Monday, April 30, 2012

எளிய மனிதர்கள்


எந்த இடத்திற்கு சென்றாலும் 'வசீகரிக்கும் மையப் புள்ளியாக' சிலர் உடனே உருவெடுத்து விடுகின்றனர். தங்கள் ஆளுமையால் அந்த இடத்தை கலகலப்பாகவோ, உயிர்ப்புடனோ இவர்களால் மாற்றிவிட முடிகின்றது. மாறாக, தான் உண்டு தன் வேலையுண்டு என்று இன்னும் சிலர் இருக்கின்றனர். இந்த எளிய மனிதர்களுக்கு கதாநாயக பிம்பம் எல்லாம் கிடையாது. 

கல்லூரி சமயத்தில் தினமும் மாலை நேரங்களில் அருகிலுள்ள அநாதை ஆசிரமத்திற்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை தவம் போல் செய்து வருவான் தோழன் ஒருவன். ஆனால் வகுப்பில் உள்ள யாருக்கும் இது பற்றி எப்போதும் பறைசாற்றிக் கொண்டதே இல்லை. இறுதியாண்டு வளாக நேர்முகத்தேர்வின் போது குழுவுரையாடலில் ”நீங்கள் செய்த சமூகப்பணி” என்பது தான் தலைப்பு. நானெல்லாம் முதலாம் ஆண்டு படிக்கும் போது என்.எஸ்.எஸ். மூலம் மரம் நட்டதையெல்லாம் பெரிய சேவையாக கதையளந்து கொண்டிருக்க, அவன் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. வெளியே வந்து “ஏன்டா பாடம் நடத்துறத சொல்லல?” என கேட்டதற்கு “அதெல்லாம் விளம்பரம் செய்து வேலை வாங்கிக்கிற விஷயமாடா.. லூசுல விடு” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

மற்றொரு தோழி. நர்சிங் படிப்பென்றால் உயிர். ஆனால் பெற்றோர் பொறியியல் படித்தால் தான் கௌரவம் என்று வற்புறுத்தி அனுப்பி வைத்து விட்டனர். ஆனாலும் ஒரு குறையும் வைக்காமல் வகுப்பில் முதல் மாணவியாக வந்தார். வளாக நேர்முகத் தேர்வில் முதல் மாணவியாக தேர்வாகி மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தார். ஒரு வருடத்தில் பெற்றோர் ஏற்பாட்டில் உள்ளூரிலேயே மாப்பிள்ளை அமைய எந்த வருத்தமும் இன்றி பன்னாட்டு வேலையை விட்டு விட்டு உள்ளூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்து விட்டார். ”ஏன் பெரிய வேலைய விட்டுட்டு இங்க வந்த?” என்று கேட்டால் “அதனால் என்ன இந்த வேலையும் நல்லாத்தான் இருக்கு” என்று தெளிவாக பதில் சொல்கிறார்.

நம் பள்ளி நண்பனின் மூலமாக அவனது கல்லூரி நண்பன் அறிமுகமாகி அதன் மூலம் பூக்கும் நட்பு வித்தியாசமானது. முதலில் வாங்க, போங்க எனத் துவங்கி பின்பு வாங்கப்பா, போங்கப்பா ஆகி இறுதியில் நட்புலகின் அதிகாரப்பூர்வமான வாடா, போடா வில் வந்து நிற்கும். அப்படி பழகிய சிறிது காலத்திலேயே மனதுக்கு நெருக்கமானான நண்பன் ஒருவன். மற்ற நண்பர்களுடன் சேர்ந்து நாவல், கவிதை, கதை என்று பேசிக் கொண்டிருக்கும் போது மிகவும் அமைதியாக இருப்பான்.  பொழுது போகவில்லையென்றாலும் நண்பர்களின் முதல் இலக்கு அவன் தான். என்ன “ஓட்டினாலும்” ஒரு சிரிப்புடனே ஏற்றுக் கொள்வான். அவனுடன் பழக ஆரம்பித்த காலத்தில் தான், ஆனந்தவிகடன் 75ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “முத்திரைக் கவிதைகள்” இதழ் வெளியிட்டு மொத்தமுள்ள எழுபத்தைந்து கவிதைகளில் சிறந்த மூன்றை வாசகர்கள் வரிசைப்படுத்தி அனுப்பும் போட்டி அறிவித்திருந்தது. நாங்களும் அதில் கலந்து கொள்ள முடிவு செய்து கவிதைகளை தரம் பிரித்து வரிசைப்படுத்திக் கொண்டிருந்தோம். அப்போது அவனது கவிதை பற்றிய பார்வையையும், அவன் கொடுத்த விளக்கங்களும், உதாரணங்களும் சத்தியமாக் மூர்ச்சையடைய வைத்தது. “யாருடா நீ, இவ்வளவு நாளா எங்கருந்த !” என்று ஷாக்காகி கேட்டால், வழக்கமாய் சிரிப்பானே அதே மாதிரி தலை குனிந்து சிரிக்கிறான். இன்று எனக்கெல்லாம் தொடர்ச்சியாய் ஒரு இரண்டு வரி  எழுதிவிட்டாலே இருப்புக் கொள்ளாது. அதை வலைப்பூவில் பதிந்து, மறுபடி கூகுள் பிளஸ், ட்விட்டர், ஃபேஸ்புக் (அதிலும் தெரிந்தவர்களுக்கு ஒன்று, தெரியாதவர்களுக்கு ஒன்று) என்று மாற்றி மாற்றி ஒட்டிக் கொண்டிருக்கிறேன். அவன் எழுதியதை எல்லாம் டைரியிலேயே புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறான். ”உன் எழுத்து எல்லாம் பொக்கிஷம்டா, ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு தொடர்ந்து நிறைய எழுதுடா!” என்று சொன்னால் “போடா” என்று ஒற்றை வார்த்தைக்கு மேல் பேச மாட்டான். 

எங்கள் கல்லூரி அரசுக்கல்லூரியாதலால் ஆசிரியர் வந்து பாடம் நடத்துவது என்பது எப்போதாவது தான் நடக்கும். மற்ற சமயங்களில் வகுப்பில் செமினார், ஆப்டிட்யூட் டெஸ்ட், டம்ப்-சி, ட்ரஸர் ஹண்ட் என்று எதையாவது நடத்திக் கொண்டிருப்போம். எல்லாவற்றிலும் அடிநாதம் “கடலை” தான். இதிலெல்லாம் எந்த ஆர்வமும் காட்டாமல் தன்பாட்டுக்கு கடைசி பெஞ்ச்சில் தூங்கிக் கொண்டிருப்பான் நண்பன் ஒருவன். சுமாராக படித்து எப்போதும் பார்டரில் தாண்டிவிடும் கேரக்டர். படிப்புக்கும் தனக்கும் பெரிய சம்பந்தம் இருப்பதாய் எப்போதும் காட்டிக் கொள்ள மாட்டான். ஒரு நாள் ”howstuffworks" மாதிரி ஒவ்வொரு பொருளும் எவ்வாறு வேலை செய்கிறது என்று ஒவ்வொருவராக வந்து சொல்ல வேண்டும். இவன் வழக்கம் போல தூங்கிக் கொண்டிருந்தான். இவனை உற்சாகப்படுத்தி முன்னேற்றுவதாக நினைத்துக் கொண்டு நாங்கள் அவனை எழுப்பி ஏதேனும் ஒரு சிறிய பொருள் செயலபடும் முறையை விளக்கச் சொன்னோம். கொஞ்சம் மறுத்துப் பார்த்தான். தொடர்ந்து வற்புறுத்தவே கடகடவென வந்து “உலகம் எவ்வாறு இயங்குகிறது” என்று ”செல்” என்பதில் இருந்து ஆரம்பித்து “கேலக்ஸி” அது இது என்று ஒரு அரை மணி நேரம் தொடந்து விளக்கிக் கொண்டே சென்றான். அதுவும் சுவாரஸ்யமும் குறையாமல் நடுவில் ஒரு தொய்வும் வராமல். வகுப்பில் எல்லோரும் வாயடைத்துப் போனோம். மறுநாள் செமினார் எடுக்க எல்லோரும் அவனைப்பார்க்க அவனோ ஒளிவட்டத்தைத் தூக்கி தூரப்போட்டு விட்டு வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்தான்.

இன்று நினைத்துப் பார்த்தால், கல்லூரியே தன்னால் தான் மிளிர்கிறது என்று ஒளிவட்டம் காட்டியவர்ளுக்கு எந்த வித குறையும் இன்றியே இந்த எளிய மனிதர்களும் வாழ்கின்றனர். ஆனால் கதாநாயகர்களைப் போல் தன் பிம்பத்தைக் காத்துக் கொள்ள் எந்த வித குட்டிக்கரணமும் அடிக்கத் தேவையின்றி,  வெள்ளத்திற்கு தலைவணங்கும் நாணல் போல எளிமையான, வாழ்வை அதன் போக்கில் வாழ்பவர்களாக வாழ்கின்றனர். பூமி இந்த எளிய மனிதர்களால் தான் தடையற சுழல்கிறது போலும.

***

15 comments:

சத்யா said...

super a irukku..indha eliya manithargal yaarunum solliralaame!.. :)

சத்யா said...

கதாநாயகர்களைப் போல் தன் பிம்பத்தைக் காத்துக் கொள்ள் எந்த வித குட்டிக்கரணமும் அடிக்கத் தேவையின்றி, வெள்ளத்திற்கு தலைவணங்கும் நாணல் போல எளிமையான, வாழ்வை அதன் போக்கில் வாழ்பவர்களாக வாழ்கின்றனர். பூமி இந்த எளிய மனிதர்களால் தான் தடையற சுழல்கிறது போலும.

superb lines.........

தேவன் மாயம் said...

பாலகுமார்! நினைவுகளில் இன்னும் இருக்கும் அவர்கள் உண்மையில் மதிப்பிற்குரியவர்கள்!

Ramani said...

எளிய மனிதர்கள் குறித்த தங்கள் பதிவு
மிக மிக அருமை
மனம் கவர்ந்த் பதிவு
வாழ்த்துக்கள்

Anonymous said...

Super bala, yaaruppa intha periya thalainga ellam!! yaara irunthalum hats off!!
maha

சேலம் தேவா said...

Good one.

துளசி கோபால் said...

நிறைகுடம் தளும்பாது என்பதே உண்மை!

ஊருலே மழை பெய்ய இப்படி நாலு நல்ல மனிதர்களும் தேவை.

அவர்களுடன் நேரடியாகப்பழகிய நீங்கள் கொடுத்துவைத்தவர்!

Thirunavukkarasu said...

சிலர் வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது முகமூடியை மாட்டிக்கொண்டு கிளம்புகிறார்கள்.
சிலர் வீட்டிற்குள்ளும் முகமூடியுடனேயே திரிகிறார்கள்.
எந்நேரமும் இயல்பாய் இருக்கும் இவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.

அமைதிச்சாரல் said...

மதிப்பிற்குரியவர்கள் இந்த எளிய மனிதர்கள்..

சித்திரவீதிக்காரன் said...

நல்ல பதிவு. வேறு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. நன்றி.

ப.செல்வக்குமார் said...

உண்மை. ஒன்றும் தெரியாதவர் என்று நம்மால் கிண்டலடிக்கப்படுவர்களில் பலர் நம்மை விடக் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். அட்டகாசமான பதிவுங்க :))

வி.பாலகுமார் said...

அனைவருக்கும் மிக்க நன்றி !

இராஜராஜேஸ்வரி said...

வெள்ளத்திற்கு தலைவணங்கும் நாணல் போல எளிமையான, வாழ்வை அதன் போக்கில் வாழ்பவர்களாக வாழ்கின்றனர். பூமி இந்த எளிய மனிதர்களால் தான் தடையற சுழல்கிறது வாழ்த்துக்கள்.

Anonymous said...

// நிறைகுடம் தளும்பாது என்பதே உண்மை! //
" முழுவதும் தெரிந்தவன் பேச மாட்டான் , அரைகுறை தெரிந்தவன் பேசாமல் இருக்க மாட்டான் "

Quantity of Knowledge கும் Quality of Life கும் சம்பந்தம் இல்லையோ ?

-மதன்

தருமி said...

எப்டிப்பா இப்டியெல்லாம் எழுதுறீங்க ... நெஜமா .. அம்புட்டு நல்லா இருக்கு. உயிரோட்டமா இருக்கு.

வளர்க........

Post a Comment