இந்தத் தேர்தலில் என் வாக்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே. அதற்கான காரணங்கள்:
1. ஒன்றிய அரசின் அசுரப் பிடியிலிருந்து தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காத்து, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேற்றிச் செல்ல திமுக அரசு தொடர வேண்டும்.
2. கல்விக்கும், மாணவர்கள் நலனுக்கும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் (நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன், காலைச் சிற்றுண்டி)என இந்த திமுக அரசு செய்திருப்பவை ஏராளம். அவை யாவும் தங்குதடையின்றி தொடர திமுக அரசு தொடர வேண்டும்.
3. மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை - இவை பெண்களுக்கு சிறகுகளையும், பொருளாதார விடுதலையையும் கொடுத்த புரட்சிகரத் திட்டங்கள்.
4. திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை போன்று பக்தி சார்ந்த விஷயங்களில் பாஜக மதக் கலவரங்கள் செய்ய முனைந்த போது, அதனை தீரமான ஒற்றைக் குரலில் ஒடுக்கியது, தமிழ்நாட்டில் மத அரசியலுக்கு இடமில்லை என்ற உறுதியான நிலைப்பாடு.
5. திமுக 2021ல் ஆட்சிக்கு வந்த போது, ஒன்றிய பாஜக அரசை எதிர்த்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. நிதி கிடைக்காது, கைது அச்சுறுத்தல்கள் இருக்கும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் குறிவைக்கப்படுவார்கள்/விலைபேசப் படுவார்கள் என்று பல பிரச்ச்னைகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே எல்லாப் பிரச்சனைகளும் வந்தன. ஆனால் திமுக இவை எதற்கும் அஞ்சாமல் மதவாத/சனாதன/வலதுசாரி ஃபாசிச எதிர்ப்பு அரசியலை இன்னும் தீவிரமாக முன்னெடுத்து இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக வை வைத்துப் பார்த்தாலே போதும், தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு திமுக ஏன் தேவை என்று புரிந்துவிடும்.
6. சமூக நீதி, இட ஒதுக்கீடு, மாநில நலன் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் திமுக வே ஒரே தேர்வு.
7. தொழில் வளர்ச்சி, பெருநிறுவன முதலீடுகள் ஆகியவற்றை ஈர்க்க தொலைநோக்குடன் கூடிய நிலையான, தன்னிச்சையான முடிவுகள் எடுக்கக் கூடிய அரசு வேண்டும். 2016-2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் மாநில நலன்கள் அனைத்தும் அடகுவைக்கப் பட்டிருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது.
8. "பாஜக உள்ளே புகுந்துவிடும்" என்பது என்று கேலிச் சொல் ஆகிவிட்டது. அதன் உண்மையான பதற்றத்தை தமிழக மக்களை அண்ட விடாமல் திமுக அரசு இந்த ஐந்து வருடங்களில் உண்மையில் அரணாகக் காத்து இருக்கிறது. இந்தக் கோட்டையில் விரிசல் விட வழிவகுக்கக் கூடாது.
9. கலை, இலக்கியம், வாசிப்பு தொடர்பான அறிவுசார் நிகழ்வுகளுக்கு ஓர் அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதே ஆட்சியின் செழிப்புக்கான அளவுகோல். அவ்வகையில் பல்நோக்கு நூலகங்கள், மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சிகள், கலை இலக்கியத் திருவிழாக்கள், நூலகங்களுக்கான வெளிப்படையான நூல் கொள்முதல்கள் என்று நிறைய செய்திருக்கிறது, இன்னும் செய்யும்.
10. திராவிட மாடல் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் எந்தவித பாகுபாடுமின்றி தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது. திராவிடத்தின் பயனாளியாக, நம் அடுத்த தலைமுறைகளுக்கும் அத்தகைய தொடர் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக எனது தேர்வு திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே!
சரி 2021-2026 குறைகளே இல்லாத பொற்கால ஆட்சியா என்றால், குறைகளும் இருந்தன. அவை திமுக அரசின் தோல்வி என்ற பொய்ப் பரப்புரைகளைப் புறந்தள்ளி இந்தக் காலத்தின் பெருகி வரும் ஆபத்துகள் என்ற வகையில் வரும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதிக கவனம் செலுத்தத் தேவையான சில விஷயங்களும் உள்ளன.
1. அதிகாரிகளின் ஆட்சியாக இல்லாமல், உண்மையான பொருளில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியாக இருப்பது.
2. போதைக் கலாச்சாரம் - வயது வித்தியாசமின்றி காலத்தின் சீரழிவாகப் பெருகிக் கொண்டிருக்கும் போதை அதன் தொடர்ச்சியான குற்றச் செயல்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப் பட வேண்டும்.
3. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு - இன்னும் தீவிரமாக எல்லா மட்டங்களிலும் கடைப்பிடிக்கப் பட வேண்டும்.
4. குடிநோய் மறுவாழ்வு - சமுதாயத்தின் பெரும்பகுதியை அழித்துக் கொண்டிருக்கும் அரசு மதுக்கடைகள் முறைப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
இவை அடுத்து வரும் திராவிட மாடல் 2.0 தீவிரமாகச் செயல்படுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையுடன்...
ஸ்டாலின் தொடரட்டும்,
தமிழ்நாடு வெல்லட்டும்!
No comments:
Post a Comment