Wednesday, January 18, 2017

எங்கே என் தலைவன் ?


(Image Courtesy: From Internet)

இளைஞர்களின் தற்பொழுதைய போராட்டம், அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயலாற்றும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கிறது. “அரசியல் தேவையில்லை” என்று இளைஞர்கள் சொல்லக்கூடாது, அமைப்பு ரீதியான அரசியல் தலைமை இல்லாமல் போராட்டங்கள் ஒன்றிரண்டு நாட்களில் நீர்த்து விடும் என்கிறார்கள். ரோட்டுக்கு இறங்கி வந்து குரல் கொடுப்பதைவிட சிறந்த அரசியல் அனுபவத்தை எந்த புத்தகம் கொடுத்துவிடும் என்று தெரியவில்லை. இந்த இளைஞர்கள், இதன் மூலம் ஏற்கனவே இன்றைக்குத் தேவையான அரசியலைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டார்கள். இவர்கள் புறக்கணிப்பது பழம் தின்று கொட்டையையும் தின்று செரித்த அரசியல்வாதிகளைத் தானே ஒழிய அரசியலை அல்ல.

கருத்து சொல்பவர்களுக்கு எப்பொழுது இருக்கும் காரணம், இதை விட உயிர் போகும் விஷயங்களுக்கெல்லாம் கூடாத கூட்டம், தேவையில்லாத சிறு விஷயங்களுக்காக கூடுகிறது, இதன் மூலம் அத்யாவசியத் தேவைகளும், குறைபாடுகளும் மறக்கடிக்கப்படுகின்றன. கொஞ்சம் உற்று கவனித்தால், இப்படி சொல்கின்றவர்கள் உயிர் போகின்ற ஒரு விஷயத்திற்காகப் போராடும் போதும் அதை மடைமாற்ற கச்சிதமான இன்னொரு மாற்று வழியில் கையைக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.

இன்னொரு குற்றச்சாட்டு, இது கும்பல் சார்ந்த உளவியல், சில மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததும், என்ன ஏது என்று கூடத் தெரியாமல், கொண்டாட்ட மனநிலையில் கும்பல் சேர்ந்து கூச்சல் போடுகிறார்க்ள், இவர்களுக்கு சித்தாந்த ரீதியான பிடிப்பு இல்லை என்ற வாதம். சித்தாந்த ரீதியாய் அலசி ஆராய்பவர்கள் எல்லாம் வீட்டுக்குள் மல்லாக்கப் படுத்துக் கொண்டு கருத்து முத்துக்களை மட்டும் தான் உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். உணர்வெழுச்சியில் வீதிக்கு வருபவன், கொண்டாட்ட மனிநிலையில் வந்தாலும் கூட களத்தில் அவன் பார்த்து, உணர்ந்து, கற்றுக் கொள்ளும் அரசியல் அவனை பின்னாளில் செதுக்கும். இந்த பெருங்கூட்டத்தில் வெறும் ஒரு சதவீதம் பேருக்குள் போராட்ட குணத்தின் தீ கனன்று கொண்டிருந்தாலும் போதும், அவர்கள் மிகச் சிறந்த தலைவர்களாக உருவாகி விடுவார்கள்.

ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்று சாலைக்கு வந்து போராடும் இளைஞன் அப்படியே இருந்துவிடுவான் என்று சொல்வதற்கில்லை. அவன் தீவிர அரசியலின் படிநிலையில் முன்னேறும் போது, ஏற்கனவே பெருநிறுவனங்களைப் போல செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமைப்பு ரீதியான கட்சிகளில் ஒன்றில் தான் தன்னை இணைத்துப் பணியாற்ற வேண்டியிருக்கும். அல்லது தனித்தன்மையோடு நின்றால், அசுரத் தனமாய் மக்களை ஆக்கிரமித்து இருக்கும் பெருங்கட்சிகளின் முன் தாக்குப் பிடிக்க முடியாமல் காணாமல் போக வேண்டி இருக்கும். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, ஒரு கட்சியில் சேரும் ஒருவன், தன் சுயசிந்தனையை இழந்து அல்லது ஒதுக்கிவைத்து விட்டு,  தலைவரின் கட்டளைக்கேற்ப செயலாற்றுவது, அப்படியே பதவியை நோக்கி முன்னேறும் பயணம் என்று இயல்பான போராட்ட குணத்தை இழந்து கொஞ்சம் கொஞ்சமாய் நீர்த்துப் போகிறான். சென்ற தலைமுறையில் அரசியலுக்குள் நுழைந்த இளைஞர்கள் பலரின் நிலைமை இதுவாகத் தான் இருக்கும்.  

இன்றைய இளைஞர்கள் தொன்னூறுகளுக்குப் பின்னான இந்தியாவை மட்டுமே நேரடி அனுபவத்தில் பார்த்தவர்கள். உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம் இவற்றை எல்லாம் இவர்கள் மாற்றமாய் உணர்ந்தவர்கள் அல்ல, அந்த சூழ்நிலையிலேயே தான் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்களுக்கு நாடு முழுக்க இருக்கும் அமைப்பு ரீதியான அரசியல் கட்சிகள் அனைத்தின் மீதும் அதிருப்தியும், அவநம்பிக்கையும் இருக்கிறது. எந்தவொரு கட்சியின் பெயரை முன்மொழிந்தாலும், இந்த இளைஞர்களின் கண்முன்னால் அந்தக் கட்சியின் கோரமுகமே காட்சியாய் விரிகிறது. இவர்களிடம் நாங்கள் 1965ல் என்ன செய்தோம் தெரியுமா, 1947ல் என்ன செய்தோம் தெரியுமா என்ற பழைய கதைகள் எடுபடுவதில்லை. இன்றைக்கு உங்கள் முகம் என்ன, உங்கள் செயல்பாடு என்ன என்ற அளவில் தான் பார்ப்பார்கள். பழைய தேய்வழக்கு நாடக பாணி வசனங்கள் இவர்களுக்கானதல்ல. இது மீம்களின் காலம், சுருங்கச் சொல்லி புரிய வைக்க வேண்டும். பழையவர்கள் இளைஞர்களின் முகமூடி அணிந்து வந்தாலும், அவர்களால் இவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம். இவர்களுக்கான தலைவன் இவர்களுக்குள் இருந்து தான் வர வேண்டும். அவ்வாறு முளைவிடும் இளம்தலைவர்கள், சாதி அரசியல், மத அரசியல், கமிஷன் அரசியல், ஊழல் அரசியல் போன்ற கழிசடைகளுக்குள் சிக்காமல் இருக்க வேண்டும். தடைகளை மீறி நேரான பாதையில் வளரும் இளைஞர்கள், பொதுமக்களின் பார்வைக்கு வரும் போது, அவர்களும் அந்த இளம் தலைவர்களை தோள் மீது வைத்துத் தூக்கிவிடத் தயாராகவே இருப்பார்கள். எங்கே இருக்கிறான் அவ்வாறான தலைவன்?

******

No comments:

Post a Comment