Thursday, March 14, 2013

தமிழ் சினிமா கனவுக்கன்னிகள்


(வர வர எழுதுறதெல்லாம் ரொம்ப ஹெவியா இருக்குன்னு சொன்னவனுக்காக, கொஞ்சம் லைட் வெயிட்டா... )

சமகால தமிழ் சமுதாயம் மட்டுமில்லை, ஃபிலிம் தோன்றி சி.டி தோன்றா காலத்திலிருந்தே நம் ரசிகக் கண்மணிகளுக்கு திரையுலக கனவுக்கன்னிகள் மேலுள்ள ஈர்ப்பு சொல்லி மாளாது. தங்களது பிரிய நாயகிகளை பர்ஸுக்குள் பக்குவமாய் பாஸ்போர்ட் சைஸில் பதுக்குவதிலிருந்து, கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது வரை இவர்களது பிரேமத்தின் வெளிப்பாடுகள் ஆயிரமாயிரம். ஆனாலும் மற்ற விஷயங்களில் எப்படியோ நாயகிகளை ரசிப்பதில் எப்போதும் நம்மாட்கள் கம்யூனிஸ்ட்கள் தாம். கனவுக்கன்னி என்று ஒருவரை மனதுக்குள் பட்டா போட்டு மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தாலும் ஏனைய பிற நடிகைகளுக்கும் அதில் தனித்தனி அறை கொடுத்து போற்றி வருவார்கள். 

அது எப்படி ஒருத்தியை நினைத்த மனதில் மற்றொருத்தியை குடிவைப்பது என்ற குற்றவுணர்ச்சி எல்லாம் கன்றாவி காதலோடு நிறுத்தி வைத்து யோசித்துப் பார்த்தால், நம் ரசிகர்களின் தாராளமயமாக்கல் கொள்கையை புரிந்து கொள்ள முடியும். சரோஜாதேவி, பத்மினி என்று மெயின்ஸ்ட்ரீமில் சென்று கொண்டிருக்கும் போதே எம்.என்.ராஜம், சி.ஐ.டி.சகுந்தலா என்று பிரத்யேக விருப்பப்பட்ட்டியலை விநோதமாய் வைத்திருந்த ரசிக சிகாமணிகளும் இருக்கத்தான் செய்தார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள், என் ஒன்று விட்ட சித்தப்பா ஒருவர் ஒய்.விஜயாவின் பரம பக்தர். அவர் நினைவாக, ஒய்.விஜயாவின் பெயருக்கு முன்னால் ’எம்’ எழுத்து சேர்த்து “மை.விஜயா" என்று வலது கையில் பச்சை எல்லாம் குத்திக் கொண்டு அலைந்திருக்கிறார். பின் காலம் போன காலத்தில் மனைவியிடம் செருப்படி வாங்கினாலும் கையோடு கலந்த உறவான ஒய்.விஜயா பெயரை மட்டும் அழிக்கவே முடியவில்லை.

தமிழர்களைப் போன்ற பொதுவுடைமைவாதிகளை ஏழேழு உலகத்தின் எந்த ஊர் ரசிகர்களிடமும் காண முடியாது. குஷ்பு இட்லி என்பது இன்று உலகறிந்த ப்ராண்ட். ஆனால் குஷ்பு பெயரில் இட்லிக்கடை வந்தததைப் போல இஷா கோபிக்கர் பெயரில் பணியாரக்கடையாவது துவங்கிவிட வேண்டும் என்ற வெறியில் இருந்தான் என் நண்பன் ஒருவன். ஆனால் அப்படிப்பட்ட உண்மைத்தமிழ் ரசிகர்களை எல்லாம் மதியாமல் அவர் ஹிந்திக்குச் சென்றதால் அந்த கொள்கையை கைவிட்டு விட்டான். இருந்தாலும் மனம் தளராமல் பிற்காலத்தில் ரம்பா ஆப்பக்கடை திறந்து அதில் ஸ்பெசல் ஐட்டமாக சிம்ரன் இடியாப்பத்தை இணைத்து ஆறுதலடைந்தான். சமூகக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், ரீமா சென்னையும் சிம்ரனையும் ரசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் நாம் தேவயானிக்களையும், கௌசல்யாக்களையும் வாழ வைத்துக் கொண்டிருந்தோம் என்பதே நம் மண்ணின் மரபு. ரேவதிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாயகிகளே இல்லை, எல்லாம் வெறும் ”கிளாமர் டால்ஸ்” தான் என்று அங்கலாய்த்துக் கொள்ளும் அங்கிள்கள் கூட அவ்வப்பொழுது சுவலெட்சுமிகளையும்,  கோபிகாக்களையும், ஜெனிலியாக்களையும் கண்டு திருப்தி அடைந்து கொள்கின்றனர். 

ஆனால், சரித்திரத்தில் தவறுகள் ஏற்படுவதும் அவ்வப்பொழுது நிகழத்தான் செய்கிறது. சர்வ லட்சணம் பொருந்திய கன்னிகள் கூட டொக்குப் படத்தில் அறிமுகமான காரணத்தினால் பரிச்சயம் இல்லாமலே தொலைந்து போகின்றனர். அதே சமயம் சாதா லட்சணம் பொருந்திய குமாரிகள் அவ்வப்பொழுது லைம்லைட்க்கு வந்து விடுவதும் உண்டு. மனமுவந்து சொல்லுங்கள், பிரியாமணி போன்ற ஒருவரைப் பார்க்கும் போது உங்களுக்குக் கனவெல்லாம் வருமா என்ன? இருந்தாலும் அவரும் திரைவானில் மின்னிக் கொண்டு தானே இருக்கிறார். ஓவியா போன்ற சுமார் ஃபிகர்களுக்கெல்லாம் தொடர்ந்து படங்கள் கிடைக்கிறது என்றால், நம் ரசிகர்களின் சகிப்புத்தன்மை எந்தளவு உயர்ந்திருக்கிறது என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

இப்படியாப்பட்ட கோடான கோடி ரசிகர்களுக்கு தங்கள் கனவுக்கன்னிகள் குறித்து சில மனக்கவலைகளும் இருக்கின்றன. அனுஷ்கா போன்ற தேவதை எல்லாம், இனியும் ஹீரோவின் சாகசத்தில் மயங்கி, “கெக்கே பிக்கே” என்று வழிந்து கொண்டு அவர்கள் பின்னால் அலைவதை ஒரு போதும் இந்த சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதிலும் எத்தனை காலம் தான் அவர் கால்களை மடக்கியபடியே நடனமாடுவது, நடப்பது. ஏன் ஹீரோக்கள் அருகில் உட்காருவது போல சீன் வைக்கும் போது கூட அவரை குணிந்தே தான் உட்கார வைக்க வேண்டியது. தனது இடுப்பளவு உயரம் கொண்ட நாயகர்களுடன் டூயட் பாட நேரும் அவலங்களை நினைத்து அனுஷ்கா கவலை கொள்கிறாரோ இல்லையோ அவரது ரசிகக்கண்மணிகள் பொங்கிப் பொங்கி அழுகிறார்கள். அதே போல,  கால்சீட் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அஞ்சலியை எல்லாம் புதுமுக பசங்களோடு டூயட் பாட வைப்பதை ஒரு போதும் இந்த சமுதாயம் மன்னிக்காது. அப்புறம், முன்பு லைலாவுக்கு இருந்த ”லூசாப்பா நீ” நோய் இப்போது ஜெனிலியாவுக்கு, தமன்னாவுக்கு, ஹன்சிகாவுக்கு என வேகமாக பரவுவதை நினைத்தும் ரசிகப்பெருமக்கள் துக்கம் கொண்டுள்ளனர். இதே போல ஆயிரம் ஆயிரம் மனமாச்சர்யங்களை தனக்குள் புதைத்துக் கொண்டு தான் ஒரு ரசிகன் தன் கனவுக்கன்னியை ஆராதிக்கிறான் என்ற உண்மையை உணர வேண்டும்.

கனவுக்கன்னிகளை கற்பனைக் கோட்டையில் வைத்து மகுடம் சூட்டி அழகு பார்க்கும் கடைக்கோடி ரசிகர்களின் கவலை போகுமா, நாயகிகள் திரையை ஆளும் நாள் வருமா... பொறுத்திருந்து பார்ப்போம்.

(கவர்ச்சிக்கன்னிகளின் வண்ணப்படங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்து உங்களுக்குப் பிடித்தமான நடிகையின் பெயரை டைப் செய்து எண்டர் கீயை அழுத்தவும் :) )

******

6 comments:

சத்யா said...

hello heroine paththi mattum sonna eppadi pa, hero paththiyum sollunga.

neeenga kavala paduratha mattum ezhutha koodathu, naanga kavala padura hero kaakavum ezhuthunaum. ok va boss? :) :)

தருமி said...

//சாதா லட்சணம் பொருந்திய குமாரிகள் அவ்வப்பொழுது லைம்லைட்க்கு வந்து விடுவதும் உண்டு.//

இதுதாங்க எனக்கும் புரியாத ஒருபெரும் விந்தையாக நிற்கிறது.

இன்னும் ஒரு சந்தேகத்தை இங்கே கேட்டிருக்கிறேன்.

அழகுன்னா என்ன ...?

Anonymous said...

சுவாரசிய மான பதிவு (இத .. இத மாதிரித்தான்)
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது இந்த விசயத்திலும் உண்மையே...எந்த மொழியாக நடிகை இருந்தாலும் கோடம்பாக்கம் கூட்டி வந்து "காட்ட" சொல்வதில் தொன்று தொட்டே தமிழனுக்கு அலாதி பிரியம். "காதல் மன்னன்" வகை ஹீரோயின்களையும் வரவேற்க தமிழன் தவறுவதில்லை....
ப்ரெஷ் ஆக மனதை எந்த நடிகை மனதை தொட்டாலும் இதயங்களில் நிறைத்து கனவுகளில் உரச தமிழன் தயங்குவதில்லை
("கும்கி" நாயகியை பதிவர் "ஜொள்ளு " விட்ட தை மறக்க முடியுமா!)
தமன்னா இடுப்பு ஹன்சிகவுக்கு இருந்தால் எப்படி இருக்கும் ?! என்று கனவுலகில் ஆராய்ச்சி செய்வதே தமிழனின் கிரியேட்டிவிட்டி க்கு சாட்சி.....
சமயத்தில் சில நடிகர்களின் மார்க்கெட்டை உயர்த்த சில நடிகைகள் "தாராளம்" காட்டிய வரலாறும் உண்டு (யுவராணி,சங்கவி, சுவாதி...)
ஸ்ரீதேவி , நமீதா பெயர்கள் இல்லாமல் பதிவு முழுமை பெறவில்லை என்றே நினைக்கிறேன்.
(அட்டகாசமாய் நடிகைகளின் போட்டோ போடாமல் , எங்களை தேட சொல்வது நியாயம் தானா ?)

-மதன்

Nagarajan S said...

முதல் வரியில் சொல்லப்பட்ட " ஹெவி வெயிட் லைட் வெயிட் " எல்லாம் நான் சொன்ன "கமல் படம்" போல என்பதன் பாதிப்பா ? தெரியல. உங்கள் பதிவில் உள்ள படி கதாநாயகிகள் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் கொள்ளும் பக்குவம் நம் தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் தான்.

kkv said...

இந்த மாதிரி லைட் வெயிட் எல்லாம் தென்திசைக்கு வேணுமா பாலா

சக்கர கட்டி said...

எழுத்தோடு எங்கள் நாயகிகளின் படங்களை இணைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்

Post a Comment