Thursday, May 21, 2015

வெல்டன் மிஸஸ். வசந்தி தமிழ்ச்செல்வன் - 36 வயதினிலே


திருமணத்திற்கு முன் தனித்துவமாக சிறந்து விளங்கும் ஒரு பெண், திருமணத்திற்குப் பின் குடும்பம், குழந்தை என்று சிறு வட்டத்திற்குள் அமிழ்ந்து, தன் சுயத்தை இழந்து விட்டு வாழ்கிறாள். பின் தனது சுயமரியாதைக்கு இழுக்கு வரும் பொழுது எவ்வாறு அவள் தன்னை மீண்டும் கண்டெக்கிறாள் என்பதை பிரச்சார தொனியோ, ஒரே பாடலில் உலகப்புகழ் அடைவது போன்ற குருட்டு அதிர்ஷ்ட நிகழ்வுகளோ இன்றி இயல்பாக சொல்கிறது வசந்தியின் வாழ்க்கை, அல்லது “36 வயதினிலே” என்ற திரைப்படம்

திரைத்துறையில் உச்சத்தில் இருந்த சமயத்தில், அந்த நட்சத்திர அந்தஸ்த்தை சட்டென உதறிவிட்டு குடும்பத்தலைவியாக மாறிய ஜோதிகா, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையினூடே நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்க வந்திருக்கும் திரைப்படம் “36 வயதினிலே”. வேலைக்குச் செல்லும் மத்தியதரவர்க்கத்து பெண்களின் பிரதிநிதியாய் ஜொலித்திருக்கிறார் ஜோ. பெண்களை மையப்படுத்தி அரிதாக வரும் சில படங்களில் கூட குடும்பத்திலும் சமூகத்திலும் இருக்கும் அனைவரும் அவர்களை கொடுமைப்படுத்துவது போலவும், அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு தியாகத்திருவுருவாய் இருக்கும் நாயகி, ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்து சீறுப்பாய்வது போன்ற மிகையுணர்ச்சிப் பிரதிபலிப்புகளையே பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் “36 வயதினிலே”வில் இயல்பான காட்சியமைப்புகளோடு வசந்தியின் வெற்றிக்கு உடன் இருப்பவர்களும் துணை நிற்பது போன்ற வடிவமைப்பு, படத்திற்கு உயிரோட்டத்தையும், நாம் அன்றாடம் நமது பக்கத்து வீடுகளில், நமது சுமூகத்தில் நடப்பது போன்ற உணர்வையும் தந்திருக்கிறது.

கணவன், குழந்தை, குடும்பம் இதைத்தவிர எதைப்பற்றியும் யோசிக்காமல் கண்களையும், மனதையும் கட்டி வைத்திருந்தவளுக்கு தன்னை விட்டுவிட்டு தனது கணவனும், மகளும் மட்டும் வெளிநாடு சென்று வாழ முடிவெடுக்கும் போது தான் தோன்றுகிறது... “இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் நான் இவர்களுக்கு என்னவாக இருந்திருக்கிறேன்? கணவனுக்கு மனைவியாக, ஒரே மகளுக்குத் தாயாக நான் இனி இவர்களுக்குத் தேவையே இல்லையா ? அப்படியென்றால் நான் இத்தனை நாள் இவர்களுக்காக வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் தான் என்ன ?” இந்த கேள்விகள் தாம் அவள் தன்னை தனக்குள்ளிருந்து மீட்டெடுப்பதற்க்கான விடைகளைத் தேடச் சொல்கின்றன. அதற்கு உறுதுணையாக, காபி போட்டுக் கொண்டு வந்து தரும் மாமனாராகவும், அவளை நம்பி தன் வீட்டு கல்யாணத்திற்கான காய்கறிகளை ஆர்டர் செய்யும் நகைக்கடைக்காரராகவும், அலுவல சிக்கல்களில் அவள் பக்கமிருந்து உற்சாகமூட்டி உதவி செய்யும் உடன் பணிபுரியும் அலுவலராகவும், மொட்டை மாடித்தோட்டம் என்ற அவளது ஐடியாவிற்கு துணை நிற்கும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களாகவும்,  சக மனிதர்கள் எப்போதும் அவள் உடனிருக்கிறார்கள். அவர்களின் துணைகொண்டே அவள் சாதனை புரிகிறாள். 

சில மாதங்களுக்கு முன், நானும் எனது மனைவியும் இன்றைய சமூக சூழ்நிலையில் பெண்கள் வேலைக்கு செல்வது அவர்களது குழந்தை வளர்ப்பில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது என் மனைவி அவர் பணிபுரிந்த கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூவிற்கு மாணவர்கள் பயிற்றுவிக்கும் பொறுப்பில் இருந்தார். அப்போது மாணவர்கள், தங்களை சுய அறிமுகம் செய்து கொள்ளும் போது பெரும்பான்மையினர் தங்கள் தாய் தந்தை இருவரும் வேலைக்குச் செல்கின்றனர் என்று பெருமை பொங்க கூறியிருக்கின்றனர். அந்த மாணவர்களில் என் மனைவி ட்யூட்டராக இருக்கும் பிள்ளைகளும் அடக்கம். அதில் மூன்று மாணவ, மாணவிகளின் அம்மா வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தலைவியாகத் தான் இருந்தனர் என்பது என் மனைவிக்கு நன்றாகத் தெரியும். எனவே பிறகு அவர்களை தனித்தனியாக அழைத்து ஏன் தங்கள் அம்மா வேலைக்கு செல்வதாகக் கூறினர் என்று கேட்டால், சொல்லி வைத்தது போல எல்லோரும் ஒரே பதிலைத் தான் கூறியிருக்கின்றனர் “ எல்லா ஸ்டூடன்ஸ்க்கும் முன்னாடி அம்மா வீட்டுல தான் இருக்காங்கன்னு சொல்றதுக்கு அவமானமா இருந்துச்சு மேம், அம்மா வொர்க் பண்றாங்கன்னு சொன்னாத்தான் கௌரவம்” என்பது தான் அவர்களின் பதில். இந்த மாணவர்களில் யாரேனும் ஒருவருடைய தாய், திருமணத்திற்குப் பிறகு தனது குழந்தைக்காக வேலையை விட்டவராகவும் இருக்கக்கூடும். அவர் தனது மகனின்/மகளின் இந்த பதிலைக் கேட்க நேர்ந்தால் அவரது மனநிலை என்னவாக இருக்கும் ?.  சென்ற தலைமுறை குழந்தைகளுக்கு தாங்கள் பள்ளியிலிருந்து வரும் போது அம்மா வீட்டில் இருந்து தங்களை வரவேற்க வேண்டும். தங்கள் கூடவே இருந்து தங்களை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. ஆனால் இன்றைய குழந்தைகளின் எண்ணவோட்டம் எவ்வளவு மாறியிருக்கிறது பாருங்கள். அவர்களுக்கு பள்ளிகளில், கல்லூரிகளில் தங்கள் தாய் ஒரு ”சாதாரண” குடும்பத்தலைவி என்று சொல்லிக்கொள்ள அவமானமாக இருக்கிறது. தங்கள் தாய் இந்த துறையில், இந்த வேலையில் இருக்கிறார் என்று சொல்லிக்கொள்வதில் தான் அவர்களுக்க்குப் பெருமை. 

இந்த தலைமுறையில் பிரதிபலிப்பாய் தான் வசந்தியின் மகளும் இருக்கிறாள். அவளுக்குப் பெரிய பெரிய கனவுகள் இருக்கிறது. தன் தாய் தன் அளவு ஈடுகொடுத்து வரமுடியாதவளாய் இருக்கிறாள் என்று அவள் மீது ஆற்றாமை இருக்கிறது. அது சமயங்களில் கோபமாய், உதாசீனமாய் வெளிப்படுகிறது. ஒரு சமயம் வசந்தி “உனக்காகத் தானேடீ நான் என் கனவுகளையெல்லாம் விட்டுட்டு இருக்கேன்” என்று கூறுவதற்கு “உன் சோம்பேறித்தனத்திற்கு என்னை காரணம் சொல்லாதே” என்று அவளால் உடனே பதில் சொல்லி வசந்தியை நிலைகுலைய வைக்கவும் முடிகிறது. அதே போல இக்கட்டான சூழ்நிலையில் வசந்தி தங்களோடு வெளிநாட்டில் வந்து தங்கிவிட வேண்டும் என்று அவளது கணவன் வற்புறுத்தும் போது தங்கள் மகளையே துருப்புச்சீட்டாக உபயோகிக்கிறான். ஆனால் வசந்தி சொல்லும் பதிலைக் கேட்டு அவள் மகளால் சமாதானம் ஆகவும் முடிகிறது. பின் தன் தாய் சாதித்து விட்டதை பெருமை பொங்க உலகத்துக்கு தெரிவிக்கவும் முடிகிறது.

வசந்தியின் கணவனான தமிழ்ச்செல்வன், ஒட்டுமொத்த இந்திய நடுத்தரவர்க்கத்து ஆண்களின் பிரதிநிதி. எப்படியாவது முட்டிமோதி அன்றாட பஞ்சப்பாட்டுகளின் கெடுபிடிகளில் இருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற வெறி அவனிடம் இருக்கிறது. அவனது கனவுகள் நொறுங்கும் வேளையில், பகடைக்காயாக மனைவியை உருட்டுகிறான். தனது தோல்விகளுக்கு அவளைக் காரணமாக்குகிறான். மனைவியை சுதந்திரமாக சிந்திக்கவும் விடாமல், தான் நினைப்பதை அவளை செய்ய வைத்து விட்டு பின் அவள் எதற்கெடுத்தாலும் தன்னை எதிர்பார்த்து நிற்கும் போது அதற்காகவும் சினம் கொள்கிறான். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், மத்தியவர்க்கத்து கணவன்மார்கள் எல்லோருக்குள்ளும் அவனது சாயல் இருப்பதைக் காணலாம்.  வழமையாக, பெண்களை மையப்படுத்தும் திரைப்படங்களில் நாயகனின் கதாப்பாத்திரம் தொய்வாகவோ அல்லது கொடூரமாகவோ சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் அவ்வாறு இல்லாமல், தன் மகளைத் தன் பக்கத்து நியாயங்களை நம்ப வைப்பவனாக, அவளது நல்ல எதிர்காலத்திற்காக தன்னுடன் வெளிநாட்டிற்கு அழைத்து செல்பவனாக நல்ல தந்தையாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. தான் தவறு செய்யும் இடங்களில் கண்களைத் தாழ்த்தி குற்றயுணர்ச்சியோடு அதே சமயம் மனைவியின் சொற்களை ஏற்காமல் நிலைகுலையும் இடங்களில் இரகுமான் நன்றாக நடித்திருக்கிறார். நாயகன் கதாப்பாத்திரத்திற்கு நல்ல தேர்வும் கூட.

சமூக ஊடகங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையில் என்னென்ன சலனங்களை, பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது இத்திரைப்படம். வழக்கமாக, ஃபேஸ்புக்கில் தான் திரைப்படங்களை கிண்டல் செய்வார்கள். அதனால் இயக்குநருக்கு ஃபேஸ்புக் பயனர்கள் மீது இருக்கும் கோபத்தையும் லேசாக காட்டியிருக்கிறார். மொத்ததில், தன் தனித்திறமைகளை மறந்து வீட்டு வாழ்க்கைக்குள் முடங்கிக் கிடக்கும் இலட்சக்கணக்கான திருமதிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும், மனம் நிறைந்த உற்சாகம் கொடுக்கும் வகையிலும் 36 வயதினிலே வென்றிருக்கிறார் மிஸஸ். வசந்தி தமிழ்ச்செல்வன். 

******

No comments:

Post a Comment