Friday, November 4, 2016

மரணத்தின் மொழி


எஸ்.அர்ஷியா எழுதிய “மரணத்தில் மிதக்கும் சொற்கள்” குறித்து பாலகுமார் விஜயராமன்“மரணத்தின் கிளர்ச்சி உண்மையை வெளிக்கொணர்ந்து விடும். அதனால் தான் நீங்கள் மரணத்திலிருந்து தப்பிக்க முயன்று கொண்டே இருந்தீர்கள்”
-    (குர்ஆன் 50:19)
இம்மையில் தான் வாழ்கின்ற வாழ்வானது மறுமைக்கான ஆயத்தம் என்றே ஒவ்வொரு முகமதியனும் நம்புகிறான். அவன் இறக்கும் போது அவனது இந்த வாழ்வுக்கான மொத்த அழுக்குகளும் கழுவப்பட்டு, தூய வெள்ளைத் துணியை உடுத்திக் கொண்டு, புனிதமான து’வாவை கேட்டபடியே, மறுமை வாழ்விற்குச் செல்ல “கபர்” குழியில் அடைக்கலமாகிறான். ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை ருசிக்கட்டும் என்பது குரானின் செய்தி. அல்லாவிலிருந்து ஒருவன் இந்த பூமிக்கு வருகிறான். தன் பணி முடிந்ததும், மீண்டும் அல்லாவிடமே திரும்பிச் செல்கிறான. மரணத்தின் தேவதை அவனை கனிவோடு தன்னுடன் அழைத்துச் சென்று இறைவனிடம் சேர்க்கிறது.

எழுத்தாளர் எஸ்.அர்ஷியா அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பான ”மரணத்தில் மிதக்கும் சொற்கள்” முழுவதிலுமே ”மரணம்”, சகபயணியாக நம் கூடவே பயணிக்கிறது. கனரக வாகனத்தில் அடிபட்டு மூளை சிதறிய உடலை, பிணவரங்கில் வைத்துப் பார்க்கும் பெரியவருக்கு எதிரில், ”மௌத்” ஆனவர்களின் உடலை கழுவி சுத்தம் செய்வதற்காக காலங்காலமாக பயன்படுத்தப்படும் மரக்கட்டிலின் மீது, “கபர்” குழி வெட்டிவிட்டு, தன் மகளின் பரிட்சைக்குத் தேவையான பணத்திற்காக, நடு ராத்திரி வரை கூலிக்காக காத்திருக்கும் தொழிலாளியின் எரிச்சலில், வாழ்நாள் எல்லாம் உடன்பிறந்தவர்களின் கைப்பாவையாய் இருந்து, கட்டிய மனைவியின் விருப்பங்களை உணரத்தவறிய, ஊருக்கு நல்லவரை போற்றும் துதிகளில் என மரணமும், அதன் நிகழ்வின் நினைவுகளும் இத்தொகுப்பு முழுவதும் வியாபித்திருக்கிறது.

தொகுப்பிலுள்ள முதல் கதை, மௌனச்சுழி. ஏதேனுமொரு மனவருத்தத்தின் பொருட்டு, நமக்குப் பிரியமானவர்களை நம் வாழ்விலிருந்து அழித்துவிட்டதாய் நினைத்து அவர்களை புறக்கணிப்பதற்கும், எதிர்பாராவிதமாக அவர்களது அகால மரணம் பற்றி கேள்விப்பட்டு, அது வரை பிடிவாதமாய் வெளிக்காட்டாமல் பொதிந்து வைத்திருந்த உள்ளன்பை புலம்பலாக கொட்டித் தீர்ப்பதற்குமான இணைப்பைப் பற்றி பேசுகிறது இக்கதை. இழப்பின் வலியை உணர, ஒருவர் மீதான நமது பிரியத்தை வெளிப்படுத்த, அவரின் மரணம் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது என்பது தான் துரதிஷ்டவசமான உண்மையாய் இருக்கிறது. சமுதாயத்தில் தனக்கு அவமானம் ஏற்படுத்தும் விதமாய், மாற்று மதத்தை சேர்ந்த இளைஞனுடன் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் செல்ல மகள் மீது ஒரு தந்தைக்கு இருக்கும் தார்மீகமான கோபம், அவளது செய்கையை ஒத்துக்கொள்ளவும் முடியாமல், அதே நேரம் அவளை தண்டிக்கவும் மனமின்றி, அவளை இறந்தவளாக அறிவித்து விட்டு அவர் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் சித்திரம் யதார்த்தமாக விரிகிறது.

ஒரே நேரத்தில் பாம்பாகவும், பிடாரனாகவும் காட்சி தரும் ஹஜ்ரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானி. சர்பங்களின் கட்டுக்குள் திணறும் இரையாகவும், பாம்பாகவும் தன்னை உணரும் முகம்மத் வஜீர் அலிகான். இவர்கள் இருவருக்குள்ளான அன்பின் பரிமாற்றத்தை, ஹஜ்ரத்தின் “பயானை”க் கேட்பது மூலமாக அலிகன் அவர்கள் உள்வாங்கி ஆறுதல் அடைவதாக செல்கிறது கதை. ”பயான்” சொல்லவரும் உலகப்பிரசித்தி பெற்ற ஹஜ்ரத்தைப் பார்க்கும் போது, அந்த தந்தைக்கு தன் மகளின் உருவமே தெரிகிறது. ஹஜ்ரத்தின் நடை, செயல், பேசும்முறை எல்லாம் தன் மகளை நினைவுபடுத்துவதாகவும், தன் மகள் தான் அவர் உருவில் வந்து தனக்கு ஆறுதல் சொல்வதாகவும் உணர்கிறார். எதிர்பாராத ஒரு திடீர் மரணம், மூடி போட்டு தன்னைத் தடுத்து வைத்திருக்கும் கோபம், மனவருத்தம், வீம்பு, வீராப்பு, சமூக அந்தஸ்து ஆகியவற்றை உடைத்து விட்டு, தன்னுள் பொதிந்திருக்கும் பரிசுத்தமான அன்பு மட்டும் வெளிப்படுவதை உணர்கிறார். 

ஜரிகைக்காரத் தெரு, காஜிமார்த்தெரு, தேர்மூட்டி, சப்பாணி கோயில் தெரு என்று தென்மதுரையின் அச்சு அசல் சித்திரத்தை அத்தனை இயல்பாக பதிவு செய்திருக்கிறது “தகைத்தல்” சிறுகதை. திருமணங்களை தகைத்து வைக்கும் உஸ்தாத்பீ என்ற பெண்மணியின் வழியாக துவங்கி, சமூக மாற்றங்களுக்கு இளையவர்கள் தயாராக இருந்தாலும், காலத்துக்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களையும், அசட்டுப் பிடிவாதங்களையும், ஜபர்தஸ்த்தையும் வீட்டிலுள்ள பெரியவர்கள் எப்படி நைச்சியமாக நுழைத்து விடுகிறார்கள் என்பதைப் பேசுகிறது “தகைத்தல்” சிறுகதை. பெண் வீட்டாரிடமிருந்து வரதட்சணை பெறுவதை அவமானமாகக் கருதும் இன்றைய காலத்து இளைஞன் அஸ்கர் அலி. திருமண மேடையிலேயே பெண் வீட்டுக்குத் தரவேண்டிய “மஹர்” பணத்தை கொடுத்து திருமணம் முடிக்க வேண்டுமென விரும்புகிறான். அவனிடம் நேரடியாக எதிர்த்துப் பேச முடியாத அவனது தாய், எப்படி பெண் வீட்டாரிடம், அவர்கள் செய்ய வேண்டியதை மறைமுகமாக வர்ப்புறுத்துகிறாள் என்பது உஸ்தாத்பீ பார்வையில் சொல்லிச் செல்கிறது.

சொத்துப் பிரச்சனையின் காரணமாக நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியிருந்த வீடு திறக்கப்படும் நாளில், வீட்டினுள் தூசி மண்டி அடைந்து போயிருக்கும் பழைய பொருட்களனைத்தும் அப்புறப்படுத்தப் படுகிறது.  வீட்டு உரிமையாளரனான பால்ய நண்பன், அந்தப் பொருட்களில் தேவைப்படுவதை எடுத்துக் கொள்ளச் சொல்கிறான். சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்து கட்டிய தன் சிறுவீட்டுக்கு நிலைக்கதவாக செய்து கொள்ளலாம் என்று எண்ணி, அங்கு கிடந்த பழங்காலத்து கட்டில் ஒன்றைக் கேட்டு எடுத்து வருகிறான் உஷேன். அன்றிரவு வீட்டு வாசலில் கட்டிலைப் போட்டு அதன் மீது படுத்து உறங்குகிறான். அந்தப் பகுதியில் இறந்தவர்களின் உடலைக் கழுவுவதற்காக, காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த கட்டில் அது. உஷேன் அன்று உறங்கும் போது, “மௌத்” ஆன ஒவ்வொருவராய் கட்டிலிலிருந்து வந்து தங்கள் கதைகளைச் சொல்வதைப் போல அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் வீட்டுக்குக் கதவு போட வசதியில்லாத அவனுக்கு இலவசமாய் வந்த அந்த கட்டில் பலகையை விடவும் மனது வரவில்லை. அந்த இரவில் உஷேனின் செய்கைகளை இலகுவான மொழியில் அங்கதத்துடன் சொல்லும் கதை “கட்டில் பலகை”

கிணறு வெட்டுவது, வீடுகளுக்கு வெள்ளை அடிப்பது, கூடை முடைவது, பூட்டு ரிப்பேர், எலக்ட்ரிக் வேலை, நிமுந்தாள் வேலை என்று பலதொழில் வித்தகனான, இறந்தவர்களைப் புதைக்க குழி வெட்டும் பாபுகானின் கதை “உப்புக்குழி”. பெண்பித்தின் காரணமாக சொத்துக்களை இழந்த, வாழ்ந்து கெட்ட குடும்ப வாரிசான பாபுகான் இன்று அன்றாடங்காச்சியாக சுற்றித் திரிகிறான். ஜமான் என்ற கிழவர் மூலமாக கபர்க்குழி வெட்ட பழகிக் கொண்டவனுக்கு நாளடையில் அதுவே அடையாளமாகிப் போனது. ஊரில் எங்கேனும் மரணம் சம்பவித்தால் உடனே கபர்ஸ்தானில் குழி வெட்ட பாபுகானை தேட வேண்டியதாகி விட்டது. தொழில் சுத்தமாய் வேலை செய்யும் பாபுகானுக்கு வெட்டுவனாய் ஆனதில் எல்லாம் வருத்தமில்லை. கூலி கொடுக்க மூக்கால் அழும் “ஜமாத்” ஆட்களிடம் தான் கோபம். தனது ஆற்றாமையை, கேலியாக உடனிருக்கும் ரஷீத்திடம் அவ்வப்பொழுது சொல்லி நக்கலடித்துக் கொள்வான். மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண் இறந்துவிட, தன் மகளுக்குத் திருமணம் செய்து தான் அழகு பார்க்கவில்லை, இறுதி சடங்கையாவது தங்கள் முறைப்படி செய்ய அனுமதிக்க வேண்டுமென்று, கணவன் வீட்டாரிடம் கேட்கிறார் தாவூத்சாயுபு. இறந்து போன அவரது மகளுக்காக “கபர்க்குழி” வெட்டுகிறான் பாபுகான். இறுதியில் அது உப்புக்குழியாக மூடப்படுவதை காட்சிப்படுத்துகிறது இக்கதை.

தினமும் ஒவ்வொரு வீடாக முறை சோறு வாங்கி உண்ணும் நிலையிலிருக்கும் விளிம்பு நிலை குடும்பத்தின் கதை “தள்ளுபடியான ஆவணங்கள்”. சிறுவயது முதலே மதிய நேரத்தில் தூக்குச் சட்டியை தூக்கிக் கொண்டு போய் முறை சோறு வாங்குவதில் அசனுக்கு எந்த தாழ்வுணர்வும் இல்லை. ஆனால் அவன் படித்து முடித்து கடை வேலைக்குச் செல்லும் நாளில் அந்தத் தூக்கு வாளி அவனது தம்பியான உசேன் கைகளுக்கு மாறுகிறது. பல ஆண்டுகளாக தங்கள் ஆதார உணவிற்கான கொள்கலனாக, தங்கள் பசியைப் போக்கிய தூதுவனாக இருந்த அந்த அலுமியத் தூக்கு வாளிக்கு பதிலாக, புதிய அடுக்கு டிபன் கேரியரை வாங்கி வருவதாக முடிகிறது கதை.

தன்னை பெண்ணாக உணரும் பதின்பருவத்து சிறுவனின் மன அவஸ்தைகள், அவனுக்கு இயல்பாகத் தோன்றும் ஆனால் சமூகம் ஏற்றுக் கொள்ளாத பழக்கவழக்கங்கள், அதனால் அவன் பெற்றோரிடமும், மற்றவர்களிடமும் அடையும் அவமானம், அவனது வலி ஆகியவற்றை சொல்லும் கதை “வனம்புகுதல்”. மிக நுட்பமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் கதைக்குப் பொருத்தமான தலைப்பு.

ஆண் பெண் தாம்பத்ய உறவின் துவக்க சிக்கல்களை, ஒருவருக்கு மற்றவர் மேல் இருக்கும் ஆசை, எதிர்பார்ப்பு, உரிமை ஆகியவற்றை ஆண் கூற்றாகவும், பெண் கூற்றாகவும் உரைக்கும் கதை “வேட்கை”. திருமணமான முதல் இரவு மிகுந்த அன்போடு மனைவியை நெருங்கும் கணவன், அவளது வேட்கைக்கு ஈடு கொடுக்க முடியாமல் சரிகிறான். அது குறித்து அவனுக்கு குற்ற உணர்ச்சியில்லை. கணவன் மனைவி உறவு இயல்பாய் மலரும் பூ, காலங்காலத்துக்கு வளர்பிறையாய் வளரும் என்று நம்புபவனுக்கான முதல் அடி, மறுநாள் காலை “இவன் ஆம்பிளையே இல்லை” என்று புதுப்பெண் பலபேர் முன் பொதுவில் சொல்லும் வார்த்தை. இடி விழுந்தவனைப் போன்று உணர்ந்தவன், பின் சுதாரித்துக் கொண்டு நிகழ்வை ஆராய முனைகிறான். மறுபுறம் சிறுவயதில் இருந்து பல்வேறு பாலியல் சுரண்டல்களில் இருந்து தன்னைக் காத்து வந்தவள், நேர்மையான வழியில் தனக்கு உரிமையானவனிடம் உரிய முறையில் தன்னை முழுமையாக கொடுக்க வருபவளுக்கு ஏற்படும் அதிருப்தி விஷம் தோயந்த வார்த்தைகளாக கொட்டி விடுகிறது. பல சமாதானங்களுக்குப் பிறகு மறுநாள் இரவு அவர்கள் சேர ஆயத்தமாவதுடன் முடிகிறது கதை.

தேவைக்குத் திருடும் சில்லரைத் திருடனான சேதுராமன், அரசு அதிகாரிகள், சிப்பந்திகள், டீக்கடைப் பட்டறையில் டீ ஆற்றுபவர், டீக்கடையில் அமர்ந்து கதையடிக்கும் இளைஞர்கள், ட்ரை கைக்கிள்க்காரர்கள், மத்திய, கீழ்மத்திய வர்க்கத்து ஆண்கள், பெண்கள் என சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் இருக்கும் அனைவரும் செய்யும் சில்லரைத் தனங்களைக் கண்டு மனம் வெதும்புகிறான். ஒருவேளை வயிற்றுப் பாட்டுக்காக, ரோட்டில் வித்தை செய்யும் ஒரு  கழைக்கூத்தாடி குடும்பத்தையும், அதிலுள்ள பெண்களை பார்வையாளர்கள் பார்த்து, சீண்டி, வேடிக்கை பொருளாய் பாவிப்பதை எண்ணி வருந்துகிறான். முந்தைய இரவு தான் திருடிய பணத்திலிருந்து ஒரு ஐநூறு ருபாயை அவர்களுக்குத் தரவிரும்பி அவர்கள் இருக்கும் இடத்தைத் தேடி அலைகிறான். இறுதியில் கழைக்கூத்தாடி இவன் கொடுக்கும் பெரிய பணத்தின் பின் இருக்கும் தொல்லைகளை எண்ணி வாங்க மறுக்கும் போது, அவன் கைகளின் பணத்தை திணித்து விட்டு திரும்பிப் பார்க்காமல் செல்கிறான். ”வெயிலின் நிழல்” கதையின் தலைப்பு. ஒரு திருடனுக்குள் இருக்கும் மனிதாபிமானத்தை இயல்பாய் சொல்லும் கதை.

 தன் வாழ்க்கை முழுவதையும், அண்ணன், அண்ணி, தங்கை அவர்கள் குடும்பம் என்று அற்பணித்து விட்டு, ஊருக்கு நல்லவராய் வாழ்ந்த முகன்னத் ஜலீல் அஹ்மத் ரப்பானி “மௌத்” ஆகிப் போன நாளில் கேட்கும் ஒப்பாரி சத்தத்தில் அவரின் அருமை பெருமைகள் எல்லாம் பறைசாற்றப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எவ்வாறு முக்கியமாய் இருந்தார் என்ற முழக்கங்களில், தன்னை ஒரு பொருட்டாக மதித்து, தன் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லையே என்றும், ஊருக்கெல்லாம் நல்லவராக இருந்தவர் தனக்கு என்னவாக இருந்தார் என்று அடிவயிறு நடுநடுங்க கத்திக் கதறிய அவரின் மனைவியின் குரல் மற்ற குரல்களுக்கிடையே அப்போதும் அமுங்கித் தான் போய் விடுகிறது. அவளின் உணர்வுகளை சொல்லாத வார்த்தைகள் மூலமாக உணர வைக்கும் கதை “மய்யம்”

மதுரை நகரின் வாழ்வியலையும்,  விளிம்பு நிலை மணிதர்களின் அன்றாடங்களையும், குறிப்பாக முஸ்லிம் சமூக பழக்கவழக்கங்களை அச்சு அசலான உயிரோட்டமுள்ள சித்திரமாகத் தீட்டிக் காட்டும் வலிமை அர்ஷியா அவர்களின் எழுத்துக்கு இருக்கிறது. அயற்சியூட்டாத, இயல்பான மொழிநடையில் எளிய மக்களின் அன்றாடங்களை இலக்கியமாக்கும் சவாலை அழகாகவும் நேர்த்தியுடனும் நிறைவேற்றியிருக்கிறார். அவரது இலக்கியப்பயணம் மென்மேலும் தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !

------------------------------------------------------------------------------------------------
மரணத்தில் மிதக்கும் சொற்கள் (சிறுகதைத் தொகுப்பு)
எஸ்.அர்ஷியா
புலம் வெளியீடு – டிசம்பர் 2014
பக்கங்கள்: 160, விலை: ரூ.130

------------------------------------------------------------------------------------------------
நன்றி: மலைகள் இதழ் http://malaigal.com/?p=9350