Monday, November 28, 2011

பெயரில்லாதவை - 28/11/2011


இப்பொழுதெல்லாம் ஏன் நிறைய எழுதுவதில்லை என்ற கேள்வியை இப்பொழுதெல்லாம் நிறைய முறை கேட்க வேண்டியிருக்கிறது. (ஒன்றுக்கு மேற்பட்டு மொத்தம் "இரண்டு" முறை கேட்கப்பட்டதால் "நிறைய" எனக் கொள்க).  "நான் எப்பொழுது நிறைய எழுதினேன்" என்ற பதில் கேள்வி தொண்டை வரை வந்தாலும் அப்படியே உள்ளிழுத்துக் கொண்டு மையமாய் ஒரு புன்னகையை மட்டும் வீசி விடுகிறேன். பின்னே, அரசுத்துறையில் இருப்பதனால் பொத்தாம் பொதுவாக பதில் சொல்லியே பழக்கமாகி விட்டது. சரி, "எழுதாமல் இருப்பதற்கான காரணத்தையே எழுதினால் என்ன" என்று கூட நினைப்பதுண்டு. ஆனால் அதுவும் அப்படியே காற்றோடு போய் விடும். 

உண்மையில் எழுத நேரமெல்லாம் இருக்கத் தான் செய்கிறது. எழுத 1008 நிகழ்வுகளும் நம்மைச் சுற்றி நிகழத்தான் நிகழ்கிறது. அப்படி, தோதாக எழுத ஏதாவது விஷயம் கிடைத்து, எழுத உட்காரும் பொழுது கை மணிக்கட்டு வரை வரும் எழுத்து, விரல்களில் தட்டச்ச வராது. அதற்கு என்னை மட்டும் குறை சொல்ல முடியாது. நேரடியாக மனதிலிருந்து மானிட்டருக்கு மாற்றும்  தொழில்நுட்பம் வளராதது காலத்தின் போதாமை. சரி "வீடியோ ப்லாக்" பண்ணலாம்னு நீங்கள் என்னை மடக்க நினைக்கலாம். அதையும் முயற்சி செய்து பார்த்தேனே. என்ன பிரச்சனையென்றால் பேச ஆரம்பித்தாலே வாயிலிருந்து வெறும் காற்று மட்டும் தான் வரும். மேலும் பதிவுக்கு வருபவர்களுக்கு என் பதிவை கேட்பது, கேட்டுக் கொண்டே என் முகத்தைப் பார்ப்பது என ஒரே நேரத்தில் இரட்டை தண்டனை கொடுப்பது முறையல்லவே. போகட்டும், இனி(யாவது) தொடர்ந்து எழுத வேண்டும். யாருக்காகவும் இல்லையென்றாலும், எனக்காகவாவது.

நாட்டு நடப்புகள் ரொம்பவும் தான் ஊன்றி கவனிக்கிறோம் போல. நேற்று ஒரு விநோத கனவு(ஆனால் இன்றைய ஆட்சி முறையில் சாத்தியமானது தான்). கடந்த ஆட்சிக் காலங்களில் பள்ளிக் கட்டணம் மிகவும் குறைவாக வசூலிக்கப்பட்டு விட்டது. அதனால் அரசுக்கு மிகுந்த வருவாய் இழப்பு. எனவே அதிகம் கட்டணம் செலுத்தி அனைவரும் தங்களது பனிரெண்டாம் வகுப்பை முடிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கத் தவறுபவர்களுக்கு அவர்கள் படித்த மேற்படிப்பு செல்லாது என்று சட்டம். பிறகென்ன அடுத்த சீன்... எங்கள் பள்ளியின் +2 வகுப்பில் அமர்ந்து இருக்கிறோம். பொதுவாக பள்ளி சமயத்தில் நான் பேசுவது மிகவும் குறைவு. தொண்டை கிழிய வாக்கு வாதம் செய்யப் பழகியதெல்லாம் கல்லூரி சமயத்தில் தான். பிறகு பொதுத்துறை வேலைக்கு வந்த பின் சங்க நடவடிக்கைகளும் சேர்ந்து பேசினாலே "ஹை டெசிபல்" என்றாகி விட்டது. ஆனால் கனவில் பள்ளித் தோழர்களிடமும், ஆசிரியர்களிடமும் இந்த சட்டத்திற்கு எதிராய் பெரிய விவாதம். ஒரு மாதிரி, இப்பொழுதுள்ள கேரக்டரில் பள்ளியில் படித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற மாயா யதார்த்த கனவு. நன்றாகத் தான் இருந்தது. :)

அது போல விழித்துக் கொண்டே காணும் கனவுகளும் சில உண்டு. எனக்கு மரபுசாரா தொழில்கள் மீது கொஞ்சம் ஈர்ப்பு அதிகம். கோழி, முயல் பண்ணை வளர்ப்பது, உணவகம் நடத்துவது தொடங்கி கார்ட்டூன் சித்திரங்களுக்கு பின்னனி குரல் கொடுப்பது, விவசாயம் பார்ப்பது, புல்லாங்குழல் இசைப்பது, ஓவியம், கணினி வரைகலை பயில்வது என கனவுகள் அவ்வப்போது வந்து போகும். எதையும் நடைமுறைப் படுத்தும் முயற்சிகளை இதுவரை துவங்கியதில்லை. இருந்தாலும் நீண்ட காலத் திட்ட்ங்களின் பட்டியல் மட்டும் தொடர்கிறது. பார்ப்போம், மனமும் உடலும் உயிர்த்திருந்தால் தொடங்க வேண்டும்.

சரி, மீண்டும் எழுதத் துவங்கியாகி விட்டது. தொடர வேண்டும். அதற்கு முன் தொடர்ந்து வாசிக்க வேண்டும். வாசிக்க, வாசிக்க தான் எழுத வருமாம், பெரியவர்கள் சொல்கிறார்கள்.

ஆனாலும், "இவ்வளவு கொடுமையிலும் நீ ஏன் கண்டிப்பா எழுதியே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கிறாய்" என நீங்கள் கேட்பதும் தெரிகிறது. கடைசி வரை வாசித்த உங்களுக்கு அதைக் கேட்கும் உரிமையும் இருக்கிறது. நாளை முதல் பத்து நாட்களுக்கு ஒரு தேர்வுக்காக படிக்க வேண்டும். இப்படிப்பட்ட சமயங்களில் உற்சாகமான மனநிலையில் இருப்பது அவசியம். குறைவில்லா உற்சாகத்தை பதிவெழுதுவது இப்போது வரை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான்...  :)

4 comments:

நேசமித்ரன் said...

வெல்கம் பேக் தலைவரே !

Anonymous said...

ha ha ha very nice enjoyed a lot!!! after a gap enjoyed ur writing. and all the best for ur exams.
maha

Anonymous said...

//நேரடியாக மனதிலிருந்து மானிட்டருக்கு மாற்றும் தொழில்நுட்பம் வளராதது காலத்தின் போதாமை.//

very nice

-Madhan

Anonymous said...

//பின்னே, அரசுத்துறையில் இருப்பதனால் பொத்தாம் பொதுவாக பதில் சொல்லியே பழக்கமாகி விட்டது. //

"நான் ஏன் அப்டி செஞ்சேன்னா ...........நாளைக்கு யாருக்கும் எந்த பிரச்சினையும் வராம , தொலைநோக்கு பார்வையோடதான் ஒரு முடிவு எடுக்க முடியும்.....என்னோட எடத்ல இருந்து பாருங்க தெரியும்....இந்த நாற்காலில உட்கரந்துட்டு என்ன பண்ண முடியும் என்ன பண்ண முடியாதுன்னு ..சும்மா வெவரம் இல்லாம பேசாதீங்க தம்பி...." - ரகுவரன் பேசும் வசனம் , முதல்வன் திரைபடத்திலிருந்து.

அரசுத்துறைன்னாலே அப்டி ஆயிடுச்சு......ம்ஹும் என்ன பண்றது?.....

-மதன்

Post a Comment