Monday, July 2, 2012

நீரில் மூழ்கும் துரோகத்தீ - ஒரு வாசிப்பனுபவம்


நாவல்: வேள்வித் தீ
ஆசிரியர்: எம்.வி.வெங்கட்ராம்
பதிப்பு: காலச்சுவடு கிளாசிக் வரிசை
விலை: ரூ 125



மதுரையில் பிறந்து வளர்ந்த எவருக்கும் சௌராஸ்ட்ரா சமூகத்தினருடன் பழகும் வாய்ப்பு நிறையவே அமைந்திருக்கும். வீதியில், டீக்கடையில் என எங்கு பேசிக்கொண்டாலும் அவர்கள் சமூகத்தினர் ஒருவரைப் பார்த்து விட்டால் போதும், சுற்றியிருப்பவர்கள் யாரைப் பற்றியும் கவலையின்றி அவர்களுக்குள் சௌராஸ்ட்ரா மொழியில் பேசத்துவங்கிவிடுவார்கள். நாம் முழித்துக் கொண்டு நிற்க வேண்டியது தான். அவர்களுக்கென தனி வாழ்க்கை முறை, கலாச்சாரம், மொழி என மாநகர சந்தடியிலும் தனித்துத் தெரியும் இம்மக்கள் குஜராத் மாநிலத்திலிருந்து வந்து தெற்கில் குடிகொண்டனர். இயற்கையாகவே பயந்த சுபவாமுடைய இந்த மக்கள் நெசவுத் தொழிலையே பெரிதும் நம்பியிருந்தனர். என்பதுகளின் இறுதி வரை சிறப்பான கல்வியறிவு பெற்ற சமூகம் என்று சொல்ல முடியாத நிலையே இருந்தது. பிறகு காலமாற்றத்தில் இந்த சமுதாயத்திலுள்ள செல்வந்தர்கள் பற்பல கல்விநிலையங்கள் துவங்கியதன் விளைவாக இன்று அநேக மக்கள் கல்வியறிவு பெற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று சாதிக்கத் துவங்கியுள்ளனர். இவர்களின் குழுவுணர்வு ஆச்சர்யமளிக்கக் கூடியது. எங்கு சென்றாலும் ஒருவருக்கொருவர் தேவையான உதவிகள் செய்து கொள்வர்.

இந்த சிறுபான்மை சமூகத்தைப் பற்றிய முக்கியமான பதிவுகளை தன் எழுத்தின் மூலம் அழுத்தமாக பதிந்தவர் எம்.வி.வெங்கட்ராம். இவரது “காதுகள்” நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. எழுபதுகளின் மத்தியில் வெளியான நாவல் “வேள்வித் தீ”” கும்பகோணத்தில் கடைநிலையிலிருந்து மத்தியதரத்துக்கு உயர்ந்த ஒரு நெசவாளனது வாழ்க்கை முறையையும் அவனது அகஅலைச்சலையும் பேசுகிறது. இடையே நெசவாளர்கள் மற்றும் அவர்களுக்குத் தொழில் தரும் முதலாளிகள் இவர்களுக்கு இடையே நடக்கும் தொழில்முறை சிக்கல்கள், போராட்டங்கள், மந்தமாகும் சந்தை நிலை, அதிலிருந்து மீண்டு வர அவர்கள் எடுக்கும் முயற்சிகள் என இந்த சமூகத்தின் அன்றைய வாழ்நிலையையும் தொட்டுச் செல்கிறது. ஆனால் கணவனைப் போற்றிப் பேணும், விகல்பமில்லாத மனதையுடைய, தன் உரிமைகளை பிறந்த இடத்தில் விட்டுக் கொடுக்காத, “நீங்க இங்க வந்தா என்ன கொண்டு வருவீங்க.. நான் பிறந்த வீடு வந்தா எனக்கு என்ன செய்வீங்க”” என காரியக்காரச் சுட்டியாக இருக்கும் ஒரு இளம்பெண் ஒரு துரோகத்திற்கு பழி வாங்க என்ன முடிவெடுக்கிறாள் என்பது தான் “வேள்வித்தீ””யில் உள்ள தீ.

இல்லற வாழ்வை துவங்கி, அதிலும் புரிந்து நடக்கும் நல்ல மனைவியும், அழகிய பெண் குழந்தையும் அமையப்பெற்ற, தொழிலில் ஏறுமுகம் கொண்டிருக்கும் ஒரு இளைஞன்... சொந்த வீடும், சொந்தத் தறியும் அடைந்த பிறகு தான் திருமணம் என்று வைராக்யத்துடன் இருந்து சாதித்த இளைஞன்... தொழில் நொடிக்கும் நிலையிலும் தன்னை ஆளாக்கிய, அங்கீகரித்த முதலாளியை விட்டுப்பிரியாது அவருக்கே மனதைரியம் அளித்த இளைஞன்... சங்கக்கூட்டங்களில் தலைவரின் நம்பிக்கைக்கும் உடனிருக்கும் தொழிலாளர்களின் நன்மதிப்புக்கும் பாத்திரமான சொல்வன்மை நிறைந்த துடிப்புமிக்க இளைஞன்... தான் நல்ல நிலையில் இருப்பது அறிந்து மொய்த்து எடுக்கும் சொந்தபந்தகங்களின் சுயநலம் தெரிந்தும் “உடம்பிலும் மனதிலும் தெம்பிருக்கு, எப்படியும் உழைத்து நிமிர்ந்து நிற்கலாம்” என பெருந்தன்மை கொண்ட இளைஞன்... உடன் தம்பி போல் பழகி வந்த உதவியாளன் துரோகம் இழைக்கிறான் எனத் தெரிந்தும் மனமுடையாமல், அவனை விலக்கி தன்முனைப்புடன் செயல்படும் இளைஞன்... இப்படி எத்தனையோ ஆதர்சன குணங்கள் கொண்ட ஒருவன் வேற்றுப் பெண்ணின் ஒரு குழைவுக்கு, ஒரு சிறு தனிமைக்கு பலியாகி அந்த சுவையை விட முடியாமல் அலைக்கழிக்கப்படுவது தான் கதை. அதற்கு அவனுக்குக் கிடைக்கும் தண்டனையின் ரணம் ஆறுவதற்குள் அடுத்த வாழ்வைத் துவங்குகிறான் என்று முடிகிறது. அதற்கு என்ன சமாதானங்கள் சொல்லிக் கொண்டாலும் புதினம் முடிந்தவுன் இருக்கும் படபடப்பும், மனவுலைச்சலும் நீங்க இன்னும் நெடுநாளாகும்.

பொதுவாக, புதினங்களில் உள்ள கதாபாத்திரங்களில் நம்மைப் பொருத்தி வாசிக்கும் போது வாசிப்பனுபவம் நெருக்கமாகவும், உளப்பூர்வமாகமும் அமையும் என்று சொல்வார்கள். “வேள்வித்தீ”யின் கண்ணன் ஒருமைத் தன்மையுடையவனாக, தனக்குக்கீழ் உள்ளவர்களுக்கு உதவுபவனாக, சமஅந்தஸ்து உடையவர்களின் உற்ற தோழனாக, வசதிபடைத்தவர்களிடம் ஒதுங்கியிருப்பவனாக, தன்மீது அதிக நம்பிக்கை கொண்டவனாக, இல்வாழ்வில் குறையேதுமின்றி நிறைவாழ்வும் நல்காமமும் தருகின்ற துணையைப் பெற்ற பின்பும் சபலத்திற்காட்படும் சாதரணனாக,  தன் தவறை உணராத, உணர்ந்தாலும் ஒருபோதும் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாமல் ”மனைவியை தன்னை முழுமையாக நம்ப வைக்க என்ன செய்யவேண்டும்” என்று மட்டுமே சிந்திக்கும், தன்முனைப்பு நிரம்பிக்கிடக்கும் ஒரு “மாதிரியுரு” மத்தியவர்க்க  இளைஞனாக” சித்தரிக்கப்பட்டு இருக்கிறான். புதினத்துடன் பயணம் செய்த ஒரு சக பயணியாக முடிவில் அவன் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று தான் என் மனம் விரும்பியது. ஆனால் சித்தரக்கப்பட்டிருக்கும் ”கண்ணனாக” இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் ஒரு ஆணாக “அவன் அழ ஒரு மடி இல்லையென்றால் இன்னொன்று. தன் மனைவியின் தற்கொலைக்குத் தானே காரணமாக இருந்தாலும் அடுத்தவள் அரவணைப்பும் அவனுக்கு வேண்டும்” என்ற நிலையில் தான் இருந்திருப்பான் என்று தோன்றுகிறது.

இன்னொருத்தி இருக்கிறாள். 1975ம் ஆண்டின் இளம்விதவை. பணம், வசதி, செல்வாக்கிற்குக் குறைவில்லாத, ஊர் உறவு பற்றிக் கவலைப்படாத, முகப்பூச்சு, அலங்காரத்திற்குக் குறைவில்லாத, வாசக ஆண்கள் அவள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்துப் படிப்பார்களோ அப்படியே இருக்கிறாள். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறாள் இல்லையென்றால் உருவாக்குகிறாள். துர்மரணம் நிகழும் போது, அது தன்னால் இல்லை என்று நம்புகிறாள். பாதிக்கப்பட்டவனுக்கு ஆறுதல் சொல்லி அவனை அரவணைத்துக் கொள்கிறாள். இனி அவனுக்கு தான் தான் எல்லாம் என்று நம்ப வைக்கிறாள். வேற்றூருக்கு சென்று புதிய வாழ்வை துவங்கலாம் என்று அவனை குற்றவுணர்விலிருந்து வெளிக்கொண்ர்கிறார். அவளளவில் அவள் நியாயம் அவளுக்கு.

இவை அனைத்தையும் விட, புதினத்தில் நெஞ்சையறுக்கும் படிமத்தில் ஒரு ”பிஞ்சு” உயிர் இருக்கிறது, இல்லை.. இருந்தது. பசி எடுத்தால் மட்டும் உணர்ச்சிகளைக் காட்டும், மற்ற நேரங்களில் பிண்டமாகக் கிடக்கும் சின்ன உயிர். துயரமான நேரத்தில் அது “ம்... ம்...ம்மா”, “ப்... ப்... ப்பா” என்று முதல் மழலை பேசத் துவங்குகிறது. பிறகு தாயின் மார்போடு கட்டி அணைக்கப்பெற்று நீரில் மூழ்கி மூச்சு முட்ட முட்ட இறந்து போகின்றது. 

ஒரு கணவனாக, பெண் குழந்தையின் தந்தையாக என்னால் இந்த புதினத்தை ஜீரணிக்க முடியவில்லை.

நாவல்: வேள்வித் தீ
ஆசிரியர்: எம்.வி.வெங்கட்ராம்
பதிப்பு: காலச்சுவடு கிளாசிக் வரிசை
விலை: ரூ 125



--- வி.பாலகுமார்
http://solaiazhagupuram.blogspot.in/
******

7 comments:

  1. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நல்லதொரு நாவலை வாசித்து , ரசித்து கொடுத்துள்ளீர்கள். தொடரட்டும்.

    ReplyDelete
  2. அவசியம் நாவலைப் படிக்கவேண்டும்
    என்கிற ஆவலைத்தூண்டிப்போகும்
    அருமையான அறிமுகம்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. பதிவு தொட்டது.

    ReplyDelete
  4. வேள்வித்தீ குறித்த நல்லதொரு பதிவு. வேள்வித்தீ நான் வாசித்திருக்கிறேன். நல்ல நாவல். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  5. வேள்வித்தீ

    * மழையோடு தொடங்கி மழையோடு முடியும் நாவல்.

    *சௌராஸ்டிர மக்களின் பழக்கவழக்கங்களைப் பதிவு செய்த இனவரைவியல் நாவல்.

    *நெசவாளத்தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையைப் பதிவு செய்த சமூக நாவல்.

    *சபலத்தீயால் சிதைந்த கண்ணனின் குடும்பக்கதையைச் சொல்லும் குடும்ப நாவல்.

    *தமிழின் முக்கியமான நாவல்களுள் ஒன்று.

    ReplyDelete
  6. புதினத்தை முழுமையாக நான் படிக்கவில்லை.உங்களின் விமர்சனத்தை படித்தாலே மனம் பழைய சிவாஜி படம் பார்த்தது போல கனக்கிறது, பாலா.

    ReplyDelete