Saturday, May 23, 2015

புதுவரவு


இளம் பருவத்தில் இருக்கும் ஃபின்ச்சஸ் குருவிகளை, பத்து பதினைந்து என்ற எண்ணிக்கையில் ஒரே பெரிய கூண்டிலிட்டு வளர்ப்போம். அவை ஜோடி சேரும் பருவம் அடைந்தவுடன், ஆண் பெண் இனம் கண்டறிந்து, ஜோடி சேர்த்து தனித்தனி கூண்டுகளில் இட்டு பராமரித்து வருவோம். கூண்டுக்குள் இரைக்கான கிண்ணம், தண்ணீர் கிண்ணம் போக முட்டையிடுவதற்காக இனப்பெருக்கப் பெட்டி (ப்ரீடிங் பாக்ஸ்) ஒன்றும் கட்டி வைத்திருப்போம். முட்டையிடும் பருவம் வருவதை அறிந்து கூண்டிற்குள் தேங்காய் நார், காய்ந்த அருகம்புல் போன்றவற்றைப் போட்டு வைத்தால், ஜோடி குருவிகள் சுறுசுறுப்பாக இனப்பெருக்கப் பெட்டிக்குள் மெத்தை மாதிரி கூடு பின்னி முட்டையிட்டு அடைகாக்கத் துவங்கி விடும். 

கடந்த மாதம், அவ்வாறு இணை சேர்த்து விட்ட ஐந்து ஜோடிகளில் நான்கு ஜோடிக்குருவிகள் வேகவேகமாக தேங்காய் நாரையும், அருகம்புல்லையும் கொத்திக்கொண்டு போய் கூடு கட்டுவதில் மும்முரமாய் ஈடுபட்டு, முட்டையிடும் முனைப்பில் இருந்தன. மீதியிருக்கும் ஒரு கூண்டில் போட்ட தேங்காய் நாரும்,அருகம்புல்லும் அப்படியே கிடக்க, அந்த ஜோடி மட்டும் கூடு கட்டுவதில் எந்த முனைப்புமின்றி அமைதியாக உட்கார்ந்தபடி, எப்போதும் இறக்கைகளுக்கு சிடுக்கெடுத்துக் கொண்டிருந்தன. சரி, இன்னும் ஜோடி சேரவில்லை போல என்று நினைத்துக்கொண்டேன். பிறகு வழக்கமாய் சென்று குருவிகளைப் பார்க்கும் வேளைகளிலோ, இரை தண்ணீர் மாற்றச் செல்லும் போதோ ஜோடி சேர்ந்த குருவிகளை மட்டுமே பிரத்யேகமாக கவனித்துக் கொண்டிருந்தேன். ஜோடி சேராத அந்த குருவிகளின் மீது கவனம் செல்லவில்லை.

தினமும் காலை எழுந்தவுடன், மாடிக்குச் சென்று பறவைகளை பார்த்து விட்டு அவற்றிற்குத் தேவையானவற்றை செய்து விட்டு வருவது வழக்கம். நேற்று காலை அவ்வாறு சென்று பார்த்தால், ஜோடி சேரவில்லை என்று நினைத்திருந்த கூண்டிற்குள் ஆண், பெண் போக மூன்றாவதாக இன்னொரு இளம் குருவியும் சேர்ந்து அமர்ந்து சிக்கெடுத்துக் கொண்டிருந்தது. கூண்டுகள் அனைத்தும் தனித்தனியே பூட்டியிருப்பதால், ஒரு கூட்டில் இருந்து இன்னொன்றிற்கோ அல்லது வெளியில் இருந்து கூண்டிற்குள் செல்வதற்கோ எந்த வாய்ப்பும் இல்லை. சக பராமரிப்பாளரும், பட்சி சாத்திரம் கற்றுக் கொடுக்கும் வாத்தியாருமான அப்பாவிடம் முதல் நாள் புதிதாக ஏதாவது குருவி வாங்கி வந்து விட்டீர்களா, அல்லது வேறு ஏதாவது கூண்டு மாற்றி விட்டீர்களா என்று கேட்டால், அவர் ஒன்றும் செய்யவில்லை என்றே கூறினார். சந்தேகத்துக்கு மற்ற அனைத்து கூண்டுகளிலும் சோதித்துப் பார்த்தாலும் அவை அனைத்தும் சரியாகவே இருந்தது. என்ன விஷயமென்று, அந்த ஜோடி இருந்த கூண்டிற்கு உள்ளே ஓரமாக கட்டியிருந்த இனப்பெருக்கப் பெட்டியை கழற்றிப் பார்த்தால், உள்ளே வெறும் நான்கைந்து நார் இழைகளைக் கொண்டு லேசான மெத்தை அமைத்த அச்சும், அதன் மேல் குஞ்சு பொரித்த பின்னான முட்டை ஓடும், குஞ்சுப்பறவை உள்ளே வளர்ந்ததற்கான அடையாளமாய் எச்சங்களும் கிடந்தன. 

முட்டையிட்டு, அடை காத்து, குஞ்சுப் பறவை பறக்கும் பருவத்திற்கு வளர்வது வரை நான் அறியாமல் நடந்திருக்கிறது என்று பயங்கர ஆச்சர்யமும் சந்தோஷமும். வளர் இளம் பருவத்துப் பிள்ளை ஒன்று திடீரென நம் வீட்டிற்குள் வந்து, நான் உங்கள் மகள் தான் என்று தோளில் சாய்ந்தது போன்று, இனம் புரியாததொரு மனநிறைவு. அந்த இளம் குருவியை கண்கொட்டாமல் பார்த்தபடி நின்றுகொண்டே இருந்தேன். அது தன் தாய் தகப்பனுக்கு நடவில் அமர்ந்தபடி இன்னும் முத்தாத தன் அலகினைக் கொண்டு, இறக்கைகளில் சிக்கெடுத்துக் கொண்டிருந்தது.

******

2 comments:

Karuppiah Subbiah said...

பாலா! நன்றாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால், இயல்புக்கு மாறாக பறவைகளை கூண்டிலடைத்து வளர்ப்பது சரியா? இந்த பறவைகளை வெளியில் விட்டால் இறந்து விடும் அல்லது காக்கைக் கூட்டம் தின்றுவிடும் என்பது வேறு! ஆனால் , அதன் சுதந்திரத்தை நாம் கட்டுபடுத்தலாமா ?

பாலகுமார் விஜயராமன் said...

சார், நீங்களே பதிலும் சொல்லிட்டீங்க ! இப்பறவைகளால் வெளி சூழ்நிலையில் வாழ முடியாது.

Post a Comment