Monday, June 10, 2013

வேண்டாவெறுப்பா பார்த்த குட்டிப்புலியும், ஏனோ தானோனு எழுதும் திரைப்பார்வையும்

வார இறுதி திரைப்படக்கணக்கை தீர்க்க வேண்டி சும்மா போய்ட்டு வரலாம்னு தான் போனேன். பிறகு தான் ஒரு பேனா பேப்பர் கொண்டு வரலையேன்னு ரொம்ப ஃபீலிங்கா போயிடுச்சு. கவுண்ட்டர் காமெடி கொடுக்க வாய்ப்புள்ள காட்சிகள் வரிசையா வந்துட்டே இருக்கு. ச்சே நோட்ஸ் எடுத்து வச்சா ஒரு பதிவுக்குத் தேறுமேனு ஃபீல் பண்ற அளவு போயிடுச்சுன்னா பார்த்துக்கங்க. படம் முழுக்க அவ்வளவு பன்ச்சை பிச்சுப் போட்டு வச்சிருக்காங்க. அடுத்த சூப்பர் ஸ்டார் யார், அடுத்த உலகநாயகன் யார் என்று ஆளாளாளுக்கு சண்டை போட்டுட்டு இருக்காங்க. ஆனா சந்தேகமே இல்ல சார், கன்பார்ம் சார்...  அடுத்த புரட்சி கலைஞர், சசியண்ணன் தான் சார்... என்ன பாடி லேங்குவேஜ், என்ன ரொமாண்டிக் லுக், என்ன ஆக்‌ஷன்... ப்ப்ப்ப்ப்பாஆ. அதுமட்டுமில்ல கறுப்பு கம்பளி போர்த்துன ராம்கி, தொடை தெரிய கைலி கட்டுன ராஜ்கிரண், ஸ்டைலாய் தலையை சிலுப்பும் டி.ஆர், பெத்த தாய் சேலையைப் போர்த்தி தூங்கும் ராமராஜன் இப்படி அவருக்குள் படுக்கப் போட்டிருந்த பல ரூபங்கள் இந்தப்படத்துல தான் முழிச்சிருக்கு. நீங்கலெலாம் நல்லா வரனுண்ணே!

அப்புறம், பெரிசு சிறுசெல்லாம் சிலம்பாட்டம் ஆடுனப்போ நல்லா கம்பை சுத்துனாங்கல்ல, ஒழுங்கா அதோட பந்தயத்தை முடிச்சுட்டு சசியண்ணன் குட்டியா ஒரு புலியாட்டம் போட்டுட்டு போயிருக்கலாம். படம் டைட்டிலுக்கு பொருத்தமாவாது இருந்திருக்கும். அதை விட்டுட்டு அவரும் சிலம்பாட்டம் ஆடுறேனு கம்பை சுத்தி சுத்தி வர, கேமரா கஷ்டப்பட்டு அவரை சுத்தி சுத்தி, ஒரு வழியா சிலம்பு சுத்துற மாதிரியே சமாளிக்க எடிட்டர் எவ்வளவு சிரமப்பட்டாரோ தெரியல.

ஆனா சசியண்ணே,  சுப்பிரமணியபுரத்தில் இருந்தே உங்களுக்கு இதே வேலையா போச்சு. கூட நாலஞ்சு சின்ன பசங்க கூட சேர்ந்து சுத்துனா உங்களையும் யூத்தா ஒத்துக்குவோம்னு என்னவொரு தன்னம்பிக்கை. நியாயப்படி பார்த்தா கனாகாணும் காலங்கள் பாலாவுக்கெல்லாம் நீங்க சித்தப்பா முறை வேணும். அவனுக செட்டோட சேர்ந்து சுத்துறதெல்லாம் கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஓவரோ ஓவர். அப்புறம், தொடர்ந்து இரண்டு படத்துல வாய்ப்பு கொடுத்தீங்கங்க்றதுக்காக அந்த லட்சுமி ஆண்ட்டி வேணுமினா உங்க ரொமாண்டிக் லுக்குக்கு மயங்கலாம், ஆனா காசு கொடுத்து படம் பார்க்க வந்த நாங்கல்லாம் என்ன பாவம் பண்ணோம், கொஞ்சம் யோசிங்க. அந்த அம்மையாரை பார்ர்கும் போதெல்லாம், மேம்பாலம் மேல நடந்து போற ஆளை  தரைப்பாலத்திலிருந்து பார்ப்பது போல எட்டி பார்க்க வேண்டி இருக்கிறது. அதுவும் அப்பு, பப்பு கோஷ்டி எல்லாம் அவரை சைட்டடிப்பது எல்லாம் ஸ்கூல் பசங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டிட்ட சாக்லேட் கேட்க லுக் விடுவது போல தான் இருக்கிறது. 

எங்கூர் லோக்கல் சேனல்ல எல்லாம் சுரேஷ் பீட்டர்ஸின் “அக்கா மக, அக்கா மக” பாட்டுக்கு மைக்கல் ஜாக்சன் ஆல்பத்தை தான் தோர்த்து வச்ச்சிருப்பாங்க. அந்த ஸ்டைல்ல சசியண்ணனை பார்த்தவுடனே நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு பார்த்தா, ஃப்ரேம்லயே குட்டிப்பசங்க பேஸ்த்தடிச்சுப் போய் பேயறைஞ்ச மாதிரி பார்த்துட்டு இருந்தாங்க. சரி தியேட்டர்ல பார்க்குற நமக்கே இப்படி இருக்கே, இதெயெல்லாம் சூட்டிங் ஸ்பாட்லயே பார்த்த அந்த சின்னப்பசங்க மனசு என்ன பாடுபட்டுருக்கும் யோசிச்சுப் பார்த்தேன்... பாவம் தான். பின்னனி இசையமைக்க தனியா எதுக்கு காசு கொடுக்கனும், பேசாம பழைய பாட்டெல்லாம் எடுத்துப் போட்டா யாரென்ன கேட்கப்போறாங்கன்னு புகுந்து விளையாடி இருக்காங்க. அதுவே கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிப் போச்சு.

உண்மையில், தென் தமிழக கிராமங்களின் ஒவ்வொரு சிறுதெய்வத்திற்கும் ஒரு கதை உண்டு. நம்ப முடியாத பல சுவாரஸ்யமான, பரிதாபமான, அமானுஷ அல்லது கொடூரமான நிகழ்வினால் அவர்கள் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள் என்ற கர்ண பரம்பரைக் கதைகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம். இயக்குநரும் அதை தான் படமாக்க நினைத்திருப்பார் போல. ஆனால் அதை செறிவூட்டும் ஒரு நேர்மறைக்கதையாய் சொல்லாமல், சொந்த சாதிப் பெண்களை கிண்டல் செய்தததற்கு, சாதி மானம் காப்பதற்கு என்று பிற்போக்குத்தனமாய் எடுத்து அட போங்கப்பா என்றாக்கி விட்டார். ”அட போங்கப்பா!”

******


2 comments:

தமிழ்மகன் said...

யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் 7/8 பதியும் முறை ----- http://mytamilpeople.blogspot.in/2013/06/install-windows-7-from-usb.html

Anonymous said...

லட்சுமி மேனன் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போனமைக்கு எனது கண்டனம்......

-மதன்

Post a Comment