இரவிலிருந்தே கூட இருந்தோம்,
காலை மருந்தின்போது கூட
ஒரு முகக்குறிப்பு காட்டவில்லை.
மதியம் வரை தூங்கிவிட்டு
மெளனமாகவே சென்றுவிட்டார்,
என்ன செய்தி வைத்திருந்தாரோ
கடைசிவரை தெரியவில்லை.
தெருமுனையில் வண்டி நிற்க,
நண்பர்கள் துணைகொண்டு
நான்கு மாடி ஏற்றிவிட்டோம்.
வேறென்ன செய்ய வேண்டும்,
யாருக்கென்ன சொல்ல வேண்டும்
எப்போதும் அப்பாதானே கூட்டிப்போவார்,
அவரை எப்படி கூட்டிப்போக?
விஷயம் தெரிந்து வீடு நிறைந்தது...
முன்வந்து முகம் காட்டி,
கண் நனைத்து கட்டிப்பிடித்து,
ஆறுதல் சொல்லி, தேறுதல் கூறி
என்னென்னவோ செய்கின்றனர்...
தாம் வந்ததை தவறாமல் பதிவு செய்ய !
அங்கும் இங்குமாய் அம்மாவை
ஆளாளுக்கு அலைக்கழிக்க,
ஐஸ்கட்டி பாளத்தில் அப்பா
அவஸ்தையுடன் தான் படுத்திருந்தார்.
"இரவெல்லாம் நாய்க்குட்டி
தனியாக தூங்காது.
காலையில் தானே எடுப்பீங்க,
அதுக்குள்ள வந்துருவோம்"
தொலைபேசி சொன்னது
உயிருக்குயிரான் சொந்தம் சில.
விடிந்ததிலிருந்து
வரவுசெலவு கணக்கெழுதி
இல்லாத பொறுப்பையெல்லாம்
பங்கு வைத்து, பந்தி வைத்து
தலைகீழாய் தாங்கியது
ஒன்றுவிட்ட சொந்தமெல்லாம்,
அப்பா இல்லையென்ற தைரியத்தில்.
தடித்த சத்தம், குறுட்டு வழக்கம்...
யாராரோ அதிகாரம் செலுத்த,
யாராரோ உரிமை வளர்க்க,
முன்னும் பின்னுமாய் எல்லாரும்
தங்கள் பெயரை பொறித்துச் செல்ல,
கொட்டுகிறது பெருமழை.
முச்சந்தியில் அந்நியமாய்
ஒதுங்கி நாங்கள் நிற்கின்றோம்.
அனைத்தையும் மெளனமாய்
பார்த்துக்கொண்டிருந்த அப்பா,
பல்லக்கிலிருந்து முகம் திருப்பி
எங்களைப்பார்த்து லேசாக,
புன்முறுவல் பூக்கின்றார்.
சொன்ன செய்தி புரிந்து கொண்டு
மெல்லமாய் தலையசைக்கின்றோம்.