவர்களின் தலையை பொருத்தும் காலங்களும் வந்துவிட்டன. ஏன் ஒரு முறை சச்சின் தலையைக் கூட வெட்டியிருக்கிறார்கள். ஆனால், சும்மா சொல்லக் கூடாது. நல்லா தமாஷா இருக்கும். இந்த போஸ்டர்களைப் பார்த்து விட்டு நடிகர்கள் கூட அப்போதைக்கப்போது சாமி வேடம் போடுவார்கள். அது தனி ட்ராக். ஆனால் அரசியல்வாதிகள் குறிப்பால் தன்செயல் உணர்த்துவதில் வல்லவர்கள். இவர்கள் சூசகமாக தங்கள் வளர்ச்சியை போஸ்டர்கள் மூலமாகவே தெரிவிப்பார்கள். முதலில் அல்லக்கைகளாக இருக்கும் போது, தலைவரின் படத்தை ஆளுயரம் போட்டு, கால்களுக்குக் கீழே ”உண்மைத்தொண்டன்” என தங்கள் பெயரை மட்டும் போடுவார்கள். பின்பு அல்லக்கை தலைவரின் பார்வையில் பட்ட பிறகு, கீழே பெயருடன் வட்டத்துக்குள் போட்டோவும் சேர்ந்து கொள்ளும். பின்பு வட்டம், நகரம் என கொஞ்சம் சேர்க்க ஆரம்பித்த பிறகு, தலைவருக்கு மாலையோ சால்வையோ அணிவிப்பது போன்று தலைவருக்கு சரி அளவில் போட்டோ எடுத்து போஸ்டர் ஒட்டப்படும். பிறகு செட்டிலான பிறகு, தலைவர் போஸ்டரின் வலது மேல் மூலைக்கு சென்று விடுவார். இவர் ஃபுல் சைசில் நின்று கொண்டிருப்பார். கீழே கால்களுக்கருகில் “உண்மைத்தொண்டன்” என இன்னொரு அல்லக்கை உருவாகி இருக்கும். 

சிலர் விஷயங்களை சிலர் செய்யும் போது, ஒரு சிறிய ஏளன சிரிப்போடு கடந்து விடுவோம். சிலருக்கு ஓவர் ஐஸ் வைத்து, வேடிக்கை பார்க்கும் நமக்கே கூச்சம் வர வைத்து விடுவார்கள். சில அரைவேக்காடுக்ளோ மினிமம் வொர்த் கூட இல்லாத சில்லரைகளுக்கும் “ஆகா, ஓகோ”வென்று போஸ்டர் அடிப்பார்கள். சரி என்று சிறு எரிச்சலோடு அதையும் கடந்து சென்று போக முடியும். ஆனால் இன்று ஒரு போஸ்டரைப் பார்த்தேன். சிரிப்பு வரவில்லை, கூச்சம் வரவில்லை, எரிச்சல் வரவில்லை. சத்தியமாய் சொல்கின்றேன், காறித் துப்ப வேண்டும் போலத் தோன்றியது. அந்த போஸ்டர் “பாரத மாதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தலைப்பிட்டு ஓர் இத்தாலிய பெண்மணிக்கு பாரதமாதா வேடம் போட்டு ஒட்டியிருந்தார்கள். Shame on you, Madurai. 
  
******

8 comments:

Anonymous said...

// “பாரத மாதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தலைப்பிட்டு ஓர் இத்தாலிய பெண்மணிக்கு பாரதமாதா வேடம் போட்டு ஒட்டியிருந்தார்கள். // Shame on you, Madurai. ******

-Punching knock-

Ramani said...

மதுரையை அசிங்கப் படுத்துவதில்
போஸ்டருக்கு முக்கிய பங்குண்டு
அதை மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
த.ம 2

Anonymous said...

evan andhdha postarai achchadiththano avanai seruppal adikkavendum

வெண் புரவி said...

மதுரை மக்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்தான்.
ரசித்தேன்.

Balaraman said...

ஆஹா... மதுரை என்றதுமே, போஸ்ட்டர், இட்லி, மல்லிகை, அரிவாள், இரத்தம் எல்லாமே நினைவுக்கு வருகிறது. DOTSOFT தினங்களில், மதுரைக்கு படையெடுத்துக் கொண்டிருக்கும் போது, இந்த வகையிலான போஸ்ட்டர் களைப் பார்த்து, திகைத்துப் போயிருக்கிறேன். போஸ்ட்டர்கள் மதுரையில் ஒரு தனிப்பட்ட கலாச்சாரம் போலிருக்கிறது.

கடந்த, நவம்பர் 23-ந்தேதி அன்று சபரிமலை சென்று வந்தேன். திரும்பும் போது ஒரு போஸ்ட்டர், யாரையோ “தமிழர்களின் நுரையீரலே.. வள்ளலே..” என வாழ்த்திக் கொண்டிருந்தது. யாரப்பா அது தமிழர்களின் சுவாசம் எனப் பார்த்தால், யாரோ ஒரு உள்ளூர் மேளம்! நல்ல வேளை இதயம், நுரையீரலோடு நிறுத்திக் கொண்டார்கள். இன்னும் கொஞ்சம் தீவீரமாக யோசித்து, கிட்னியே... அதுவே இதுவே என போஸ்ட்டர் அடிக்காமல் போனார்களே!

மதுரைக்கு போட்டியாக, இங்கு பாண்டிச்சேரியில் ஒரு முதல்வர் இருக்கிறார். நகர் பூராவும், சாலையின் இருமருங்கிலும் போஸ்ட்டர்களை நட்டு, புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்கிறார். போஸ்ட்டர்களில் ‘தலை’ மட்டும் அவருடையது; உடல் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், எந்திரன், ஒபாமா, திருமால், முருகன் என என்னவெல்லாம் சாத்தியமோ அதுவெல்லாம்! வாழக தமிழர்கள்!!
http://orbekv.blogspot.com/

Anonymous said...

"அவிங்க அப்டி போஸ்டர் போற்றுகைய்ந்க , இவிங்க இப்டி போஸ்டர் போற்றுகைய்ந்க, நாம இன்னும் வித்தியாசமா ஒத்த போஸ்டர் போடனும்ன்னே " - என்று கொலைவெறியோடு போஸ்டர் அடித்து ஒட்டி தள்ளுவது மதுரை கரைந்களின் creative special !.
//ஏன் ஒரு முறை சச்சின் தலையைக் கூட வெட்டியிருக்கிறார்கள்.//
- ஒரு முறை நேதாஜி ரோடு முக்கில் சச்சின், பாபா getup-l symbol காட்டி சிரித்து கொண்டிருந்ததாக நினைவு.

இவிங்க கொடுக்குற "தலைவரே" அலப்பறையில் "அ" -நாவையும் "கும்கி" என்று விளித்தது சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது வீணாக போகவில்லை என்று நினைக்க தூண்டியது.
//ஒரே நபர் தொடந்து சளைக்காமல் நடிகர் முரளியின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறார்//
"தலைவாசல்" விஜய்-க்கும் ரசிகர் மன்றம் (கள்) மதுரையின் சந்து பொந்துகளில் இயங்கி வருவதாக தெரிகிறது.

சூப்பர் சித்தப்பூ !!!

( //என் போல் // ---இது சரியா ? , இல்லை "என்னைப்போல்" என்று எழுதுவது சரியா? )

-மதன்

வி.பாலகுமார் said...

அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

சித்திரவீதிக்காரன் said...

முரளி புகழ் பாடிக்கொண்டிருக்கும் அந்த மனிதரின் பெயர் பெருமாள். நாங்களும் பாலிடெக்னிக் படிக்கும் போது பேருந்தில் 'கடவுள் முரளி வாழ்க, சீறி வரும் காளை ராமராஜன் வாழ்க' என்று கத்திக் கொண்டு வந்தது ஞாபகம் வந்தது. நிறைய பிளெக்ஸ்களை பார்த்து சிரித்துக்கொண்டே செல்வேன். \\பாரத மாதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தலைப்பிட்டு ஓர் இத்தாலிய பெண்மணிக்கு பாரதமாதா வேடம் போட்டு ஒட்டியிருந்தார்கள்\\ கட்டாயம் இது அவனுகளே கட்சி விளம்பரத்துக்காக காசு கொடுத்து அடித்த போஸ்டர்தான். சந்தேகமேயில்லை. நல்லவேளை அந்த பார்க்கவில்லை.
பகிர்விற்கு நன்றி!

Post a Comment