Monday, December 12, 2011

"ரஜினி எனும் யானை"இன்னும் நினைவிருக்கிறது. சிறு வயதில் அப்பா “மாவீரன்” படத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். படம் பார்த்துவிட்டு வந்து என் தம்பி, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து கையில் “மாவீரன்” எனறு எழுதத் துவங்கிவிட்டான். அம்மா நடுவில் தடுத்து நிறுத்தி, கத்தியை பிடுங்கி விட்டு, முதுகில் நாலு சாத்து சாத்தினார். கையில் வழியும் ரத்தத்தைப் பொருட்படுத்தாமல் அழுது கொண்டே, “நான் ரஜினி. அப்படித்தான் பண்ணுவேன்” என்றான். அப்போது அவன் சிறுவன் கூட இல்லை, வெறும் நான்கு வயது குழந்தை. அதிலிருந்து நாங்கள் சினிமா பார்ப்பதற்கே கூட தடை உத்தரவெல்லாம் கூட சில வருடங்கள் அமலில் இருந்தது. எனக்கும், என் தம்பிகளுக்கும் முதன்முதலில் ரஜினியிடம் ஈர்ப்பு வந்தது அந்த படத்தில் தான். இது போன்ற விஷயங்கள் எங்கள் வீட்டில் மட்டுமல்ல, ரஜினியின் பெயரால் ‘கோட்டித்தனம்’ செய்யும் குழந்தைகள் எல்லா வீட்டிலும் நிறையவே இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். எல்லோரும் சொல்வது போல ரஜினி என்பது ஒரு மந்திரச்சொல். தமிழ்நாட்டின் குடும்பங்களில் இந்த நாற்பது வருடங்களில் அவரது ஆளுமையோ, செய்கையோ, பாதிப்போ இல்லாமல் எந்தவொரு குழந்தையும் வளர்ந்திருக்காது. சிலர் பதின்ம வயதைத் தாண்டிய பிறகு ரஜினி ரசிப்பை மனதிற்குள் மட்டும் வைத்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் தங்களது “ப்ரஸ்டீஜ் சிம்பலாக” ரஜினி ரசிகன் என்ற விசிட்டிங் கார்டை உபயோகிக்கிறார்கள்.

ரஜினி என்ற கலைஞனை ரசிப்பது, ஏன் விமர்சிப்பது என்பது கூட ஒரு வகையில் சரி தான். கடந்த பதினைந்து ஆண்டுகளில் அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளிலும் கூட ஏகப்பட்ட சர்ச்சைகளும் உண்டு. இதெல்லாம் அவரவர் தம் மனநிலைக்கேற்ப ரஜினி என்ற நடிகனை, ரஜினி என்ற தனிமனிதனின் கருத்தை ஏற்கவோ, மறுக்கவோ வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இன்னொரு வகை இருக்கிறது. ரஜினி என்ற பிம்பத்தை சந்தைப்பொருளாக்கி கூவிக்கூவி விற்பது. 

சமீப காலமாக ரஜினியின் ரீச் இந்தியா முழுமைக்கும், உலகின் மற்ற சில பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் ரஜினி பிம்பத்தை கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நோக்கம் ரஜினியைப் பாராட்டுவதாகவோ, விமர்சிப்பதாகவோ கூட இருப்பதில்லை. ரஜினியை வைத்து முடிந்தமட்டும் கல்லா கட்டுவது. இவர்களின் வியாபாரத்திற்கு ரஜினி இல்லையென்றால் நாளை புகழின் உச்சத்திலிருக்கும் இன்னொரு பிம்பம். அவ்வளவுதான். முன்பு ஒரு ட்ரெண்ட் இருந்தது. ரஜினியை தாழ்த்தி பேசி பேட்டி கொடுத்தால் பிரபலமடையலாம் என்று. இன்று அடுத்த நிலையாக , யார் அதிகமாக ரஜினியைப் பற்றி பேசுகிறார்களோ அவரே அன்றைய பிரபலம். இதில் கொடுமை என்னவென்றால் இவர்களின் ஊத்துக்கு இவர்கள் ரஜினி ரசிகர்களை ஊறுகாய் ஆக்கிக் கொள்வது தான். 

முன்பு ரஜினி உயிருக்குப் போராடி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், கடைநிலை ரசிகர் ஒவ்வொருவரும் அவர் நல்லபடியாக உயிர் பிழைத்து வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்க, இந்த வியாபாரிகளோ, “ரஜினி நிச்சயம் குணமடைவார், குணமடைந்து ‘ராணா’ படத்தில் நடித்து மக்களை மகிழ்விப்பார்” என்று அறிக்கை விடும் சாக்கில் அடுத்த படத்துக்கான டெம்ப்போ குறையவிடாமல் பார்த்துக் கொண்டனர். அட, பதர்களே! அவர் இனி படமே நடிக்காவிட்டாலும் சரி, நல்ல ஆரோக்யத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே அவரை உண்மையாக நேசிப்பவரின் விருப்பமாக இருக்க முடியும்.

இந்த ஆண்டும் ரஜினியின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் அந்த கொண்டாட்டங்களை நமது ஊடகங்கள் பன்மடங்கு ஊதிப் பெருக்கி ப்ரைம் டைமில் ஒன்றுக்கு பத்து முறை ஒளிபரப்பி ரஜினி பாசம் காட்டுவார்கள். பிறந்தநாள் கொண்டாட்டம் என்று மட்டுமல்ல, ரஜினி சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்வையும், ஏன் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மருத்துவமனை காட்சிகள் கிடைத்தால் கூட பாசமுடன் ஒளிபரப்பி, நடுவில் நிறைய விளம்பர இடைவேளை வைத்து ரஜினி என்னும் பிம்பத்தை துண்டு துண்டாக்கி விற்றுக் கொண்டிருப்பார்கள்

இவர்களுக்கு, யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். ஆனால் ஒரு வேளை, யானை இ’ர’க்க வேண்டிய நிலை வந்தால், கால் காசு போட இந்த வியாபாரிகள் வரப்போவதில்லை என்பது தான் உண்மை.


ரஜினி என்னும் நடிகரின் உண்மை ரசிகனாக, அவருக்கு “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்". அவருக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்யமும், நிம்மதியும் நிலைத்திருக்கட்டும்.

******

8 comments:

 1. அருமையான பதிவு. தலைவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 2. தலைவரை பற்றிய பதிவு சூப்பர்.

  ReplyDelete
 3. உண்மையான பதிவு !

  டிசம்பர் பதினோராம் தேதியிலே ஆரம்பித்து விட்டார்கள் விஜய் டிவியில்...அதுவும் வேறு ப்ரோக்ராம் ஏதும் போடாமல்.....பாரதியார் பிறந்த நாள் பற்றி எல்லாம் ஒரு வார்த்தை பேசுவது "மடமை" என்று நினைத்து விட்டார்களோ என்னவோ....

  நாமெல்லாம் Fantasy நோக்கி பீடு நடை போட்டு சென்று கொண்டே இருக்கிறோமோ .......?!

  பதிவின் கடைசி வரிகள் உண்மையாகட்டும்

  -மதன்

  ReplyDelete
 4. நான் கமல்ஹாசன் ரசிகன் என்ற போதும் எனக்கும் சிறுவயதிலிருந்தே ரஜினிகாந்தைப் பிடிக்கும். பாட்ஷா படத்தை ஏழுதடவைக்கும் மேல் பார்த்திருப்பேன். ரஜினியின் கண்களும், நடையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அவரது அடுத்த படமான 'கோச்சடையான்' நம்ம மதுரை களம் என்பதால் இன்னும் மகிழ்வாய் இருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete