Wednesday, October 30, 2013

நான் எழுதலாமா?

இணையத்தில் எழுதுகிறேன் என்று தெரிந்தவர்கள் கேள்விப்படும் பொழுது, பெரும்பான்மையினர் சுற்றி வளைத்துக் கேட்கும் கேள்வி “எதுக்காக எழுதுறீங்க?”. இதற்கு நேரடியாக என்னால் பதில் சொல்ல முடிந்ததில்லை. மையமாக சிரித்து விட்டு “சும்மா தான்” என்று  கூறுவேன். 

நேரம் ஒதுக்கி, உழைப்பை செலுத்தும் பொழுதுபோக்கு தேவையா?
நீயெல்லாம் எழுதி என்ன “ஆஸ்காரா” வாங்க போற?
லீவு நாள்ல ரெஸ்ட் எடுக்காம என்னத்த லேப்டாப்லயே உக்கார்ந்திருக்க?
ஆஃபிஸ் டென்சன் பத்தாதுன்னு இதுல வேற ஏங்க முட்டி மோதிட்டு இருக்கீங்க?
ஹாபி’யைக் கூட கர்மசிரத்தையா செய்ற ஆளாடா நீ?
பாரு, பொழுதன்னக்கும் எதையாவது யோசிட்டு, மூளை குழம்ப தான் போகுது?
இண்டர்நெட்ல எழுதுறதெல்லாம் குப்பைங்க. வேலைவெட்டி இல்லாதவனுக என்னத்தையாவது கிறுக்குவானுக.
எழுதுறதெல்லாம் வேஸ்ட் சார். சினிமா, டி.வி.னு போனா தான் சார் ஒரு கெத்து.
காலம் எங்கேயோ போய்ட்டு இருக்கு. இப்பல்லாம் வாசிக்கிற பழக்கம் எல்லாம் ஓல்ட் ஃபேஷன்.
பக்கம் பக்கமா எழுதுறவங்களை பார்த்தாலே எனக்கு அவெர்சன். 
ஜிப்பா, தாடி, ஜோல்னாபை ஸ்டேடஸுக்கு எப்போ மாறுவீங்க?

இப்படி எத்தனை கேள்விகள் வந்தாலும், எதையும் பொருட்படுத்தியதே இல்லை. எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் எழுதுகிறேன். நான் ஒன்றும் உலக எழுத்தை எழுதிவிடப்போவதில்லை தான்.  ஒளிவட்டம் கூடும், சிலபல லைக்ஸ், கமெண்ட்ஸ் வரும், ஓவர்நைட் பிரபலம் ஆகிடுவோம் என்ற நப்பாசைகள் எல்லாம் கூட இல்லை. ஆனாலும் என்ன எழுதினாலும், அது அசட்டு நகைச்சுவையோ அல்லது சுயசொறிதலோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் மனதுக்கு நெருக்கமானதை, உண்மையானதை மட்டும் தான் எழுத வேண்டும். அதை யார் எப்படி எடுத்துக் கொண்டாலும், எனக்கான இலக்கு தூரத்தில் எங்கேயோ இருக்கிறது. அதை நோக்கி தினம் ஒரு அடி எடுத்து வைக்கிறேன் என்ற நம்பிக்கையுடனேயே எழுதுகிறேன். இன்னும் சொல்லப்போனால், இந்த ஆரோக்கியமான பொழுதுபோக்கில் மிகப்பெரிய இளைப்பாறுதல் கிடைக்கிறது. கடிவாளம் கட்டிவிட்டு ஓடும் குதிரை போன்ற வாழ்க்கை முறையில், “எதையாவது” எழுதுவது கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. அவ்வளவுதான்.

இணைப்பில் உள்ளது, அதிசயமாக நான் முழுவதும் ஏற்கும் ஒரு கட்டுரை. இவர் சொல்லி இருக்கும் கருத்தை தான் நானும் நம்புகிறேன், என்னால் ஆனதை எழுதுக் கொண்டிருக்கிறேன்
http://www.jeyamohan.in/?p=338

7 comments:

 1. “எதுக்காக எழுதுறீங்க?”

  ReplyDelete
 2. //அதிசயமாக நான் முழுவதும் ஏற்கும் ஒரு கட்டுரை. //

  ஆனால் ஒரே ஒரு புள்ளியில் சந்தேகம். பின்னூட்ட விவாதம் வேண்டாம் என்கிறார். ஆனால் பல பதிவுகளில் விவாதமே ஒரு நல்ல மேடையாகிறதே. எனக்கு என் மதங்கள் பற்றிய பதிவுகள் நினைவுக்கு வருகின்றன.

  ReplyDelete
 3. //“எதுக்காக எழுதுறீங்க?” //
  @தருமி ஐயா, சும்மா தான் :)

  ReplyDelete
 4. வணக்கம்
  நல்ல விளக்கம் பதிவு... அருமை வாழ்த்துக்கள்

  இனியதீபாவளி வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. நன்று! தொலைபேசி துறையில் இருந்து இன்னொரு ஜெயமோகன்? . அதனால் , நிறைய புத்தகங்களை எதிர்பார்க்கலாம்!. சினிமாவையும் தான்.

  ReplyDelete
 6. கடிவாளம் கட்டிவிட்டு ஓடும் குதிரை போன்ற வாழ்க்கை முறையில், “எதையாவது” எழுதுவது கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. அவ்வளவுதான்.

  நல்ல வரிகள்.

  ReplyDelete