Monday, April 27, 2015

மழை வரும் பருவம்

பனிரெண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீண்டு செல்கிறது அவன் ஊரை நோக்கிய பயணம். வாகனத்தில் ஏறியதிலிருந்து இன்னும் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. சிறு விசும்பல் இல்லை, இன்னும் முதல் சொட்டுக் கண்ணீர் விழவில்லை. தாழ்ந்திருக்கும் தலையை எப்போதாவது உயர்த்தி, பின் செல்லும் காட்சிகளை வெறித்துப் பார்க்கிறான், பின் மீண்டும் தலை கவிழ்ந்து கொள்கிறான். ஏதேதோ நினைவூட்டல்கள் செய்து பார்த்தாலும், கவனமாற்றுகள் செய்ய நினைத்தாலும், முகத்தில் சிறுசலனமுமில்லாமல் ஒரு வெற்றுப்பார்வை பார்க்கிறான். அதோடு மீண்டும் தலை கவிழ்ந்து கொள்கின்றான். இடையில் நெடுஞ்சாலை மோட்டல்களில் மூன்று முறை வாகனத்தை நிறுத்தி டிரைவரை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளச் செய்த போது கூட “ஏதாவது சாப்பிடுடா... தண்ணீராவது கொஞ்சம் குடிடா” என்று என்ன வற்புறுத்திக் கூறினாலும் மறுதலித்து சிறு தலையசைப்பு மட்டும் தான். 

வழி நெடுகிலும் கொடிய வெக்கை. காற்றில் ஈரப்பதம் என்பது மருந்துக்கும் இல்லை. அணல் கக்கும் வரண்ட காற்றை கிழித்துக் கொண்டு விரைகிறது வாகனம். நீண்ட பயணத்தில், அவனது மௌனத்தின் கனத்தை தாங்க முடியாமல் டிரைவருடன் ஏதாவது பேச்சு கொடுத்துக் கொண்டே வருகிறேன். சமயத்தில் போகும்வழி பார்க்கும் காட்சிகள் குறித்து, நான்கடுக்கு சாலைகளின் விதிமுறை குறித்து, வனத்தைப் பிளந்து நெடுஞ்சாலைகள் அமைத்து அதன் நடுவில் அரளிச்செடிகள் நட்டு வைப்பது குறித்து, எதிர்சாலையில் வரிசையாக வரும் கண்டெய்ணர் லாரிகள் குறித்து, அதனை இயக்கி வரும் டிரைவர்கள் மற்றும் அவர்களுடன் துணைக்கு வரும் கிளீனர்கள்களின் இடைவெளியற்ற பயண அட்டவணை குறித்து, டோல் கேட் அருகேயிருக்கும் மரத்தடிகளில் அவர்கள் சமைத்து உண்டு, இளைப்பாறிக் கொண்டு பின் மீண்டும் பெரும்பயணம் தொடர்வது குறித்து, சாலையோரங்களில் கவிழ்ந்து கிடக்கும் விபத்தான வாகனங்கள் குறித்து, அத்தகைய விபத்துகளில் அநியாயமாய் துள்ளித்துடிக்கும் உயிர்கள் குறித்து, உதவிக்கு ஆளில்லாமல், குத்தியிரும் குறையுயிருமாய்  போராடித் தழுவும் மரணம் குறித்து... ஆம் மரணம் குறித்து... சம்பந்தமில்லாத எதையாவது அறுபட்ட சொற்களால் தொடர்ந்து பேசிக் கொண்டே எப்படியாவது அவனது கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்தாலும், இறுதியில் மரணம் என்ற வார்த்தை வரும் போது, மீண்டும் மௌனம் ஆக்ரமிக்கத் துவங்கிவிடுகிறது. நேரம் செல்லச்செல்ல வெற்றுச்சொற்கள் அனைத்தையும் தன்னுள் விழுங்கிக் கொண்ட மௌனம் வாகனம் முழுமைக்கும் வியாபித்திருக்க, செல்லிடம் தன்னைப் பின்னிழுத்துக் கொண்டே செல்வது போலத் தோற்றமயக்கம் காட்டுகிறது.

செல்வா.... தன் வயதையொத்த எல்லாரையும் போலவே அவனுக்கும் கனவுகள் இருக்கின்றன. முதல் தலைமுறை பொறியாளர்கள் எல்லோருக்கும் இருப்பது போலவே அவனுக்கும் பெரிய பெரிய ஆசைகள் இருக்கின்றன. நன்றாகப் படிக்கும் எல்லாப்பிள்ளைகளையும் போலவே அவனுக்கும் இலட்சியம் இருக்கின்றது. கீழ் மத்தியதர வர்க்கத்து வளர்ப்பின் வார்ப்ருவாகவே அவனக்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன, சில பயங்கள் இருக்கின்றன, சில சங்கடங்கள் இருக்கின்றன. ஆனால் அவனது எல்லா செயல்களுக்கும் மையச்சரடாக “அம்மா” என்ற ஒற்றை வார்த்தை தவிர வேறு எதுவும் இருந்ததில்லை. தன் கதையை எல்லோருக்கும் சொல்லி “ஐயோ, பாவம்” பெற்றுக் கொள்ளும் ரகமல்ல செல்வா. மொத்த கல்லூரிக்கும், பெயர் தெரிகிற அளவுக்கு ஒரு ஆல்-இன்-ஆல். கல்லூரியில் பேராசிரியர்கள், சக மாணவர்கள், ஜூனியர்கள் என எல்லோருக்கும் பிடிக்கும் “நல்ல பையன்”.

அவனது பெற்றோர்களுக்குத் திருமணமான நாற்பதாவது நாள், கிணற்றுக்கு உறை இறக்கச் சென்ற இரு வேலையாட்கள் வெகு நேரமாய் சத்தம் கொடுக்கவில்லை என உள்ளே இறங்கிப் பார்க்கச் சென்ற அவனது அப்பாவையும் சேர்த்து மூன்று பேர்களையும் மண் மூடிக் கொண்டது. மொத்த கிராமமுமே சவக்களை பூண்டிருந்த அன்றைய நாளில், இறந்தவர்களுக்கு நிவாரணத்தொகை வசூலிக்கக் கூடிய ஊர்க்கூட்டத்தில் அறிவிக்க அவனது அம்மாவிற்கு ஒரு செய்தி இருந்தது. தனக்கு ஐந்து நாட்கள் தள்ளிப் போயிருப்பதாகவும், கரு உருவாகி இருக்கும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதால் அதை ஊர்ப்பொதுவில் தெரிவித்து விடுவதாகவும் கூறினாள். செல்வா, அவனது அம்மாவின் நம்பிக்கையை அந்த முப்பத்தைந்தாம் நாள் கருவிலிருந்து இன்று வரை ஒரு போதும் பொய்யாக்கியதில்லை. எப்போதாவது தனிமையில் பேசிக்கொண்டிருக்கும் போது அரிதிலும் அரிதாக அவன் அம்மா ஒற்றை மனுசியாக தன்னை வளர்த்தெடுத்த கதைகளை என்னிடம் மட்டும் கூறியிருக்கிறான்.

நடுநிசியைத் தாண்டிய பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. டிரைவரும் தொடந்து வண்டியோட்டிக் கொண்டிருந்ததால், சற்று நேரம் ஓரமாக நிறுத்தி கண்ணயர்ந்து விட்டு பின் செல்லலாம் என்று வண்டியை நிறுத்தச் சொன்னேன். அவனது வெறித்த பார்வை நிலை குத்தியபடியே இருந்தது. இப்பொழுது எனக்கு லேசாக பயம் வரத் துவங்கியது. அவனை சற்று இயல்பு நிலைக்கு கொண்டு வரும் முயற்சியாய், கெஞ்சிப் பார்த்தும், அறிவுரைகள் கூறிப்பார்த்தும், ஆறுதல் சொல்லிப்பார்த்தும் எதற்குமே அவன் அசைந்து கொடுக்காதவனாய் சமைந்திருந்தான். இறுதியில் கோபத்தில் “என்னதான்டா மனசுல நினைச்சுட்டு இருக்க, சொல்லியாவது தொலைடா... செல்வா ! மனசு விட்டு அழுடா... உங்க அம்மாவை நினைச்சு அழு.. உங்க அம்மாவை நினைச்சு அழு....” என்று மனது உடைந்து அவனைக் கட்டிப்பிடித்து அழுத போதும் அப்படியே தான் அமர்ந்திருந்தான். பிறகு அவனுக்குத் துணைக்கு வந்து விட்டு நான் சமநிலை இழப்பது சரியல்ல, என்று எனக்கு நானே சமாதானம் கூறிக் கொண்டு வாகனத்தை இயக்கச் சொல்லி கிளம்பினோம்.

நேற்று காலை, இறுதியாண்டின் கடைசித் தேர்வுக்காக விடுதியில் இருந்து கிளம்பிக் கொண்டிருக்கையில் தான் தொலைபேசி வந்தது. ”செல்வாவுக்கு ஃபோன்” என்று வார்டன் அறையில் இருந்து அழைப்பு வந்த போது அவன் குளித்துக் கொண்டிருந்ததால், அவன் அம்மா தான் அழைத்திருப்பார் என்று எண்ணி, நான் தான் சென்று பேசினேன். நேற்று இரவு வரை பக்கத்து வீட்டாருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்று படுத்தவர், காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் கொண்டு சென்று பார்க்கையில் உறங்கிய நிலையிலேயே மரணமடைந்திருக்கிறார். எப்பொழுது இறந்தார், நான்காண்டுகள் தன்னை விட்டுப் பிரிந்து, விடுதியில் தங்கி மறுநாள் வரக்காத்திருக்கும் மகனுக்காக என்ன செய்தி வைத்திருந்தார் என்று கூடத் தெரியவில்லை. ஒரு வார்த்தை சொல்லாமல் சென்றுவிட்டார். அதுவரை உற்சாகக் குவியலாய் துள்ளிக் கொண்டிருந்தவன், செய்தியைக் கேட்டவுடன் அப்படியே உறைந்து விட்டான். அப்போது தலை கவிழ்ந்தவன் தான், அதன் பிறகு எதற்கும் வாய் திறக்கவில்லை. கடைசி தேர்வு அது என்பதாலும், அவனது அம்மாவின் கனவும் அவன் நன்றாக படித்து பட்டம் பெற வேண்டும் என்பதையும் சொல்லி, தேர்வு அறைக்கு அழைத்துச் சென்றோம். தலை கவிழ்ந்தபடியே வந்து ஒரு வார்த்தை பேசாமல் தேர்வெழுதிவிட்டு, வந்தவன்,  வாகனத்தில் ஏறி, இப்போது வரை மௌனியாகவே இருக்கிறான்.

பொழுது விடியும் நேரத்தில் அவனது கிராமத்தை நெருங்குகிறது வாகனம். வீடு வந்து சேர்ந்ததும் வாகனத்திலிருந்து தலை கவிழ்ந்தவாறே இறங்குகிறான். கூடியிருக்கும்  கூட்டம் அவனை சூழத் துவங்க, அவர்ளிடமிருந்து வேகமாய் விலகியபடி நகர்ந்து செல்கின்றான். கசங்கிய ரோஜாவின் மணமும், ஊதுபத்தி வாசனையும் வீடெங்கும் வியாபித்திருக்க, நடுக்கூடத்தில் கட்டில் போடப்பட்டிருக்கிறது. அறை முழுதும் உதிரிப்பூக்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. கட்டிலுக்கு அருகில் படி நிறைய நெல் வைத்து அதனருகில் அகல்விளக்கேற்றி வைக்கப்பட்டிருக்கிறது. கை கால் விரல்களை கோர்த்து கட்டிக் கொண்டு, எத்தனை முறை அழைப்பு வந்தும் போகாமல், விடாப்பிடியாய் விரைத்துப் படுத்தபடி மகன் வரவிற்காக பிடிவாதமாய் காத்துக்கொண்டிருக்கிறாள் அவன் அம்மா. மெதுவாய் அவள் அருகில் சென்று அவளைக் கட்டிப் பிடித்துக் குலுங்கத் துவங்குகிறான். வெளியே, பிரயாணத்தின் மொத்த புழுக்கத்தையும் துடைத்து எறியும் படி, குலைநடுங்கும் பெரும் ஓசையுடன் இடியிடிக்க, சேர்த்து வைத்திருக்கும் அத்தனை நீரையும் வெள்ளமாய் கொட்டித் தீர்க்கும் ஆவேசத்துடன் மேகங்கள் முட்டிக் கொள்கின்றன. நொடி நேரத்தில் வானிலை மாறி கோடைக்கான முதல் மழைத்துளி பெருவட்டமாய் மண்ணில் பட்டுத் தெறிக்கின்றது.

17/4/2015 அன்று மலைகள் இணைய இதழில் வெளியானது. நன்றி மலைகள் http://malaigal.com/?p=6575
******

4 comments:

Anonymous said...

This is a topic that is near to my heart... Thank you!
Exactly where are your contact details though?

Here is my web blog: homepage ()

பாலகுமார் விஜயராமன் said...

I am from Madurai.
Your web page not shown..

முனைவர். வா.நேரு said...

என்ன கொடுத்தும் , என்ன செய்தும் ஈடு கட்ட முடியாத இழப்பு அம்மாவின் இழப்பு. இழப்பினை விவரித்துச்செல்லும் மையப்புள்ளியிலிருந்து எந்த இடத்திலும் விலகாமல் , இழப்பின் வேதனையை கனமான விவரிப்பால் எடுத்துச்செல்லும் கதை. இது கதையாக இல்லை, மனக்கண் முன்னால் விரியும் சித்திரமாக உள்ளது. அருமை.

பாலகுமார் விஜயராமன் said...

மிக்க நன்றி நேரு சார் !

Post a Comment