Tuesday, July 17, 2012

நட்பு!நட்பைப் பற்றி ஆயிரமாயிரம் கவிதைகளும் தத்துவங்களும் ஏற்கனவே சொல்லி முடிக்கப்பட்டுவிட்டன. காதலா, நட்பா என ரெக்கார்டு தேயும் வரை பட்டிமன்றங்கள் எல்லாம் நடத்தப்பட்டுவிட்டன. இளமைக்கால நட்பு, பிறகு காதல் இவற்றைத் தாண்டி திருமணம், குடும்பம் என்று வந்த பிறகு நாம் போட்டு வைத்திருக்கும் முன்னுரிமைப் பட்டியல்களில் மாற்றங்களும் இருக்கலாம். ஆனால் பரஸ்பர சார்புகள் கொண்ட குடும்ப உறவுகள் தாண்டி சற்று விலகி நின்று, ஆனால் உளப்பூர்வமாக உணரக்கூடிய உறவு நண்பர்கள் தாம். எப்படியென்றால் இப்போது நம்மால் தவிர்க்க முடியாத உறவு யாரென்று கேட்டால், மனைவியையோ குழந்தைகளையோ, பெற்றோரையோ தான் முதலில் சொல்வோம். ஆனாலும் நம் நலனில் அக்கறையுள்ள, தூரத்திலிருந்தாலும் நம் வளர்ச்சியில் மகிழ்ந்திருக்கும், இன்னும் சொல்லப்போனால் தமது வரிசைமுறை  பற்றியெல்லாம் கூட அலட்டிக்கொள்ளாத நண்பர்கள் அனைவருக்குமே இருப்பார்கள் தானே.

கல்லூரி விடுதிகளில் நடக்கும் அரட்டைக்கச்சேரியில் இரவு முழுவதும் இன்னதென்று இல்லாமல் உலகத்திலுள்ள சகல நிகழ்வுகளையும் கிண்டலடித்துக் கொண்டிருப்போம். அதே நண்பர்கள் இன்று, எப்போதும் ஃபேஸ்புக்கில் பச்சை விளக்கில் தான் இருக்கிறார்கள். ஒரு “ஹாய்” சொல்லக் கூட தோன்றுவதில்லை. அதே நினைப்பு தான் அவர்களுக்கும் இருக்கும். ஆனாலும் அவர்களின் அண்மை எப்போதும் உணரப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. இது எல்லாம் சேர்த்து என்றாவது நேரில் சந்திக்க வாய்ப்பு வரும் போது பழைய நினைவுகளை அசைபோட்டு “பார்ட்டியாய்” பொங்கி வழிந்து விடுகிறது. :)

தன் வீட்டில் வீம்பு பிடிப்பவர்கள் கூட நண்பர்கள் வீட்டில் விழுந்து விழுந்து வேலை செய்வார்கள். நண்பனின் அக்கா, அண்ணன் திருமணங்களில் சாம்பார் வாளி தூக்காத ஒருவனாவது இருக்க முடியுமா என்ன?. அதே போல ஏதாவது அவசர உதவி என்றாலும் நம் நினைவிற்கு முதலில் வருபவர்கள் நண்பர்கள் தாம். சமீபத்தில் உறவினர் ஒருவருக்கு ஓ-நெகடிவ் வகை ரத்தம் தேவைப்பட்டது. சொந்தங்கள் சிலருக்கு அந்த வகை இரத்தம் இருந்தாலும் ஏதேதோ காரணம் சொல்லி, யாரும் தானம் தர முன்வரவில்லை. பிறகு நண்பர் ஒருவர் வந்து இரத்த தானம் செய்தார். அதே நாளன்று வேறு ஒரு நண்பருக்கு ஏ1-பாசிடிவ் இரத்தம் தேவைப்பட என் தம்பி சென்று இரத்த தானம் செய்து வந்தான். அவர்களின் சொந்தங்களிலும் யாருக்கேனும் அந்த வகை இருந்து தர மனமில்லாமல் இருந்திருக்கலாம். நான் பார்த்தவரையில் பெரும்பாலும், யாருக்கேனும் சிகிச்சை என இரத்தம் தேவைப்படும் பொழுதெல்லாம் நண்பர்களோ அல்லது நண்பர்களின் நண்பர்களோ தான் வந்து உதவி இருக்கிறார்கள். சொந்தங்களுக்கு இல்லாத பிணைப்பு நண்பர்கள் எனும் போது தானாகவே வந்துவிடுவது தான் நிதர்சனம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு என் தம்பியின் நண்பன் வீட்டுக்கு அருகில் ஒரு சம்பவம். பதின்ம வயது பையன் ஒருவனை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு வளர்ப்பு நாய்க்குட்டி ஒன்று கடித்திருக்கின்றது. அவனும் சரியாக மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டான். எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் வாலிபம். வீட்டிலும் சொல்லவில்லை. சமீபத்தில் அவனது நடவடிக்கைகளில் மாற்றத்தை உணர்ந்த குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். நாய் கடித்து மருத்துவம் எடுத்துக் கொள்ளாததால் “ரேபிஸ்” முற்றிவிட்டதாகவும், இனி பிழைப்பது கடினம் என்று கூறிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட அவனது பக்கத்து வீட்டு நண்பன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்திருக்கிறான். இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகவே வளர்ந்தவர்கள். மருத்துவமனையில் தன் நண்பன் இருந்த கோலம் கண்டு என்ன நினைத்தானோ தெரியவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் இவனும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்டான். இப்பொழுது இருவருக்கும் சிகிச்சை நடந்து வருகிறது.  ரேபிஸ் நோய் வந்த இளைஞனை நினைக்கும் போது மனம் பதறுகிறது. அதே நேரம் அவனுக்காக தற்கொலை செய்து கொள்ளத் துணிந்த அவனது நண்பனை நினைக்கும் போது வார்த்தைகள் எதுவும் வரவில்லை. இருவரும் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்ற முனுமுனுப்பு இரண்டு நாட்களாக தலைக்குள் சுற்றிக் கொண்டே இருக்கிறது.

******

6 comments:

cheena (சீனா) said...

அன்பின் பாலா - நட்பு நட்பு தான் - அதற்கு எக்ஸ்பைரி டேட் கிடையாது - எத்தன நாட்கள் தொடர்பில் இல்லை எனினும் - ஒரு நாள் உதவுவார்கள் - பதிவில் கூறி இருப்பது அததனையும் உண்மை தான். சிந்தனை நன்று - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

Ramani said...

நண்பர் சீனா அவர்கள் சொன்னது
நூற்றுக்கு நூறு சரி
எக்ஸ்பயரி டேட் இல்லாதது
தூய்மையான நட்பு ஒன்றுதான்
அவர்கள் இருவரும் நலம் பெற்றுத் திரும்ப
எல்லம் வல்லவனை வேண்டிக்கொள்கிறேன்

முரளிகண்ணன் said...

அண்ணே கடைசி மேட்டர் கண் கலங்க வச்சிடுச்சு

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு... விரும்பிப் படித்தேன்..

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

Karuppiah Subbiah said...

நல்ல நட்பும், நல்ல நூல்களும் ஒருவனை செழுமைப்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்தவன் என்றவகையில் இந்தக் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.

ரேபிஸ் நோய் தாக்கிய அந்த சகோதரனை நினைத்து மிகவும் வேதனைப்பட்டேன். அவன் பிழைக்க வாய்ப்பில்லை என்று எனக்குத் தெரியும். தெரு நாய்களை ஒழிக்க வேண்டும் பாலா !.நண்பனை இழக்கப்போகிறோம் என்ற வருத்தத்தில் விஷம் அருந்திய அந்தச் சகோதரன் நலம் பெற வாழ்த்துக்கள் .

அடுத்து, இந்த வாரம் என்ன நட்பு வாரமா? நண்பர் நேரு அவர்களும் நட்பைப் பற்றியே எழுதியுள்ளார்!.

சத்யா said...

hey nice one..but i m not accepting some points...relatives also good and helping for some critical situation..both are must in entire life of human........

Post a Comment