Saturday, August 3, 2013

முதல் தேதியுடன் சண்டையிடுதல்.

மாத சம்பளம் வாங்கும் இந்த நடுத்தரவர்க்கத்து குடுமபத் தலைவர்களும் தலைவிகளும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியை எதிர்கொள்ளும் விதம் சுவையானது. ஒரு போருக்குத் தயாராவது போல இருபத்தி ஐந்தாம் தேதியிலிருந்தே பரபரப்பு ஆரம்பித்து விடும். சம்பளம் இன்னும் ஏறியிருக்காது என்று தெரிந்தும் சும்மாவாச்சும் இரண்டு மூன்று முறை ஏ.டி.எம் அட்டையைத் தேய்த்து அக்கவுண்ட்டை கழுவி காய வைத்து, மீதி இருக்கிற முப்பத்தி நான்கு ரூபாய் பதினேழு பைசா கணக்கை காறி உமிழாத குறையாக துப்பும் இயந்திரத்தை ஒரு ஏக்கப்பார்வை பார்த்து விட்டு ரசீதை கசக்கி எறிந்து விட்டு வருவோம். வெளியே செக்க்யூரிட்டி கொடுக்கும் “உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையாடா, எத்தனை தடவை தான் வந்து பார்ப்ப?” வகையான டெரரர் லுக்கையெல்லாம் புறம் தள்ளி விட்டு, தண்ணீர் திறந்து விடபோகும் அணையை பார்பது போல ஏ.டி.எம் மை அவ்வப்ப்பொழுது எட்டிப் பார்க்கும் ஆர்வம் மட்டும் குறையாது.

நமக்கெல்லாம், முப்பத்தி ஒன்றாம் தேதி மதியத்துக்கு மேலேயே அலுவலகத்தில் இருப்பு கொள்ளாது. சரி, மாலை அலுவலம் முடிந்து சென்றால் ஏ.டி.எம் கியூவை சமாளிக்க முடியாது என்று சமயோசிதமாய் சிந்தித்து ஒரு மணி நேரம் பெர்மிசனைப் போட்டு விட்டு  ஏ.டி.எம்முக்கு வந்தால் நம்மை விட தெளிவான “முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்” லைன் கட்டி நின்று கொண்டிருப்பார்கள். நாமும் ஜோதியில் ஐக்கியமாகி தரிசனத்திற்கு காத்திருந்தால் வரிசை நகருவேனா என்று இழுக்கும். நேரம் ஆக ஆக “ஒரு வேளை மிசினில் பணம் தீர்ந்து விட்டால் வேற எங்கே போனால் கூட்டம் குறைவாக இருக்கும்?” என்ற கணக்கு வேறு ஓடிக்கொண்டிருக்கும். மிசினை நெருங்க பெருங்க உள்ளூர ஒரு வித பதற்றம் அதிகரித்துக் கொண்டே வரும். ஒரு வழியாக அட்டையை தேய்த்து கத்தை நோட்டை வெடுக்கென உருவி கை நிறைய வைத்து திரும்பத் திரும்ப எண்ணிப்பார்த்து குதூகலம் அடையும் தருணம்... ஆகா!

சம்பளம் கைக்கு வந்தவுடன் பன்முனைத்தாக்குதல் ஆரம்பமாகிவிடும். ஆனால் வெள்ளைக்கொடி வைத்திருக்கும் போர்வீரனுக்கு எத்தனை வியூகங்கள் வகுத்து என்ன பயன்... யாருகிட்ட!!! வீட்டிற்குள் நுழைந்த வினாடியே நீள ஆரம்பித்து விடும் பட்டியல் கொஞ்சம் அச்சுறுத்தும் படியாகத்தான் இருக்கும். அதுக்கெல்லாம் பயந்தா குடும்பம் நடத்த முடியுமா பாஸ். ஒரு மாதிரி மொத்த பணத்தையும் ஹாலில் விரித்து வைத்து லோன், கைமாத்து வாங்கின கடன்,  ஈ.பி, ஃபோன் பில், கேபிள், அது இதுனு கூறு கட்டி பிரித்து வைத்து விட்டு நிமிர்ந்தால் அடுத்த சுற்றுக்குத் தயார் நிலையில் இருப்பார் வீட்டம்மணி. மாதாந்திர தேவைக்கான ஷாப்பிங். சரி என்று பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு கிளம்பினால் போதும், நமது மனவுறுதி எல்லாம் மெல்ல மெல்ல குலைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு பொருளையும் எடுத்து கூடைக்குள் போடும் போது,  இல்லாத பிபி எல்லாம் உச்சபட்ச அளவை தொட்டுத் தொட்டு திரும்பும். பெண்களுக்கு ஷாப்பிங் செய்யும் போது மட்டும் எங்கிருந்து தான் ”சாமி வருவது மாதிரி” ஒரு வித வெறி கிளம்புமோ தெரியாது. கண்ணில் காணும் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒரு அத்தியாவசியத் தேவை வந்து உடனே வாங்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்து விடுகிறது. “இல்லம்மா, இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே, இது இப்போ தேவையா?” என்று தப்பித்தவறி ஒரு வார்த்தை கேட்டு விட்டால் அவ்வளவு தான் தொலைந்தோம். அதற்கு வரும் கோபத்துக்கும் சேர்த்து இன்னும் இரண்டு பொருட்கள் அதிகமாக எடுத்து வைக்கப்படும். கூடுதலாக “எதையாவது மனசார வாங்க விட்றீங்களா, சும்மா நொச்சு நொச்சுன்னுட்டு!” என்ற அர்ச்சனை வேறு அடிசனலாக கிடைக்கும். எனவே “மௌனம் உத்தமம்”.

ஷாப்பிங் பராக்கிரமங்கள் முடித்து வீட்டிற்கு வந்தால், மளிகைக் கடை அட்டை. “அதான் எல்லா பொருளும் மொத்தமா வாங்குறோம்ல, அப்புறம் என்ன பக்கத்து கடையில் சிட்டை வேற?” என்று கேட்டால் புரிந்து கொள்ளவியலாத சில பல சமண்பாடுகள் விளக்கமாக வரும். தொடர்ந்து எவ்வளவு வாக்குவாதங்கள் வந்தாலும் இறுதியில், “சரி, எவ்வளவு வேணும் சொல்லு” என்று நாம் சரண்டர் ஆவது முடிவாக இருக்கும். அன்றாடப் பிழைப்பே இப்படி அல்லோலப் பட்டுக்கொண்டிருந்தாலும் நம் பெண்களின் சேமிப்புப் பழக்கம் மட்டும் தொலை நோக்கு சிந்தனையுடன் தான் இருக்கும். பக்கத்து வீட்டு அக்காவிடம் மாத சீட்டு கட்டி அப்படியே கோட்டையை பிடித்து விடலாம் என்ற எண்ணம் தான். அதற்கும் நம் கழுத்தில் தான் கத்தி வைக்கப்படும். இப்படி, நடந்தது நடக்கப்போவது, எதிர்பார்த்தது, எதிர்பாராதது என்று பலமுனைத் தாக்குதல்களைத் தாண்டி மிச்ச சொச்ச சொற்ப தொகையையும் பத்தாம் தேதி வரை இழுத்துப் பிடித்து கொண்டு செல்வது பெரிய கலை. அப்படியும் பத்தாம் தேதியன்று பாக்கெட்டும், பர்ஸும் பரிசுத்த நிலையை அடைந்து, மனம் “ஸ்லீப்” மோடுக்கு சென்று விடும். எந்த கோரிக்கையும் காதில் விழாதது போல் நடிக்கும் இந்த தியான நிலை கூட பதினைந்தாம் தேதி வரை தான். அதன் பின் மெல்ல சாத்தான் எட்டிப்பார்க்க ஆரம்பித்து கைமாத்து, சேமிப்பில் கைவைப்பது என்று தன் வேலையைக் காட்டிவிடும். இருபதாம் தேதி முதல் “இந்தப் பொழப்புக்கு சந்நியாசம் போகலாம்” என்று தோன்றும் சாமியார்த்தனம் இருபத்தி ஐந்தாம் தேதி வாக்கில் “போர்க்குணமாய்” உருப்பெற்று முதல் தேதிக்கு ஏங்கியவாறு மீண்டும் ஏ.டி.எம்.மை எட்டிப்பார்க்கத் துவங்கி விடும். சும்மாவா சொன்னார்கள், வாழ்க்கை ஒரு வட்டமென்று. என்ன வட்டத்தை பெரிதாக்கிக் கொண்டே செல்ல நினைக்கும் இந்த மத்தியவர்க்கத்து மனதை மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்த முடிந்தால் போதும், மூச்சிறைக்காமலாவது ஓடிக் கொண்டிருக்கலாம்... ஆனால் ஆசை யாரை விட்டது!

-வி.பாலகுமார்.
******

6 comments:

Hussain gani said...

மனைவியிடம் கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்பது பேராபத்து.திரும்பவும் கொடுக்க வேண்டியதிருக்கும்

Ramani S said...

நடுத்தர மக்களின் ஒன்றாம்தேதி
திண்டாட்டத்தை மிக அருமையாக
பதிவு செய்துள்ளீர்கள்
சொன்னவிஷயம் வருத்தத்திற்குரியது ஆயினும்
சொன்னவிதம் ரசிக்கத் தக்கதாய் இருந்தது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 2

பழனி. கந்தசாமி said...

அருமையான பதிவு. மத்தியதர மக்களின் மனோநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள். பாராட்டுகள்.

Anonymous said...

செவ்வாய் பேட்டை சித்தர் பாடுகிறார்
"ஓரணா ரெண்டனா உண்டியல உடச்சி
நாலணா எட்டணா கடன உடன வாங்கி
அண்டா குண்டா அடகு வச்சு ........
......பத்தல பத்தல காசு கொஞ்சம் கூட பத்தலையே ..."

-மதன்

மங்களூர் சிவா said...

haa haa :)))

Post a Comment