Wednesday, January 23, 2013

வலசை (பயணம் 3) - சொல்ல செய்தியொன்று இருக்கிறது"இவ்வலசை ஒரு சிறப்புக்கவனத்திற்குரிய குழந்தையின் தாய்க்கு இம்மியளவு நம்பிக்கையை பெருக்க முடிந்தால், ஒரு கற்றல் குறைபாடுள்ள குழந்தை ஒரு புதிய சொல்லை கற்பதை எளிதாக்க இக்கல்விமுறை தன் புகட்டுமுறையில் திருத்தங்கள் செய்ய ஒரு விதை விழுந்தால், தன்னளவில் இப்பயணத்திற்கான பொருளடையும்" (பக்கம் 212)

சிறப்புக்குழந்தைகளை பேசுபொருளாகக் கொண்டு வெளிவந்துள்ள “வலசை - பயணம் 3” இதழின் ஒருவரிப்படிமம் தான் மேற்கூறியவை. பல்வேறு திசைகளிலிருந்து ஒற்றை செவி நோக்கி உரைக்கப்படும் ஒருபொருட்பன்மொழியாக ஒலிக்கிறது வலசையின் மூன்றாம் பயணம். வேறுபட்ட சூழல்களில், மொழிகளில், நாடுகளில், இலக்கியங்களில் பேசப்பட்ட ஒற்றைக் கரு உருவமாகி வெளிவந்திருக்கிறது. 

ஒரு தேர்ந்த ஆய்வு நூலைப் போல, களஞ்சியத்தைப் போல, விதை நெல்லைப் போல, கன்னி மூலையில் சேர்த்து வைத்திருக்கும் பொருள் நிறைந்த பெட்டகத்தைப் போல செழிப்புடன் வந்திருக்கிறது இவ்வலசை ஆழ்ந்த வாசிப்பாளர்களுக்கான அடர்த்தியான பெருளை மென்மையான பேசுமொழியில், வரிகளுக்கிடையில் கண்ணுறுத்தாத போதிய இடைவெளி விட்டு அழகாக உருவாக்கியிருப்பது வலசையின் முதல் வாசகர்களின் தீராத வாசிப்பின் விளைபயன் . 

வலசை - மூன்றாம் பயணத்தின் சில பக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம். முழு இதழையும் இன்னும் வாசிக்கவில்லை. அதற்கு நாட்களாகலாம். சொல்லப்போனால் சில பகுதிகள் என்னளவில், நெருங்க முடியாத அளவிற்கு கனமாகக் கூட இருக்கிறது. நீங்களும் இந்த இதழை வாசிக்கும் போது இதே போன்றோ அல்லது வேறுவிதமான சிரமங்களோ எதிர்கொள்ள நேரிடலாம். ஆனாலும் குழந்தைகளை விரும்புகிற உங்களுக்கும், எனக்கும், எல்லோருக்கும் சொல்ல செய்தியொன்றை வைத்திருக்கிறது இவ்வலசை.

வானத்தை அண்ணாந்து பார்க்கும் வானம் தவிர வேறொன்றுமறியாத சிறுவர்கள், எல்லையில்லா வானத்தை தம் சிறகுகளால் மறைத்து வலசை செல்லும் பறவைகளைக் காண்கிறார்கள். தம் கண்களிலிருந்து தொடங்கி, வானமெங்கும் பூத்துக் கிடக்கும் மேகத்தைப் பார்க்கிறார்கள், ஆடுகளைக் கிடையில் அடைப்பதைப் போல மேகத்தை அடைத்து வைக்கிறார்கள். அகன்ற வானத்தின் மேகங்களை ரசித்தபடி தாம் கட்டிய மணல்வீடுகளிலிருந்து வெளியேறும் நீர்மிருகங்களுக்கஞ்சி அவ்ர்கள் ஓடி ஒளியும் பொழுது குழியளவாய் சுருங்கிய ஆகாயம் அச்சிறுவர்களின் வாலாய் திரிகிறது. எல்லையில்லா வானத்தை மேய்த்துக் கொண்டு செல்லும் சிறுவர்களின் உலகிற்கு பயம்கொண்டு சுருளும் வாலாக ஆகாயன் பின் செல்லும் படிமத்தைப் பேசும் ஒரு கவிதை. (மேகத்தைத் தூண்டிலிடும் சிறுவர்கள் - செல்மா பிரியதர்ஸன் - பக்கம் 6)

விதிமுறைகளுக்குள் அடைக்கப்பட்டு போன்ஸாய் மரமாய் கட்டுக்குள் வளர்க்கப்படும் குழந்தைகளைப் பற்றி பேசுகிறது ஒரு கதை (குழந்தை அவள் செய்த முதல் தப்பு -டொனால்ட் பார்த்தலுமே - பக்கம் 7). புத்தகங்களின் பக்கங்களைக் கிழிப்பது குற்றம் எனும் கற்பிதத்தில் தனியறையில் பூட்டி வைக்கும் தண்டனைக்குள்ளாகும் சிறுமி மேலும் மேலும் பக்கங்களைக் கிழித்துக் கொண்டிருக்கிறாள். தண்டனைக்காலம் மலை போல் குவிய, ஒரு முறைநெறிச் சிக்கலுக்கு ஆளாலும் தந்தை கற்பிதங்களை மாற்றி வடிவமைத்துக் கொண்டு மன உளைச்சலிலிருந்து விடுபடுவதாக முடிகிறது. பிற்போக்குத்தனமாய் இருந்த தன் தந்தைக்கு எதிர் செயல்பாடாக பின்னவீனத்துவ முறையில் எழுதப்பட்ட கதை. “வாய்விட்டுப் படி, எழுதிப்பார், சுவரில் கிறுக்காதே” என எண்ணற்ற வழிமுறைகளை, நமக்குக் கற்பிக்கப்பட்டதை நாமும் கண்மூடிக்கொண்டு நமது குழந்தைகளுக்குக் கடத்திக் கொண்டிருப்பது நினைவில் வருவதைத் தடுக்கமுடியவில்லை. 

தேவபாவனைகளின் முணுமுணுப்புடன் வெளிறித் தேய்ந்த தேவதைகள் ஆமோதிக்க, இறுதி ஊர்வலத்தை ஒரு உன்னதமான இசைக்கோர்ப்பாக்கி, மனிதன் என்னும் துன்பவியல் நாடகத்தின் முடிவில் மண்ணரித்துப் போகும் அழகியலை வெளிப்படுத்துகிறது ஒரு கவிதை (வாகை சூடும் புழு - எட்கர் ஆலன் போ - பக்கம் 54). துன்பத்தைக் கொண்டாடும் அகநிலை.

வகுப்பில் கற்றல் குறைபாடுள்ளவனாக சித்தரிக்கப்படும் ஒரு சிறுவன்,  கரும்பலகையில் எழுதியுள்ள எழுத்துக்கள் தலைகீழ் எறும்புச்சாரையைப் போல் நகர்வது ஏன் என தன் ஆசிரியரிடம் கேட்கவும் ஒரு கேள்வி வைத்துள்ளான். ஆனால் அதை உரக்கக் கேட்கவும் துணிவின்றி, ”நீ எதற்கும் லாயக்கற்றவன், நீ இன்னும் கூர்மையாக கவனிக்க வேண்டும்” என்பது போன்ற தொடர்பற்ற அறிவுரைகளால் துவண்டு போய் தனக்கென ஓர் உலகை உருவாக்கிக் கொண்டு அதிலேயே சஞ்சரிக்கத் துவங்கி விடுகிறான். அத்தகைய ஒரு குழந்தையில் உள்ளக் கிடக்கையை சொல்கிறது ஒரு கவிதை (கற்றல் குறைபாடுள்ள குழந்தை - ஜேம்ஸ் மெக்லெய்ன் - பக்கம் 66)

இன்னொரு கவிதையில், பள்ளியில் தன்னைத் திட்டும் அனைத்து ஆசிரியர்களையும் கேலிச்சித்திரங்களாக்கி தண்டனை அளிக்கத் துவங்குகிறாள் சிறுமியொருத்தி. குச்சியைக் கொண்டு அதட்டும் டீச்சரின் உடம்பைக் குச்சியாக வரைகிறாள். கிள்ளும் டீச்சரின் காதை தரை வரை இழுத்து வைக்கிறாள். தலைமையாசிரியரின் தலையை மழித்து அதைக் கரும்பலகையாக்கி அதில் மதிப்பெண் இடுகிறாள். பூனைகளை, நாய்க்குட்டிகளை ஒத்த சேட்டைகளால் வீட்டையே கலவரப்படுத்துகிறாள், கலகலப்பூட்டுகிறாள். சில நாட்களுக்குப் பிறகு அவள் உற்சாகமெல்லாம் வடிந்து மௌனமாகிறாள். பள்ளி துவங்கும் நாள் நெருங்குவதை எண்ணி நாங்களும் பெற்றோரும் பதற்றமடைகின்றனர். (வலியின் சித்திரங்கள் - ந.பெரியசாமி - பக்கம் 68)

கல்குழவி கொண்டு மார்பு மொட்டுகளை நசுக்கும் “முலை நீவுதல்” என்னும் நிகழ்வு இன்றும் ஆப்ரிக்க தேசங்களில் உள்ள ஒரு பழக்கம். முறையற்ற கர்ப்பம், கற்பழிப்பு ஆகியவைற்றை தடுப்பதற்காக செய்யப்படுவதாக சொல்லப்படும் இச்செயல் பூப்படையும் சிறுமிகளுக்கு பெரும்பாலும் தம் தாயின் மூலமே நடைபெறுகிறது. மார்புப் புற்று நோய்க்குக் பெரும்காரணியாக இருக்கும் இந்த செயலுக்கு நான்கு மில்லியனுக்கும் மேலான சிறுமிகள் உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அச்சிறுமியரின் வலியைப் பேசும் கவிதை (முலை நீவுதல் - நேசமித்ரன் - பக்கம் 78) நாவற்பழ வாசமும், நீருயிரியைப் போன்று கதகதப்பும் உடைய தன் தாயின் அடிவயிற்றில் முகம்புதைத்து படுத்துறங்கும் வழக்கமுடைய சிறுமி, பூப்பெய்தவுடன் முலை நீவுதலுக்கு உட்படும் பொழுதும் நடுநடுங்கும் கைகளையுடைய தன் தாயின் அடிவயிற்றுக் கதகதப்பை உண்ர்கிறாள். பின்னாளில் புற்று நோய்க்கு தின்னக்கொடுத்த தன் மார்புக் குழிகளை அவளது தாய் வருடும் போது முன்னெப்போதையும் விட நாவற்பழ வாசனை அதிகமாய் கசிவதை உணர்ந்து கண்ணீர் சிந்துகிறாள். 

தன் மனைவியின் பிரசவத்தை எதிர்நோக்கி விரைந்து செல்கின்றான் கணவன். வழியெங்கும் சகுணங்கள் வாழ்த்திசைக்க “மகனாக இருக்கட்டும், மகனாக இருக்கட்டும்” என்று ஆவலுடன் செல்பவனுக்கு மனவளர்ச்சி குன்றிய ஆண்மகவெனக் கூறும் மருத்துவரின் சொல் இடியென இறங்குகிறது. தன் உலகில் இருந்து விலகிவிட்டவனாகவும், இனி ஒருபோதும் தன்னருகே வரமுடியாதவனாகவும் ஆகிவிட்ட மகனைக் குறித்து கண்ட கனவுகளனைத்தையும் புறந்தள்ளி நிற்கும் இளம் தகப்பனைப் பற்றிய கவிதையொன்று. (வாதுமை மரம் - ஜோன் ஸ்டால்வொர்தி - பக்கம் 93)

சர்வ வல்லமை படைத்த ஸ்வஸ்திகையின் கீழ் ஜெர்மனியெங்கும் வேட்டையாடப்படும் யூத அடிமையென அலைக்கழிக்கப்படும் மனதுடன் தன் தந்தையின் வன்கொடுமையால் உழன்று வெதும்பும், தந்தையின் இன்னொரு உருவாக அமைந்த கொடுங்கணவனையும் கொல்ல ஏக்கம் கொள்ளும் இளம்பெண்ணின் குமுறலாக ஒலிக்கிறது இன்னொரு கவிதை. தான் பிறந்த மண்ணும், மண்ணின் மொழியும் கீழ்மையானதாக வெறுக்க வைக்கும் எண்ணம் தழைத்தெழுந்து தன்னை மாயத்துக் கொள்ளுமுன் எழுதிய தற்கொலைக் கவிதையது (அப்பா! - சில்வியா ப்ளாத் - பக்கம் 152)

சூல் கொண்ட நாள் முதல் தொப்புள் கொடியறுத்து முடிச்சிட்டு முதல் சுவாசம் கொண்ட நொடி வரை நேசனும், கார்த்தியும் ஏற்றுக் கொண்ட சிரமங்களை அருகிலிருந்து பார்த்தவன் என்ற முறையில் அவர்களின் உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும், பொறுமைக்கும் சிரம் தாழ்ந்த வந்தனங்கள். எந்தப்பருவத்தில் ஊட்டச்சத்து கொடுக்க வேண்டுமென்பதில் மட்டுமல்ல எப்போது பத்தியம் இருக்கவேண்டும் என்பதையும் இவர்கள் அறிந்தே வளர்த்தெடுத்திருக்கிறார்கள் இந்த வலசையை. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பர்களே, இன்னும் உயரம் தொடுவீர்கள் !

வலசை - பயணம் 3
பக்கம் 212 (A4 அளவு)
விலை - ரூ 100
தொடர்புக்கு :
nesamithranonline@gmail.com - 9677250213
karthickpandian@gmail.com - 9842171138

******

6 comments:

 1. மிகவும் அருமையான பதிவு, பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 2. சார்,
  கனமான விசயத்தைக் கனமாக , அதே நேரத்தில் கவித்துவமாக கொடுக்கும் உங்கள் வழி , புது வழி. நகைச்சுவை, தத்துவம், சீரியஸ்னஸ் அப்புறம் எதார்த்தம் கலந்த கலவையாய் உங்கள் இடுகைகள். தூள் கிளப்பிறங்கே ,.நீங்களும் இன்னும் உயரம் தொடுவீர்கள்! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. சிறப்புகுழந்தைகளைக் குறித்து தனிநூலாக வந்த வலசை சிறப்படைய வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 4. உன்னுடைய தமிழ் நடை போகப்போக "ஹெவியாக" மாறிக்கொன்டு வருகிறது....இந்த சோம்பேறி யால் உடனே புரிந்து கொள்ள முடிவதில்லை ....சற்று "லைட்" ஆக இருப்பின் "கேட்ச் அப் " செய்து கொள்ள எளிதாக இருக்கும்.....

  -மதன்

  ReplyDelete
 5. //சூல் கொண்ட நாள் முதல் தொப்புள் கொடியறுத்து முடிச்சிட்டு முதல் சுவாசம் கொண்ட நொடி வரை நேசனும், கார்த்தியும் ஏற்றுக் கொண்ட சிரமங்களை அருகிலிருந்து பார்த்தவன் என்ற முறையில் அவர்களின் உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும், பொறுமைக்கும் சிரம் தாழ்ந்த வந்தனங்கள். எந்தப்பருவத்தில் ஊட்டச்சத்து கொடுக்க வேண்டுமென்பதில் மட்டுமல்ல எப்போது பத்தியம் இருக்கவேண்டும் என்பதையும் இவர்கள் அறிந்தே வளர்த்தெடுத்திருக்கிறார்கள் இந்த வலசையை. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பர்களே, இன்னும் உயரம் தொடுவீர்கள் !//

  பாலா,
  உங்களைப் போல் இவ்வளவு அழகாக வாழ்த்தத் தெரியாததால், எளிமையாகச் சொல்லி விடுகிறேனே ...

  ரிப்பீட்டே .....

  ReplyDelete