Wednesday, April 4, 2012

இசை எங்கேயிருந்து வருது தெரியுமா?


இணையத்தில் இப்பொழுதெல்லாம் எங்கு பார்த்தாலும் இசைப்பகிர்வுகள் தாம். அதுவும் ஒரு வீடியோவைப் போட்டு விட்டு குறிப்பு வேறு. “14.43 ல இருந்து 14.44 நிமிஷத்துல ஒரு மேட்டர் வரும், அதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க், மனுஷன் என்னமா பின்னியிருக்கார்”. நானும் சரி ஏதோ “மேட்டர்” தான் போல என்று பொறுமையாக ஸ்ட்ரீம் ஆகும் வரை காத்திருந்து பார்த்தால் சரியாக 14.13 நிமிஷத்தில் ஒரு ரோஜாப்பூவை க்ளோஸ்-அப் இல் காண்பிக்கிறான். இதில் என்ன மேட்டர் என்று விசாரித்தால், அந்த இடத்தில் ஒரு ஆலாபனை வருதாம், அதில் தான் நம் இசை ரசிகர் சிலிர்த்தாராம். என்ன செய்ய, ம்யூட் செயத ஸ்பீக்கர்கள் கொண்ட கம்ப்யூட்டர் வாய்க்கப் பெற்ற நமக்கு இது போன்ற கொடுப்பினைகள் வாய்ப்பதில்லை.

எனக்கெல்லாம் ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் உண்டு. யார் சிறந்த இசையமைப்பாளர் என்ற சர்ச்சை வரும் போதெல்லாம், ஏன் எஸ்.ஏ.ராஜ்குமார் பற்றியெல்லாம் யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள் என்று. இதைப்பற்றி அலுவலக இசைக் குழு நண்பர் ஒருவரிடம் ஒரு முறை பேசியிருக்கிறேன். அன்றிலிருந்து அவர் என்னோடு பேசுவதை நிறுத்தி விட்டார். அது கூட பரவாயில்லை. அதன் பிறகு எங்கு என்னைப் பார்த்தாலும், கீழே கிடக்கும் கல்லை எடுப்பது போலவே பாவனை செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. சரி, “நாம பொதுவா ஒரு கருத்து சொன்னா பொறுக்காதே” என்று இருந்து விட்டேன்.

இதுவாவது பரவாயில்லை. இசை பற்றி தெரிந்த மக்கள் பேசும் போது நடுவில் மாட்டிக் கொள்ளும் தருணங்கள் இருக்கே... மிகவும் அபாயகரமானவை. நண்பர்கள் ”இந்த பாடல் இந்த ராகம், அது இதோட ஃப்யூஷ்ன், இது அதுல இருந்து அப்படியே யூடர்ன் அடிச்சு, இங்க வந்து அப்புறம் அங்க போகுது” என்று தான் துவங்குவார்கள். நானும் சரி, சினிமா பாடல் பற்றி தானே பேசுகிறார்கள். அப்படியே ஏதாவது கிசுகிசு கிடைக்குமென வாய் பார்த்துக் காத்திருப்பேன். அவர்களுக்கோ ஒரு அப்ரண்டீஸ் அகப்பட்டுக் கொண்ட குதூகலம். ஒவ்வொரு ராகமாக பிரித்து மேயத் துவங்கி விடுவார்கள். நானாவது வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கலாம். அதை விடுத்து “ஆமா, ரஹ்மான் கலக்குறாப்ல... ராஜா பக்கத்துல ஒரு பயலாவது நிக்க முடியுமா” என்று எதையாவது உளறித் தொலைத்தால் அதோடு செத்தேன். இப்படி, இசை விமர்சர்கள் வெறியர்களாக மாறி குதறி எடுத்த சம்பவங்களை வரலாறாக மாற்றி காலம் தன் அகத்தே பொதிந்து வைத்துள்ளது.

ராகம், தாளம், பல்லவி, அனுஹாஸன் என யாராவது ஆரம்பித்தாலே போதும், எனக்கு பிளஸ் டூவில் படித்த ஆர்கானிக் கெமிஸ்ட்ரி நினைவுக்கு வந்துவிடும். கார்பன், ஹைட்ரஜனுக்குள்ளே என்னன்னமோ முடிச்சுகளைப் போட்டு கட்டி வைத்திருப்பார்கள். அதையும் எங்க வாத்தியார் சீவி, சிடுக்கெடுத்து, அழகாக பிரித்து வைத்து மீண்டும் சுற்றி சுற்றி ஜிலேபி சுட்டுக் கொண்டிருப்பார். உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் எனக்குத் தான் தண்ணீர் தாகமெல்லாம் எடுக்க ஆரம்பித்து விடும்.  அது போல தான் மக்கள் ”லூட், இண்டர்லூட், ப்ரீலூட்” என்று உள்ளே நுழையும் போதே லேசா கண்ணில் பூச்சி பறக்கத் துவங்கி விடும். சுதாரித்துக் கொண்டு “ஜி, அப்படியே போய் டீ சாப்ட்டுட்டே பேசலாமே, பஜ்ஜி வேற சூடா போட்டுருப்பான்” என்று பேச்சை மாற்றி இழுத்துச் சென்று விட்டால் தப்பித்தேன். இல்லை.. இசைக்குள் நுழையும் போதே “கேட்” போட மறந்து விட்டேன் என்றால் அன்றைய மொழுது அவ்வளவு தான். இசை மும்மாரி பொழிந்து “தொப்புக்கடீர்” என்று முழுவதையும் நனைத்துவிடும்.

ஜோக்ஸ் அபார்ட், இசை என்பதை பாடல் வரிகளுக்கு தொந்தரவு செய்யாத துணை வடிவம் என்ற அளவிலேயே தான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பக்கவாத்தியங்கள் எதுவும் இல்லாத ஒரு நாட்டுப்புறப் பாடலை ரசிக்கும் அளவு ஒரு இசைக் கோர்வையை என்னால் ரசிக்க முடிவதில்லை. ஒரு பாடலில் உள்ள சொற்கள் செறிவில்லாத போது அதிலுள்ள இசை தலைவலியையே தருகிறது. சரி, இசையின் மொழியைக் கற்க என்ன தான் வழி? 

இசை என்பதை ஒரு ஃபார்முலா போல புரிந்து கொள்ள வேண்டுமா, அந்த ஃபார்முலா தெரியாதவர்களுக்கு எல்லா ஸ்வரங்களும் ஒன்று போலத் தான் தெரியுமா. இல்லை நான் உள்ளூர நம்புவது போல எல்லாம் மனம் சார்ந்த விஷயம் தானா. முன்முயற்சிகள், பயிற்சி எதுவுமின்றி ரசனை சார்ந்தே இசையை ரசிக்க முடியுமா? இல்லை எல்லோரும் சொல்வது போல நுன்னுணர்வு இல்லாத, தட்டையான சிந்தனை உள்ளவர்களுக்கு இசையின் மொழி புரியாது என்ற உண்மையை(?) நான் ஒப்புக் கொண்டு ஒதுங்கிக் கொள்வதைத் தான் இந்த சமுதாயம் விரும்புகிறதா?

******

8 comments:

ஸ்ரீ said...

ரசனை இருந்தால் போதும் ரசிக்கலாம் என்கிற கட்சி நான். எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது,ஏனெனில் பிடிக்காது. ஆனால் அதனடிப்படையில் அமைந்த பாடல்களை இது என்ன ராகம் என்றெல்லாம் யோசிக்காமல் ரசிப்பேன்.

Anonymous said...

எந்த மொழியும் இல்லாத வெறும் தாள மற்றும் கம்பி இசைக்கருவிகள் எழுப்பும் ஒலிகள் உங்களை தலையாட்ட வைத்திருக்கும். அது நாட்டுபுற தப்பாக இருந்தாலும், மேற்கத்திய பியானோ இசையாக இருந்தாலும் அர்த்தமில்லா இசைக்கு வசமாகாதோர் யாருமிலர்! குழந்தையின் தாலாட்டு முதற்கொண்டு இசைக்கு எந்த மொழி சார்ந்த அர்த்தமும் இல்லாமல் தலையாட்டும் கூட்டத்தில் அத்துணை மனிதர்களும் சேர்த்திதானே?

chinnapiyan said...

இசைக்கு மயங்காதார் உண்டோ? எந்த விதமான இசையாக இருந்தாலும், நம்மை அறியாமல் ஈர்க்கப்பட்டு லயித்து விடுவதற்கு ஞானம் தேவையில்லை. மற்றவகளைவிட, சாஸ்திரிய சங்கீதத்தை சிலாகிப்பது என்பது ஒரு பேஷனாகி, தன் மேதை தனத்தை வெளிப்படுத்துவதற்காகவே சிலர் உலவி வருகிறார்கள். குறிப்பாக கர்நாடகசங்கீதம். சபாவில் உட்க்கார்ந்து கொண்டு அளவுக்கு மீறி தலையையும் கைகளையும் அசைத்துக்கொண்டு பக்கத்தில் இருப்பவர்களை பார்த்துக்கொண்டு, அவர்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டு செய்யும் சேஷ்டைகள் பார்க்க சகிக்காது. மற்றவர்கள் எல்லாம் ஞானசூனியம் என்பதுபோல் நடந்து கொள்வதில் அவர்களுக்கு ஒரு அலாதி பிரியம். எண்ணெய் கேட்டால் அவர்களும் ஒரு சைக்கோ என்பேன்.
நன்றி அருமையாக சொல்லியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.
("சீவி, சிடுக்கெடுத்து,சீவி, சிலுக்கெடுத்து," -->

Anonymous said...

இசையின் மொழியை எப்டி கற்க முடியும்? ....இசைக்குத்தான் மொழியே கிடையாதே !
எல்லாமே "சப்த ஸ்வரங்கள்" என்று கொள்ளலாம்....வேண்டுமென்றால், எல்லாம் "அதிர்வெண்களின் சேஷ்டை " என்றும் சொல்லலாம்....சகல சத்தங்களையும் நிரவியதாகவும் சொல்லலாம்....
இசைஞானி இளையராஜா ஒரு பேட்டியில் சொல்ல கேட்டது "இருக்கிறது ஏழு ஸ்வரம் ,,அத மாத்தி மாத்தி போட்டு உங்கள ஏமாத்துறதுதான் என் வேலையே ..."

// பக்கவாத்தியங்கள் எதுவும் இல்லாத ஒரு நாட்டுப்புறப் பாடலை ரசிக்கும் அளவு ஒரு இசைக் கோர்வையை என்னால் ரசிக்க முடிவதில்லை. ஒரு பாடலில் உள்ள சொற்கள் செறிவில்லாத போது அதிலுள்ள இசை தலைவலியையே தருகிறது.//

எனக்கு ஏழாம் அறிவு படத்தில் வரும் "சைனீஸ்" பாடல் கூட பிடித்திருக்கிறது ... அந்த சைனீஸ் வார்த்தைகளை , தமிழிலிருந்து சைனீஸ்-ஆக மாற்றாமல் ,தமிழில் பாடியிருந்தால் மொக்கையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. .....இது ஒவ்வொரு ஆட்களை பொறுத்து மாறுபடும் போல...

என்னை பொறுத்தவரையில் , என்னுடைய Thumb Rule "எதை, எப்படி, எங்கே வைத்தால் அழகாக இருக்குமோ , அதுவே சிறந்தது "
இந்த "அழகு" க்கான வரையறை பாலா விற்கு வேறு மாதிரியாக இருக்கலாம்....(பொண்ணுங்களை சைட் அடிப்பது மாதிரி தான் பாஸு !)

(chinnapiyan எழுதியுள்ள கமெண்ட் இல் // " சைக்கோ" // விஷயம் சரிதானோ என்று தோன்றுகிறது )

இசையால் இன்புறுக !!!

-மதன்

Anonymous said...

இசைக்கான ஒரு புதிய வடிவத்தை சற்று முன் புதிய தலைமுறை தொலைகாட்சியில் பார்க்க நேர்ந்தது! பார்த்த மாத்திரத்தில் உங்கள் பதிவு நினைவுக்கு வரவே இதை எழுதுகிறேன்! சேவாலயா முரளிதரன் பேசி முடித்ததும், ஒரு விளம்பரம் ஒளி பரப்பினார்கள்! அது நமது தேசிய கீதம்! கீதம் ஒலித்த விதம், அதை படமாக்கிய விதம் இரண்டிலும் நெஞ்சடைத்து கண்ணீர் விட்டேன். (நிற்க, அய்யா சாமி என்று அலறி பிச்சை கேட்கும்போது வராத கண்ணீர் ஒரு பத்து பைசாவோ அல்லது பத்து ரூபாயோ தன் தகுதிக்கேற்ப மற்றும் தேவைக்கேற்ப பிச்சை போடும்போது, பிச்சை போடும் கனிந்த உள்ளத்திற்காக பட்டென்று துளிர்க்கும் கண்ணீர் எனக்கு, அதனால் என் கண்ணீர் ஒன்றும் காஸ்ட்லி இல்லை எனவும் கொள்ளலாம்!).

விரிவான முன்னுரை, விஷயத்திற்கு வருகிறேன்!

ஜன கன மன பாட்டு இசைக்கருவி மூலம் இசைத்தார்கள். மிக மென்மையான இசைக்கருவிகள், தேர்ந்த கைகள் மீட்ட சொர்க்கமாக இருந்தது! இசை இசைக்குமுன் ஒரு பெரிய பள்ளி. மாணாக்கர் முழுவதும் அசெம்ப்ளியில் ஒன்று கூடி நிற்க எங்கோ சொட்டு சொட்டென்று நீர் சொட்டுவது போல காலடி சத்தம் ஒரு சிறுமி ஓடி வந்து அசெம்ப்ளியில் நிற்க இசை இசைக்க ஆரம்பிக்கிறது!

ஓகே ஓகே, ஓவர் பீடிகை போதும் என்கிறீர்களா, இதோ முக்கிய விடயம்! அது காத்து கேளாதோர் பள்ளி!

ஒவ்வொரு குழந்தையும் ஒத்திசைவுடன் நாட்டுப்பண்ணை பாவனை செய்ய (முக்கியமாக மராட்டியருக்கு அந்த சிறுவன் காட்டும் முக பாவத்தில் தான் எத்துனை வீரம்?) ஒத்திசைவு கூட இசைவு தானே? அதாவது ஒரு இசை தானே என்று தோன்றியது! ஆக இரு மனத்தின் ஒத்திசைவான காதல், இருவரின் சிந்தனா ஒத்திசைவான நட்பு என்று உறவுகள் கூட இசையென்று தோன்றியது!

நீங்கள் சொன்ன ஏழு சுவர இசைக்கும் நான் எழுதி இருக்கும் இசைக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக எனக்கு படவில்லை! செவி புல இசை போலவே இசைவுகள் அனைத்தும் மனதை நிறைப்பவை! அர்த்தமில்லா வார்த்தைகள் நிச்சயம் ஒரு மனிதனை இசைக்க வல்லவையாக இருக்க முடியும்! சரிதானே?

வி.பாலகுமார் said...

ரசனையை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி.

மொழியில்லாத இசையை, அதன் அதிர்வை, சிலிர்ப்பை எப்போதும் ரசிக்கவே முடிகிறது. இங்கே நண்பர்கள் சொன்னது போல பெயர் தெரியாத ஒரு வாத்திய மீட்டலும் சில நிமிடங்களேனும் மெய்மறக்க வைப்பதும் உண்மை தான்.

நான் கேட்க விரும்பியது, இந்த இசைப்பண்டிதர்கள் இசையின் சூட்சமங்களை சிலாகிக்கும் போது, அதைப் புரிந்து கொள்வது எப்படி.. அது சரி இசையை ஆராய்ந்து என்ன செய்ய்ப் போகிறோம். ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வது தான் இசைக்கு நல்லது :)

ப.செல்வக்குமார் said...

இசை எங்கிருந்து வருதோ அது தெரியாதுங்க. ஆனா உங்க எழுத்து நடை சான்சே இல்லை. அட்டகாசம்.

//கார்பன், ஹைட்ரஜனுக்குள்ளே என்னன்னமோ முடிச்சுகளைப் போட்டு கட்டி வைத்திருப்பார்கள். அதையும் எங்க வாத்தியார் சீவி, சிடுக்கெடுத்து, அழகாக பிரித்து வைத்து மீண்டும் சுற்றி சுற்றி ஜிலேபி சுட்டுக் கொண்டிருப்பார். உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் எனக்குத் தான் தண்ணீர் தாகமெல்லாம் எடுக்க ஆரம்பித்து விடும். //

ரொம்ப நல்லா சிரிச்சேன் :)))

தருமி said...

கடைசிப் பத்தியை நான்’செகண்ட்’ பண்றேன்.

Post a Comment