Friday, October 30, 2015

சங்கத்து ஆள்

தொழில்துறையில் சங்கங்கள் எதற்கு ஆரம்பிக்கப்பட்டதோ, இன்று அவை பல பரிணாம வளர்ச்சிகள் அடைத்து வேறு ஒரு லெவலில் தான் இருக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் ஒரு சாமானியனுக்கோ, ஏன் ஒரு சாதாரண ஊழியருக்கோ, அதிகாரிக்கோ கூட சங்கம் என்பது வெட்டி வேலை. ஒழுங்காக வேலை செய்யாதவர்கள் கூடி கோஷம் போட்டுக்கொண்டும், எப்போது பார்த்தாலும் கலகக்குரல் எழுப்பி கொண்டும், பிரச்சனை செய்து கொண்டும், வேலை செய்பவர்களை வேலை செய்யவிடாமல் குறுக்கீடு செய்யும் கூட்டம் தான் சங்கம் என்ற நினைப்பே பொதுவாக மேலோங்கி நிற்கிறது. இதில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன சங்கங்களின் பிம்பம் இன்னும் மோசம். அரசும், நிர்வாகமும் அவர்களைத் தங்கத்தட்டில் வைத்து தாங்கினாலும், அவர்கள் எல்லாம் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, வேலை என்று எதுவுமே செய்யாமல் வருடத்துக்கு இரண்டு முறை நியாயமே இல்லாமல் “சம்பளத்தை உயர்த்துவதற்காக” மட்டுமே கொடிப்பிடித்து போராட்டம் நடத்துவதாக பலரும் எண்னிக் கொள்கிறார்கள். இப்படி நினைப்பவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில் இந்திய சினிமா மற்றும் பெரும்பான்மையான பத்திரிக்கைகள் சங்கங்கள் பற்றி கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பம் அது தான். தொழிற்சங்கத்தலைவர் என்றால் ஒன்று முதலாளிகளின் கைக்கூலியாக இருந்து கொண்டு, சங்க உறுப்பினர்களுக்கு துரோகம் செய்பவராகவோ இல்லை நியாமானவானவராக இருந்தால் அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சிகளுக்கு பலியாகி தன் குடும்பத்தை அநாதயாக விட்டு விட்டு பாதியில் இறந்து போகும் ஒரு பரிதாப ஜீவனாகவே தான் காட்டப்பட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் அலுவலம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பயிலரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. “தலைமைப் பண்பு மற்றும் தன்முனைப்பாற்றல்” என்ற தலைப்பில் தொழிற்சங்கத் தலைவர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிலரங்கு அது. கலந்து கொள்பவர்கள் அனைவரும் “பேசத்தெரிந்த” தொழிற்சங்கத் தலைவர்கள் என்பதால் தான் எதுவும் கருத்து சொல்லப்போவதில்லை எனவும் நிகழ்வை ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் போலவே நடத்தப்போவதாகவும் பயிற்சியாளர் முன்கூட்டியே சொல்லிவிட்டார். எனவே பங்கேற்பாளர்கள் தொழிற்சங்கப் பணிகளில் தங்களுக்கு ஏற்பட்ட பலதரப்பட்ட அனுபவங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டனர். சுவாரஸ்யமான கலந்துரையாடலும், சில செய்முறைப்பயிற்சியுமாக கலகலப்பாக நிறைவுற்ற பயிலரங்கின் முடிவில் இன்றைய நிலையில் தொழிற்சங்கப் பணி செய்வது ஒன்றும் சாதாரண வேலை இல்லை என்பது தெளிவானது

ஒரு நிறுவனத்தின் தவறான கொள்கையாலோ அல்லது நடவடிக்கையாலோ தான் நேரடியாக பாதிக்கப்படாதவரை எந்தவொரு சாதாரண ஊழியரும் களத்திற்கு வந்து போராடப்போவதில்லை. தனக்கு நடக்கும் வரை எல்லாமே வேடிக்கை தான். ஆனால் தனக்கு ஒரு பாதிப்பு வரும் போது ”சங்கத்து ஆட்கள்” வந்து குரல் கொடுக்க வேண்டும் என்று வாதாடுபவர்களும் இந்த சாதாரணர்கள் தான். ஏதோ சங்கத்து ஆட்கள் எல்லாம் “வீட்டில் தண்ணீர் தெளித்து விடப்பட்டவர்கள்” போலவும் “ஊருக்கு உழைப்பது” என்ற கொள்கை முழக்கத்துடன் இருபத்தி நான்கு மணி நேரமும் முறுக்கேறிய கைகளுடனும், தினவெடுத்த தோள்களுடனும் சுற்றிக் கொண்டிருப்பார்கள் என்ற பிம்பம் படிந்திருக்கிறது. அப்படியெல்லாம் சினிமா பிம்பங்களுடன் பார்க்க வேண்டியதில்லை. தொழிற்சங்க ஆட்களுக்கும் பிள்ளை குட்டி குடும்பம், சுயதேவை என்ற அனைத்தும் இருக்கவே இருக்கும். அத்தகைய குடும்ப அமைப்பையும் தாண்டி சமுதாயத்தில் தான் சார்ந்திருக்கின்ற ஒரு குழுவோடு இணைந்து ஒரு பொதுக்காரியத்துக்கு குரல் கொடுக்க நினைக்கும் சிறு எண்ணம் உள்ளவர்கள் தாமாகவே சங்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றுகின்றனர் என்பதே உண்மை.

இத்தகைய முன்னணி உறுப்பினர்கள் எத்தகைய போராட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் தாமாகவே வந்து கலந்து கொள்வர். ஆனால் மற்ற சராசரி உறுப்பினர்களை ஒரு போராட்டத்திற்கு அழைப்பது என்பது பெரிய சவாலான வேலை. பெரும்பான்மையே பலம் என்றாகிப் போன நாட்டில், நியாயமாக இருந்தாலும் கூட நம் கோரிக்கைகளை நிர்வாகத்திற்குப் புரிய வைக்க கூட்டம் சேர்ப்பது இன்றியமையாததாகி விடுகிறது. உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்திற்கு ஓர் உறுப்பினரை அழைத்தால், “இல்ல தலைவரே, ஒரு முக்கியமான வேலை இருக்கு. அடுத்த முறை நிச்சயம் கலந்துக்குறேன்” என்பார். அப்படி என்ன முக்கியமான வேலை என்று விசாரித்தால் “அந்த உறுப்பினரது சின்ன மாமியாரின் மதனியாரின் ஒன்று விட்ட பேத்திக்கு சடங்கு சுத்துகிறார்கள், அவர் தான் முன்னின்று விழாவை நடத்த வேண்டியிருப்பதால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை” என்றும் பதில் வரும். நம்மாட்களும் சும்மா இருப்பதில்லை. “என்னய்யா, மதிய நேரம் உச்சி வெயில்லயா சடங்கு சுத்துறாங்க, ஒரு அரை மணி நேரம் வந்தா என்ன?” என்று கொக்கி போட்டுப் பார்ப்பார்கள். உறுப்பினரை பகைத்துக் கொள்ளவும் முடியாது, அதே நேரம் எண்ணிக்கையை கூட்டுவதும் முக்கியது. அதற்கும் சளைக்காமல் பதில் வரும் “இல்ல தலைவரே, சடங்கு அடுத்த வெள்ளிக்கிழமை சாயங்காலம் தான், அது சம்பந்தமா கலந்தாலோசிக்க சின்ன மாமியாரின் மதனி வீட்டுக்கு மதியம் போகவேண்டி இருக்கு, நான் இல்லாட்டி அங்க ஒன்னும் நடக்காது” என்று சீரியஸாய் பதில் வரும். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சொல்லி ஒரு நூறு பேரிடம் பேசினோம் என்றால் ஒரு இருபது முப்பது பேருக்கு இப்படி தவிர்க்க முடியாத, தலை போகின்ற வேலை இருக்கும். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. சின்ன மாமியாரின் சொந்தமாச்சே. இன்னும் ஒரு இருபது பேர், “ஒரு பிரச்சனையுமில்ல தலைவரே, டான்னு வந்து நிப்பேன்” என்பார்கள், ஆனால் அடுத்த ஒரு வாரத்திற்கு எங்கும் கண்ணில் தென்படமாட்டார்கள். இன்னும் ஒரு பத்து பேர் எத்தனை முறை அழைத்தாலும் ஃபோனை எடுக்கவே மாட்டார்கள், மறுநாள் தாமாக வந்து ஆஜராகி, “என்ன தலைவரே, நேத்து ஆர்ப்பாட்டமாமே, ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல” என்று வாலண்டியராக வருத்தத்தை பதிவு செய்வார்கள். இப்படியெல்லாம் போக மீதி இருப்பவர்களைக் கொண்டு தான் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் செய்து உரிமையை நிலைநாட்ட வேண்டி இருக்கும்.

நிர்வாகத்துடன் ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது, அந்த பாதிக்கப்பட்டவர் மட்டும் போய்க் கேட்டால் நியாயம் கிடைப்பதில்லை, மாறாக உதாசீனங்களும், தண்டனைகளுமே கிடைக்கும். அதற்காக ஒருமித்த கருத்துடைய சிலர், ஒரு அமைப்பின் கீழ் சென்று குழுவாக பேசும் போது, அவர்களின் ஒற்றுமையை கண்டு நிர்வாகம் சற்று நிதானிக்கிறது. எதையாவது தவறாக முடிவெடுத்தால் இவர்கள் அமைப்பின் மூலம் நம்மை கேள்வி கேட்பார்கள் என்ற அச்சம் அவர்களை எதேச்சிகரமான முடிவுகள் எடுப்பதிலிருந்து தடுக்கிறது. அதுவே சங்கத்தின் தேவையை உறுதி படுத்துகிறது. அவ்வளவு தான்.
******