Saturday, June 3, 2017

வனம் புகுதல்


முதன்முதலாய் தனியாய் வேட்டைக்குச் செல்லும் வனவிலங்கு, தன் வேட்டை எல்லையை வரையறுத்துக் கொள்வதை ஒத்தது, தெரியாத புதிய ஊரில், தனிக்குடித்தனம் போவது. இது தான் நம்ம ஏரியா, இது நம்ம பஸ் ஸ்டாப், ஷேர் ஆட்டோ இந்த இடம் வரை வந்து நிற்கும் என்பதில் துவங்கி, தண்ணீர் கேன் வீட்டிற்கு வந்து போடுபவன் யார், பசும்பால் எங்கு கிடைக்கும், கேஸ் இணைப்பு வாங்க என்ன முறை, கேபிள் கனெக்‌ஷன் எப்போ வரும் என்பது வரை கிட்டத்தட்ட அதே வரிசையில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நினைத்த நேரத்தில், நினைத்த ஊருக்கு ஒரு ஷோல்டர் பேகையும், டிராவல் கிட்டையும் தூக்கிக் கொண்டு சென்று ஐக்கியமாகிவிடும் தனியனின் பயணத்தை இதோடு ஒப்பிட்டு விடாதீர்கள். இது ஒரு குடும்பஸ்தனின் இடப்பெயர்வு. 

இந்த இடப்பெயர்வில், ஏற்கனவே பழைய ஊரில், அடுக்கி வைத்திருந்த வரிசைக்கிரமமான அன்றாட நிகழ்ச்சி நிரல்களை கலைத்துப் போட்டு, புது வரிசையில் அடுக்க வேண்டும். அது பழைய வரிசைக்கு மிக நெருக்கமாய் அமைய வேண்டியது மிக முக்கியம்.

தண்ணீர், பால், கேஸ், கேபிள் என்ற அத்தியாவசியத் தேவைகளுக்குத் தொடர்ந்து, புது ஊரின் காய்கறி சந்தை, மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளைத் தரம் அறிதல் அடுத்த கட்டம். "பெங்களூருக்கு குடி வந்து பெங்களூர் மார்க்கெட்ல, பெங்களூர் தக்காளி வாங்கிட்டுப் போனாலும், மதுரைல கிடைக்குற பெங்களூர் தக்காளி மாதிரி இது இல்லை" என்பது தான் சமையல் துறை அமைச்சரின் கருத்தாக இருக்கும். அதையெல்லாம் அளவுகோலாகக் கொள்ளாமல், நியாயம் நேர்மை நீதி தர்மத்தின் வழியில் இல்லாவிட்டாலும், நம்மை வேற்றுக்கிரகவாசி போல் பார்க்காத, இரண்டாம் முறை செல்லும் போது தெரிந்தவர் போல் முகத்தை வைத்து லேசாக புன்னகை செய்கிற கடைக்காரர்கள் / சிப்பந்திகளைக் கொண்ட கடைகள், "நம்ம கடைகள்" ஆகிவிடும்.

சொந்த ஊரை விட்டு, வேறூருக்கு இடம்பெயரும் எவனும், தன்னுடன் தன் ஊரின் ஒரு பிடியை சேர்த்தே அள்ளிச் செல்கிறான். அது முதலில் வெளிவருவது மொழி வழியாகவே. புதுக்குடித்தனம் போனவுடன், பக்கத்திலுள்ள பலசரக்குக் கடையைத் தேடி, "அண்ணே, ஒரு அம்பது கிராம் விரல் மஞ்சள் கொடுங்கண்ணே!" எனும் போதே, பொட்டலம் மடித்துக் கொண்டிருக்கும் கடைக்காரர் நிமிர்ந்து பார்த்து, "சாருக்கு மதுரைப் பக்கமோ?" என்று இனம் கொண்டு கொள்வார். அவர் இழுக்கும் எக்ஸ்ட்ரா "ஓங்காரத்தில்" அவர் திருநெல்வேலி என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

நாம் இதுவரை வட்டார வழக்கில் தான் பேசுகிறோம் என்பதே புதிய ஊர் மக்களின் பேச்சைக் கேட்கும் போது தான் தெரிகிறது. காலப்போக்கில், நாம் வந்திருக்கும் இடமும் நம் இடம் தான் என்ற நிலையை மனம் எய்தும் போது,  இயல்பாய், நம்மையும் அறியாமல் அந்த ஊரின் விளிச்சொற்கள் நம் பேச்சு வழக்கில் இயல்பாய் கலந்திருக்கும். பிறகு அந்த ஊர்க்காரனாகவே மாறிவிட்ட பிறகு, ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் சொந்த ஊர் கெத்தைக் காட்ட, "டேய், நானும் மதுரக்காரன் தான்டா" என்று ஹைடெசிபலில் கத்தி, நிரூபித்தால் தான் உண்டு.

******

1 comment:

  1. புது இடத்துக்கு செல்லும்போது பிடி மணலை மூட்டை கட்டி குழந்தைகளின் தூளியில் போட்டு தூங்க வைப்பது எங்கள் ஊர் வழக்கம். அதுப்போல பெரியவங்களுக்கு வட்டார சொல்.

    இடம்பெயர்தலின் வலியை அழகா சொன்னீங்க. வாழ்த்துகள் சகோ

    ReplyDelete